Published : 21 Mar 2014 09:37 AM
Last Updated : 21 Mar 2014 09:37 AM

தமிழக மீனவர்கள் 74 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை: பேச்சுவார்த்தை தள்ளிப்போகும் அபாயம்

தமிழக மீனவர்கள் 74 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறைபிடித்திருப்பதால் கொழும்பில் நடைபெற உள்ள மீனவர் பேச்சுவார்த்தை 2-வது முறையாக தள்ளிவைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

ராமேஸ்வரம், மண்டபம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், காரைக்கால் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் 74 பேரையும், அவர்களின் 18 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் புதன்கிழமை மாலை சிறைபிடித்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட 13 விசைப்படகுகளில் இருந்த 53 தமிழக மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அவர்கள் ஏப். 2-ம் தேதி வரை யாழ்ப்பாண சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமை இரவு சிறைபிடிக்கப்பட்ட 5 விசைப்படகுகளைச் சேர்ந்த 25 மீனவர்கள் வெள்ளிக்கிழமை தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

இரு நாட்டு மீனவர் பிரச்சினை சுமுகமாக பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கக்கூடிய இந்த நேரத்தில் தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டிருப்பதும், விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டிருப்பதும் கொழும்பில் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ள இரண்டாம்கட்ட மீனவர் பேச்சுவார்த்தை மீண்டும் தள்ளிவைக்கப்படுமோ என்ற அச்சத்தை மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தேசிய மீனவர் பேரவை பொதுச் செயலர் இளங்கோ ‘தி இந்து’விடம் கூறியதாவது,

வரும் மார்ச் 25-ம் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை மேலும் தள்ளிப்போகாமல் இருக்கும் பொருட்டு இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், விசைப்படகுகளையும் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் உடனே விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சகத்தை தேசிய மீனவர் பேரவை சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தமிழக முதல்வர், மீனவர்களையும் விசைப்படகுகளையும் விடுவிக்க முயற்சி மேற்கொள்ளும் அதே நேரத்தில் எந்தக் காரணம் கொண்டும் வரும் 25-ம் தேதி நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையைத் தள்ளிவைக்க ஆலோசனை வழங்க வேண்டாம். பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி மார்ச் 25-ம் தேதி நடைபெற ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x