Published : 31 Mar 2014 11:47 AM
Last Updated : 31 Mar 2014 11:47 AM

‘இனம்’ படத்தை திரையிட வேண்டாம்: தியேட்டர் அதிபர்களுக்கு வைகோ கோரிக்கை

‘இனம்’ திரைப்படத்தை திரையிட வேண்டாம் என தியேட்டர் அதிபர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற் றுக்கிழமை விடுத்த அறிக்கை:

‘இனம்’எனும் திரைப்படத்தை, கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ் சிவன் இயக்கி உள்ளார். சிறுவர்களும் சிறுமிகளும் கட்டாயமாக புலிப்படையில் சேர்க்கப்படுவதாகவும், சிறு வயதிலேயே அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் கட்டாயச் சூழ்நிலை இருந்ததாகவும் படம் கூறுகிறது.

பாடசாலை வகுப்பு நடக்கும் போது, கரும் பலகையில் உள்ள பாடத்திட்டத்தை அழித்துவிட்டு, விடுதலைப் புலிகளின் காணொளி திரைப்படம் காட்டப்பட்டதாக ஒரு காட்சியை வைத்துள்ளார். ஈழ விடுதலைப் போரையும், அங்கு ஈழத்தமிழர்கள் பட்ட அவலங்களையும் ஒரு பக்கத்தில் காட்டிக்கொண்டே, மறுபக்கத்தில் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல, சிங்களவனின் ஆலகால விஷத்தை படம் முழுக்க பரவ விட்டுள்ளார்.

சமீபகாலத்தில் வெளியான சில காணொளிகள் எப்படி எல்லாம் ஈழத் தமிழ் பெண்களும், இளைஞர்களும் கொடூரமாக வதைக்கப்பட்டு கொல்லப் பட்டனர் என்ற உண்மையை நிரூபிக்கின்றன. திரைக்கலை என்ற பெயரால் தமிழ் இனத்தின் நெற்றியில் மிதிக்க முற்படுவதும், களங்கச் சேற்றைப் பூச முனைவதும் ஈனத்தனமான வேலையாகும். அதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.

இந்தத் திரைப்படம் தமிழகத் திரையரங்கங்களில் ஓடுவது தமிழர்களின் முகத்தில் காரி உமிழப்படும் அவமானம். எனவே, தமிழக திரையரங்க உரிமையாளர்கள், தமிழ்க் குலத்தை இழிவுபடுத்த முனையும் ‘இனம்’திரைப்படத்தை திரையிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என்றுவைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x