Published : 03 Apr 2017 04:24 PM
Last Updated : 03 Apr 2017 04:24 PM

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெ.மரணம் தொடர்பாக ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தைச் சேர்த்து விசாரணை: ஸ்டாலின் பேச்சு

திமுக ஆட்சிக்கு வந்தால் அமைக்கப்படும் விசாரணை கமிஷனில் ஜெயலலிதா மர்ம மரணத்தில் சசிகலா குடும்பம் மட்டுமல்ல, ஓ.பன்னீர்செல்வத்தையும் சேர்த்து விசாரணை நடத்தப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் திங்கட்கிழமை நடைபெற்ற மீனவர்கள் சந்திப்பில் பேசியதாவது:

''இந்த இடைத்தேர்தலில் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகளை பார்க்கிறோம். ரொம்ப கெடுபிடி செய்கிறார்கள், மிகவும் கண்டிப்பாக இருக்கிறார்கள். இந்த நிலை சட்டப்பேரவை தேர்தலில் இருந்திருந்தால் திமுகதான் ஆட்சியில் இருந்திருக்கும். ஆனால், இன்றைக்கு தேர்தல் ஆணையத்தை பாராட்டக்கூடிய வகையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இதே முறையை 2016 தேர்தலிலும் கடைபிடித்திருந்தால் இப்படி ஒரு நிலை இப்போது வந்திருக்காது. சரி பரவாயில்லை, போனது போகட்டும். இப்போதாவது தேர்தல் ஆணையம் அக்கறையாக தனது கடமையை ஆற்றுவது உள்ளபடியே பாராட்டுக்குரிய ஒன்று. இது தொடர வேண்டும். ஏதோ இன்றோடு அதை முடித்துவிடக் கூடாது. 15-ஆம் தேதி வரையில் இதே நிலையை தேர்தல் ஆணையம் கடைபிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.

அப்படி கடைபிடிக்கும் நேரத்தில் நிச்சயமாக, உறுதியாக சொல்கிறேன், நம்மை எதிர்த்து நிற்கக்கூடிய ஆளுங்கட்சி வேட்பாளர்கள் இரண்டு அணிகளாக இருக்கிறார்கள். ஆக, அந்த இரண்டு அணியும் நிச்சயமாக, உறுதியாக டெபாசிட் தொகையை கூட பெற முடியாத ஒரு நிலைதான் உருவாக போகிறது. இது வெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டுமல்ல. வரவிருக்கின்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் முழுக்க இதுதான் எதிரொலிக்க போகிறது. அந்த அளவுக்கு மக்களிடத்தில் ஒரு நல்ல மாற்றத்தை நாம் காணுகிறோம்.

ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து நிற்கிறது. இரண்டு அணிகளாக பிரிந்து நின்றாலும் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தவர்கள்தான். அப்போது ஒன்றாக இருந்தபோது, எல்லா தரப்பு மக்களும் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிலே குறிப்பாக, மீனவர் சமுதாயம் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது, அந்த மர்மத்துக்குக் காரணமானவர்களில் மிக மிக முக்கியமான குடும்பம், சசிகலாவினுடைய குடும்பம், அது ஒரு அணி. ஆனால், அந்த மரணத்தை பற்றி 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது, சிகிச்சை பற்றி வாய் திறக்காத, 64 நாட்கள் முதல்வராக இருந்தபோது வாய் திறக்காத ஒரு தலைவர் தான் ஓபிஎஸ். அவர் தலைமையில் ஒரு அணி, இந்த தேர்தல் களத்தில் நிற்கிறது.

இப்படி இன்றைக்கு இரண்டாக பிரிந்திருக்கக் கூடியவர்கள், அப்போது ஒன்றாக இருந்தபோது இந்த நாட்டை பற்றி கவலைப்படவில்லை. மக்களை பற்றி கவலைப்படவில்லை. மீனவர் சமுதாயத்தின் குறைபாடுகள் குறித்து சிந்தித்து பார்க்கவில்லை. இப்போது இந்த தேர்தலில் எப்படியாவது ஆர்.கே.நகர் தொகுதியில் இருக்கும் இந்த மக்களை ஏமாற்றிவிடலாம் என்று திட்டமிட்டு அந்த பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நான் கேட்கிற ஓரே கேள்வி, ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது, அவரது உடல்நலனைப் பற்றி ஏதாவது, கொஞ்சமாவது வாய் திறந்து ஓபிஎஸ் பேசியதுண்டா? 75 நாட்கள், அதன்பிறகு 64 நாட்கள் முதல்வராக இருந்திருக்கிறார். அப்போதாவது அவர் வாய் திறந்து ஜெயலலிதாவுடைய சிகிச்சையில் இருக்கக் கூடிய பிரச்சினைகள், மரணத்தில் இருக்கக் கூடிய மர்மத்தை பற்றி நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று வாய் திறந்து சொன்னதுண்டா? கிடையாது.

