Published : 14 Jun 2016 08:26 AM
Last Updated : 14 Jun 2016 08:26 AM

முதல்வர் பிறந்தநாளையொட்டி சென்னையில் வார்டுக்கு 68 மரக்கன்றுகள் நடும் திட்டம்: மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை மாநகரப் பகுதியில் வார்டுக்கு 68 மரக்கன்றுகளை நட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி, பசுமை போர்வை என்ற திட்டத்தின் கீழ் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை, முதல்வரின் வயதுக்கு ஏற்ப முறையே 64 லட்சம், 65 லட்சம், 66 லட்சம், 67 லட்சம் என்ற எண்ணிக்கையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இத்திட்டம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நிதியுதவியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 68-வது பிறந்தநாளை ஒட்டி மாநிலம் முழுவதும் 68 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் சென்னை மாநகரப் பகுதியிலும் கடந்த 5 ஆண்டுகளாக மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு முதல்வர் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதிக்கு பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால், சென்னையில் பசுமை போர்வை திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான மரங்கள் நடப்படவில்லை.

இதற்கிடையில் தனியார் நிறுவனங்கள், தங்கள் சொந்த செலவில் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்கவும், கன்றுகளுக்கு பாதுகாப்பாக வைக்கப்படும் கூண்டுகளில் விளம்பரங்கள் செய்து, வருவாய் ஈட்டிக்கொள்ளலாம் என்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு முதல்வர் பிறந்தநாள் நிகழ்வாக, தனியார் நிறுவனத்தின் செலவில், வார்டுகள் தோறும் தலா 68 மரக்கன்றுகளை நட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் இந்த ஆண்டு 13 ஆயிரத்து 600 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x