Published : 24 Oct 2013 10:30 AM
Last Updated : 24 Oct 2013 10:30 AM

மணல் கொள்ளையால் காணாமல் போன கால்வாய்கள்

வடகிழக்குப் பருவ மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாலாற்றுப் படுகை விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்காது. காரணம், விவசாயத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய பல கால்வாய்கள் காணாமல் போய்விட்டன. இதற்கு மணல் கொள்ளையே காரணம் என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பாலாறுதான் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. காஞ்சிபுரம் பழைய சீவரத்தில் இருந்து, வாயலூர் வரை 10-க்கும் மேற்பட்ட கால்வாய்கள், பாலாற்றில் இருந்து பிரிந்து சுற்றுப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு வளம் சேர்த்து வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சட்டத்துக்குப் புறம்பாக மணல் அள்ளும் நடவடிக்கை தொடர்ந்ததால், கால்வாய்களுக்கு நீர் வரத்து நின்றுவிட்டது. இன்றைக்கு கால்வாய்களே காணாமல் போய்விட்டன. இதனால் கால்வாய்களை நம்பியிருந்த பல ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தைச் சேர்ந்த குணசீலன், 'தி இந்து' நிருபரிடம் கூறியதாவது:

பாலாற்றின் இரு பக்க கரைகளை ஒட்டி பல கிராமங்கள் உள்ளன. இப்பகுதி விவசாய நிலங்களுக்கு இந்த ஆறுகளில் இருந்து பிரியும் கால்வாய்கள்தான் முக்கியமான நீர் ஆதாரமாகும். கால்வாய்களில் இருந்து ஏரி, குளம், குட்டை, மடு போன்றவற்றுக்கு நீர் கொண்டு செல்லப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சட்ட விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டு வந்தது. ஆற்றுப் படுகைகளில் 0.9 மீட்டர் ஆழத்துக்கு மட்டுமே மணல் அள்ள வேண்டும். ஆனால் 12 மீட்டர் வரை மணல் அள்ளப்பட்டுள்ளது. இதனால் ஆழம் அதிகமாகி நீர் உள்ளே சென்றுவிட்டது. மழைக்காலத்தில் வெள்ளம் வந்தால்கூட ஆற்றில் நீர் நிரம்பி கால்வாய் வழியாக வழிந்து ஓடமுடியாத அளவுக்கு மணல் அள்ளப்பட்டுவிட்டது. கால்வாய்களில் நீர் வரத்து இல்லாததால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பாலாற்றை ஒட்டிய பழையசீவரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சேகர் கூறும்போது, "ஒரு கால்வாய் என்றால் அதை ஒட்டி சுமார் 30 கிராம விளைநிலங்கள் பயனடைந்து வந்தன. தவிர, நேரடி ஆற்றுப் பாசனத்தின் மூலம் மட்டுமே சுமார் 3,000க்கும் அதிகமான விளைநிலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆறு மற்றும் உபரிநீர் கால்வாய்களில் வெள்ளநீர் தங்கு தடையின்றி செல்லும்வகையில் அவற்றின் படுகை பாதிக்காத அளவில் மணல் அள்ள வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. பாலாறு பகுதியின் பழையசீவரத்தில் இருந்த பாலூர் பெரிய ஏரி ஊற்றுக் கால்வாய் உடைக்கப்பட்டு டிராக்டர்கள் மணல் கொண்டு செல்லும் பாதையாக மாற்றப்பட்டுள்ளது" என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தின் செயலாளர் தேவராஜன் கூறும்போது, "வல்லப்பாக்கம், புளியம்பாக்கம், சங்கராபுரம், பழையசீவரம், பாலூர், தேவனூர், வில்லியம்பாக்கம், ஆத்தூர், திம்மவரம், பினாயூர் கால்வாய் என பல கால்வாய்கள் இன்று வறண்டு கிடக்கின்றன. அள்ளப்பட்ட மணலை மீண்டும் ஆற்றுப் படுகைகளில் கொட்ட வேண்டும். மேலும் பாலாற்றில் நிறைய தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதனால் நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டு மீண்டும் இந்தக் கால்வாய்களும் விவசாயமும் உயிர் பெறும் வாய்ப்புகள் உள்ளன" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x