64 நாட்கள் முதல்வராக இருந்தபோது, நாட்டில் என்ன பிரச்சினை, மீனவர்களுக்கு என்ன பிரச்சினை, விவசாயிகளுக்கு என்ன பிரச்சினை, மாணவர்களுக்கு என்ன பிரச்சினை, கல்வியில் என்ன பிரச்சினை என்பது குறித்தாவது சொன்னாரா? அதுவும் கிடையாது. தன்னுடைய முதல்வர் பதவியை எப்படியாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதில்தான் அவர் அக்கறை எடுத்துக் கொண்டாரே தவிர, வேறொன்றும் கிடையாது.

நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்றது. அந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்றதற்கு இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் ரீதியாக அந்தப் பிரச்சினையை நாம் கையாண்டிருந்தாலும், அது முழுமையாக வெற்றி பெற்றதற்கு நாட்டிலுள்ள இளைஞர்களும், மாணவர்களும் தான் காரணம் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஆனால், அப்படிப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற நேரத்தில், அங்கிருக்கக் கூடிய மாணவர்களை, இளைஞர்களை கலைக்க வேண்டுமென்று தடியடி பிரயோகம் நடத்தி, அவர்கள் சிதறி ஓடிய நேரத்தில், கடற்கைரை அருகில் திருவல்லிக்கேணி அருகில் உள்ள ஐஸ் ஹவுஸ் மீனவர் குடியிருப்புப் பகுதியில் தஞ்சமடைந்தார்கள்.

அங்கிருக்கக்கூடிய மீனவ சமுதாயத்தை சேர்ந்த தாய்மார்களும், பெரியவர்களும்தான் அந்த இளைஞர்களை காப்பாற்ற வேண்டுமென்று அடைக்கலம் தந்தார்கள். அடைக்கலம் தந்த காரணத்தாலேயே அங்கிருந்த மீனவர்களெல்லாம் காயப்படுத்தப்பட்டார்கள், தடியடிக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஏன், ஒரு மீன் மார்க்கட்டே கொளுத்தப்பட்டது, பல வீடுகள் கொளுத்தப்பட்டன.

அப்படி கொளுத்தப்பட்ட காட்சிகளையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள், வாட்ஸ்அப்பில் வந்தது. ஒரு போலீஸ் அதிகாரியே, கையில் ஒரு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு போய் வாகனங்களை கொளுத்தும் காட்சிகள் எல்லாம் வாட்ஸ்அப்பில் வந்தது. இப்படிப்பட்ட கொடுமைகள நடந்த நேரத்தில் முதல்வராக இருந்தது ஓ.பன்னீர்செல்வம்தான். அவர்தான் இன்றைக்கு ஒரு போலி வேஷத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

கடலில் எண்ணெய் கலந்த காரணத்தால் என்னென்ன கொடுமைகள் நடந்தது, மீன்பிடிக்க நம்முடைய தோழர்கள் செல்ல முடியவில்லை. அது ஒருபக்கம் இருந்தாலும், அதனால் ஏற்படக் கூடிய நோய்கள், இங்கு ஒரு சகோதரர் அவருடைய மகனுக்கு முகமெல்லாம் மாறிப் போயிருக்கிறது என்று வேதனையோடு குறிப்பிட்டுச் சொன்னார். அதற்குக் காரணமாக இருந்த தனியார் கம்பெனியிடம் முறையிட்டு வாதிட்டு, போரிட்டு நஷ்ட ஈடு தொகையாவது முறையாக முதல்வராக இருந்தபோது பன்னீர்செல்வம் பெற்றுத்தந்தாரா என்று எண்ணிப் பார்க்கிறபோது, உள்ளபடியே நமக்கு வேதனையாக இருக்கிறது.

