Published : 16 Jul 2015 12:28 pm

Updated : 13 Jun 2017 17:50 pm

 

Published : 16 Jul 2015 12:28 PM
Last Updated : 13 Jun 2017 05:50 PM

தமிழக கட்சிகளின் சமூக வலை வியூக அரசியல் களம்

அச்சு ஊடகம், காட்சி ஊடகம் என எத்தனை இருந்தாலும் சமூக வலைத்தளங்களின் வீச்சு அசாத்தியமானது என்பதை உணர்ந்திருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள் என்றே சொல்லலாம்.

அதன் வெளிப்பாடுதான், திமுக இணையதளம் புதுப்பிக்கப்பட்டது, பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் புதிய இணையதளம் தொடங்கியது, பாமக நிறுவனர் ராமதாஸ் ஃபேஸ்புக், ட்விட்டரில் இணைந்தது, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் ஃபேஸ்புக் பக்கத்தில் தகவல் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுவது, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஃபேஸ்புக், ட்விட்டரில் கணக்கு தொடங்கியிருப்பது...என எடுத்துக் கொள்ளலாம்.


இந்த பார்வையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த்துள்ளது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 'தி இந்து'வுக்கு அளித்த பேட்டி. அப்பேட்டியில் அவர் "மக்கள் மன்றத்தில் எங்களை பிரபலப்படுத்திக் கொள்ள முழுக்க முழுக்க பத்திரிகைகள், தொலைக்காட்சிகளை மட்டுமே சார்ந்து இருக்க முடியாது. சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவர்கள், இளைஞர்கள், சமுதாயத்தின் படித்த நபர்களிடன் எங்கள் கருத்துகளை எடுத்துச் செல்ல முடிகிறது. மேலும் மக்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பதையும் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது" எனக் கூறியுள்ளார்.

2008-ல் திமுக இணையதளம் தொடங்கியது. >www.dmk.in என்ற இந்த இணையதளம் புதுப்பிக்கப்பட்டு திமுக தலைவர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. திமுக இணையதளத்தை மேம்படுத்து கைதேர்ந்த வெப்மாஸ்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களே திமுக தலைவர் கருணாநிதிக்கும், பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்துக் கொடுத்தனர்.

மாற்றம், முன்னேற்றம் என்ற கொள்கையோடு களம் இறங்கியிருக்கும் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் >www.anbumani4cm.com என்ற இணையதளத்தை தொடங்கியிருக்கிறார்.

மாநிலத்தில் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்று சக்தியாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் அன்புமணி தனது இணையதளத்தை துவக்கி வைத்து பேசியபோது, "தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும். அந்த மாற்றத்தை என்னால் கொடுக்க முடியும். எங்கள் மீது சில குறைகள் சொல்லப்படுகின்றன. அவற்றை திருத்திக் கொள்வோம்" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "சமூக வலைத்தளங்களை இனியும் ஒதுக்கிவிட்டு அரசியல் செய்யமுடியாது. சமூகவலைத்தள பதிவுகளை பிரதான ஊடகங்கள் செய்திக்காக பயன்படுத்திக் கொள்ளும் வேளையில், சமூக வலைதளங்களை இனியும் ஒதுக்க முடியாது. பிரதான ஊடகங்கள் நமது அறிக்கைகள், பேச்சுகளில் பெரும்பாலும் 10% மட்டுமே பயன்படுத்துகின்றன. ஆனால், சமூக வலைத்தளங்கள் வாயிலாக மட்டுமே நம் கருத்துகள் முழுமையாக நம் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் சென்றடைகிறது" என்றார்.

நிபுணர்களை நாடும் கட்சிகள்:

சமூக வலைத்தளங்களில் தங்கள் பங்கினை மேம்படுத்தவும், தங்களுக்கான பக்கத்தை (பேஜ்) நிர்வகிக்கவும், தங்கள் இணையதளத்தில் இடம்பெறும் கருத்துகளை மேலாண்மை செய்வதற்கும் தொழில்முறை நிபுணர்களையே அரசியல் கட்சிகள் நாடுகின்றன.

அந்தவகையில், திமுக தலைவர் கருணாநிதியின் இணையதளத்தை எஸ்.சுரேஷ், என்.நவீன் என்ற இருவர் நிர்வகித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்தை ஒருங்கிணைத்து நிர்வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களின் வீச்சு எத்தகையது என்பது குறித்து நவீன் கூறும்போது, "எதிர்மறை கருத்துகளை ஈடுகட்ட சமூக வலைத்தளங்கள் அரிய மேடை. 2ஜி ஊழல் குறித்த உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துரைக்க திமுக-வுக்கு மிகப் பெரிய உதவியாக சமூக வலைத்தளங்கள் இருந்திருக்கின்றன" எனத் தெரிவித்தார்.

பாமகவை பொருத்துவரை கட்சியின் ஐ.டி. பிரிவினர் அன்புமணி ராமதாஸின் இணையதளத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளனர் எனக் கூற வேண்டும்.

'இணைய' தலைமுறை

எப்போது இணையத்தோடு இணைந்திருக்கும் இளைய தலைமுறையினர் அரசியல் மாற்றத்துக்கு எவ்வகையில் வித்திடுகிறார்கள் என்பது குறித்து கருத்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ், "தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை குடும்பத் தலைவர் முடிவு செய்யும் காலம் மலையேறிவிட்டது.

தற்காலத்தில், வீட்டின் இளைஞர்களே இத்தகைய கருத்துகளை வடிவமைப்பவராக உள்ளனர். இணையத்தில் இணைந்திருக்கும் இந்த இளைய தலைமுறையினரை அடைய சமூக வலைத்தளங்களே சரியான தெரிவு. தமிழகத்தில் ஆண்ட்ராய்டு செல்ஃபோன் இல்லாத கிராமம் இல்லை எனக் கூறும் அளவுக்கு தொழில்நுட்பம் பரவிக் கிடக்கிறது" என்றார்.

தமிழில்: பாரதி ஆனந்த்


சமூக வலைத்தளம்ஃபேஸ்புக்ட்விட்டர்அரசியல் கட்சிகள்தேர்தல் பிரச்சாரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x