Published : 06 Jul 2016 08:15 AM
Last Updated : 06 Jul 2016 08:15 AM

திமுகவை எந்த சக்தியாலும் அழிக்கவே முடியாது: திருவாரூர் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கருணாநிதி கருத்து

திமுகவை எந்த சக்தியாலும் அழிக்கவே முடியாது என திருவாரூர் தொகுதி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கருணாநிதி தெரிவித்தார்.

திருவாரூர் தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவிக்கும் நன்றி அறிவிப்பு பொதுகூட்டம் நேற்று இரவு திருவாரூரில் நடைபெற்றது. இதில் கருணாநிதி பேசியதாவது: இந்தத் தேர்தலில் திமுக ஒரு சதவீதத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. நாம் பெற்றுள்ளது தோல்வி அல்ல; அடுத்த வெற்றிக்கான அஷ்த்தி வாரம். தேர்தலுக்காக மட்டுமே மக்களை சந்திக்கும் அரசியல் கட்சி அல்ல திமுக. தமிழர்களுக்கு முன்னேற்றத்தை பெற்றுத் தரும் விடுதலை இயக்கம்.

திருவாரூர் தொகுதியில் மண்ணின் மைந்தர் என்ற உரிமையுடன் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகூறுகிறேன். தேர்தல் ஆணையம் நியாயமாக செயல் படவில்லை. அதே போல் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து சக்திகளும் செயல்பட்டன. திமுகவை அழித்தொழிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. திமுகவை எந்த சக்தியாலும் அழிக்கவும் முடியாது.

மத்திய அரசின் செல்வாக்கை பெற்று, பிரதமர் ஆதரவை பெற்று திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுக எடுத்த முயற்சிக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

தேர்தலை ஒட்டி ரூ.570 கோடி கண்டெய்னர் லாரியில் சென்றது யாருடையது என்று சட்டசபையில் ஸ்டாலின், துரைமுருகன் போன்ற வர்கள் கேட்டதற்கு, பதில் சொல்லாமல் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இதை யடுத்து கட்சி வக்கீல் மூலம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த தையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் திராவிடன் மார்பை நிமித்திக் கொண்டு நடப்பான். திராவிடர் களுக்கு நன்மை கிடைக்கும் என்பதனாலேயே திமுகவுக்கு எதிரான வேலைகள் நடந்தேறின. இப்போது தோல்வி படிக்கட்டில் நின்று கொண்டிருக்கிறோம். இதில் இருந்து வெற்றிப் படிக்கட்டை நாம் மிதிக்க வேண்டும். சில ஆண்டுகளில் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம். நீதி கிடைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ‘நீதியே நீயும் இருக்கின்றாயா? இல்லை, கொலைக்களத்தில் இறந்துவிட் டாயா?’ என்று கோவலன் இறந்தபோது கவுந்தி அடிகள் பாடியது போன்றுதான் கேட்கத் தோன்றும் என்றார்.

திருவாரூரில் நடந்த நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x