ஆனால், இன்றைக்கு உத்தமர் வேடம் போட்டுக் கொண்டு, ஓ.பன்னீர்செல்வமும், தினகரன் வேட்பாளராக இருக்கக்கூடிய அந்த அணியும் இப்போது இந்த ஆர்.கே.நகர் தொகுதியில் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். நான் கேட்கிறேன், ஏற்கெனவே ஐந்து வருடங்கள் அவர்கள்தான் ஆட்சியில் இருந்தார்கள். இப்போதும் தொடர்ந்து அவர்கள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். ஆறு வருடங்கள் ஆகப்போகிறது. இந்த ஆறு வருடங்களில் மக்களின் ஏதாவதொரு பிரச்சினைகளுக்கு பரிகாரம் காணப்பட்டிருக்கிறதா?

அந்த ஐந்து வருடங்களில் ஓ.பி.எஸ் ஒருமுறை முதல்வராக இருந்திருக்கிறார், நீதிமன்றம் தந்த அந்த தீர்ப்பின் அடிப்படையில் ஜெயலலிதா பதவி விலகி, ஓபிஎஸ் ஒரு வருடம் முதல்வராக இருந்தார். அதற்குபிறகு, ஜெயலலிதா முதல்வராக இருந்த நேரத்தில் இரண்டாம் இடத்தில், நிதியமைச்சராக இருந்தார்.

முதல்வராக ஒருவருடமும், அதிமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம், இரண்டாம் இடத்தில் இருந்தவர் ஓபிஎஸ். ஆனால், இப்போது 2016ல் ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா மறைந்ததற்குப் பிறகு முதல்வராக இருந்திருக்கிறார். ஓபிஎஸ் அந்தப்பதவியில் இருந்தபோது மக்களுக்கு சாதித்தது என்ன என்ற கேள்வியைதான் நான் கேட்க விரும்புகிறேன். இப்போது ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். அதுதான் பெரிய வேடிக்கையாக இருக்கிறது. எப்போதும், பொதுத்தேர்தல் நேரத்தில்தான் ஆளுங்கட்சியாக இருக்கக் கூடியவர்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள்.

ஆனால், இப்போது தேர்தல் அறிக்கையில் என்ன என்ன செய்யப்போகிறேன் என்று சொல்கிறார்கள். உள்ளபடியே, அதையெல்லாம் செய்தால் மகிழ்ச்சிதான். பாராட்டுகிறோம், வரவேற்கிறோம். ஆனால், ஏற்கெனவே 2011 ஆம் ஆண்டு தேர்தல் நடந்தபோது ஒரு தேர்தல் அறிக்கையையும், 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது ஒரு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார்கள். அதுமட்டுமல்ல, சட்டமன்றத்தில் 110 என்ற விதியைப் பயன்படுத்தி பல வாக்குறுதிகள் தந்தார்கள். அவற்றில் ஒன்றாவது இன்றைக்கு நடந்துள்ளதா? என்பதை தயவுசெய்து நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

திமுக ஆட்சியில் 1996-2001 வரை மேயராக இருந்தபோது, முதன் முதலில் மேயர் பொறுப்பேற்று நான் பார்க்க வந்த பகுதி எதுவென்றால், இந்த ஆர்.கே.நகர் பகுதிதான். காரணம், வெளிப்படையாக சொல்வதென்றால், எப்போதுமே சென்னையை பொறுத்தவரை தெற்கு பகுதி நன்றாக உள்ளது, வடக்கு பகுதி சரியாக இல்லை என்று சொல்வார்கள். அந்த வட சென்னையிலும் எந்தப் பகுதி மிகவும் மோசமாக இருக்கிறது, மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது என்று கேட்டால், இந்த ஆர்.கே.நகர் பகுதிதான். அதையெல்லாம் உணர்ந்த காரணத்தால் தான், நான் முதல் முதலாக மேயராக பொறுப்பேற்றவுடன் இந்தப் பகுதிக்கு வந்தேன். இப்படி, திமுக ஆட்சி இருந்தபோது, தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, இந்த ஆர்.கே.நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் எவ்வளவோ பணிகளை செய்து முடித்திருக்கிறோம்.

ஆனால், இன்றைக்கு ஆளும் கட்சியாகவும் அதிமுக தான் உள்ளது, மாநகராட்சியும் ஆளும் கட்சியிடம் தான் உள்ளது. மக்கள் பிரச்சினை ஏதாவது தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை.

ஆகவே, நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புவது, இந்த தேர்தலில் திமுக உடனே ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை, போகிற போக்கைப் பார்த்தால் விரைவில் வந்து விடும் என்பது வேறு. அந்த சூழ்நிலை இன்றைக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், இரு அணிகளாக பிரிந்திருப்பவர்கள், எந்த நேரத்தில் எது மாறும் என்பது, நீங்களே சொன்னீர்கள், 5 பேர் தான் வித்தியாசம் என்று, நாம் நினைத்தால் ஒரே நிமிடத்தில் முடித்துவிடலாம் என்பது வேறு. ஆனால், நாம் அப்படி நினைக்கவில்லை.

காரணம், தலைவர் கருணாநிதியின் கொள்கை என்னவென்றால், 'கொல்லைப்புறமாக நாம் ஆட்சிக்கு வருவதை நாம் என்றைக்கும் விரும்பியது கிடையாது. மக்களை சந்திக்க வேண்டும். மக்களுடைய ஆதரவைப் பெற வேண்டும். மக்கள் மூலமாக ஆட்சிக்கு வர வேண்டும். அப்போது தான் பணியாற்ற முடியும், மக்களுக்கான திட்டங்களை தீட்ட முடியும்' என்பதுதான். அந்த நிலையில் தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

திமுக ஆட்சிக்கு வந்தால் சசிகலா குடும்பத்தை மட்டுமல்ல ஓபிஎஸ்-ஐயும் சேர்த்து விசாரணை கமிஷன் அமைக்கும் இடத்திற்கு திமுக வரவிருக்கிறது.

அரசியலில் எவ்வளவோ மாறுபாடுகள், வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கையில் மாறுபடலாம். எதிர் கட்சியாக இருந்து அவர்களுடைய குறைகளை நாம் சொல்கிறோம். அவர் சாதாரணமான ஆளா? நமக்கும் சேர்த்து அவர்தான் முதல்வர் ஜெயலலிதா. அவருடைய மரணத்திலேயே மர்மம் உள்ளது, உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. அவருக்கு என்னவித சிகிச்சைகள் கொடுத்தார்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாத நிலை.

ஆக, இந்த நிலையில் இருக்கக்கூடியவர்கள்தான், ஒன்றாக இருந்தபோது இதுகுறித்து வாய் திறக்காதவர்கள்தான், இப்போது இரண்டாக பிரிந்ததற்கு பிறகு, அவர்கள் ஒரு கபட நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே, ஜெயலலிதா மறைவுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று சொன்னால், அதற்கு காரணமாக இருப்பவர்கள் இப்போது இரண்டாக பிரிந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் ஒரு தண்டனை வழங்க வேண்டும் என்று சொன்னால், பினாமி ஆட்சியாக இருக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று சொன்னால் நம்முடைய வேட்பாளர் மருதுகணேஷை நீங்கள் வெற்றிபெறச்செய்ய வேண்டும்.

எல்லா பத்திரிகைகளையும் பார்த்தீர்கள் என்றால், முதலிடத்தில் தினகரனை போடுகிறார்கள். இரண்டாவது இடத்தில் ஓ.பி.எஸ்-ஐ போடுகிறார்கள், மூன்றாவது இடத்தை நமக்கு போடுகிறார்கள். நான் சொல்கிறேன், தேர்தல் முடிவில் நாம் முதலிடத்துக்கு வரப்போகிறோம்.

2-வது இடத்துக்கு யார் வரப் போகிறார்கள் என்பது தெரியாது. 3-வது இடத்துக்கும் யார் வரப் போகிறார்கள் என்பது தெரியாது. முதலிடத்துக்கு நாம் வரப்போகிறோம். இப்போது பார்த்தீர்கள் என்றால், அந்த இரண்டு பேருக்கும் என்ன போட்டி என்றால், இரட்டை இலை சின்னத்தை எப்படி காப்பாற்றுவது, கட்சியை யார் கைப்பற்றுவது என அந்த போட்டிதான்.

அதிமுக யார் கையில் இருக்கிறது என்பதற்கு கட்சித் தேர்தல்தான் சரி. கட்சியில் தேர்தல் வைத்து யார் தலைவராக இருப்பது, யார் கையில் கட்சி இருப்பது என்று. ஏதோ அங்கு கட்சித் தேர்தல் நடக்கிறது. ஆனால், இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆர்.கே.நகர் மக்கள் தெளிவாக இன்றைக்கு ஒரு முடிவெடுத்து ஒரு சிறப்பான நிலையில் இந்த தேர்தல் முடிவை வழங்க காத்திருக்கிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால் உங்களுடைய கோரிக்கைகள் எல்லாம், நிறைவேற்றித் தருவார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும். அதே நம்பிக்கையோடு திமுக வேட்பாளர் மருது கணேஷை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என்று ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x