Published : 07 Oct 2013 12:42 pm

Updated : 06 Jun 2017 12:25 pm

 

Published : 07 Oct 2013 12:42 PM
Last Updated : 06 Jun 2017 12:25 PM

வினோதினி தாய் தற்கொலை: நிறைவேறாத அறக்கட்டளை ஆசை!

‘‘என்னோட ஒரே ஆசை அம்மா, அப்பாவை நல்லா பார்த்துக்கணும். அதுக்காகவாவது நான் உயிர் பிழைக்கணும்” - இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு வினோதினி சொன்ன வார்த்தைகள் இவை. வினோதினி மரணம் அடைந்து 7 மாதங்களில், மற்றுமொரு சோகத்தின் உச்சமாய் அவரது தாயார் சரஸ்வதியும் சனிக்கிழமை (அக்.5) விஷம் அருந்தி இறந்துப்போனதாக கூறப்படுவது தான் வேதனை!

கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி, புதுச்சேரி பஸ் நிலையம் அருகே தனது தந்தை ஜெயபாலனுடன் நடந்து வந்துக்கொண்டிருந்த வினோதினி மீது சுரேஷ் என்பவர் ஆசிட் வீசினார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்ற வினோதினி கடந்த பிப்ரவரி 12-ம் தேதி மரணம் அடைந்தார்.


வினோதினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது குடும்ப உறுப்பினர்களிலேயே பக்குவப்பட்டவராகவும் தைரியமாகவும் இருந்தது சரஸ்வதிதான். அப்போது வினோதினி விரும்பி அருந்திய காய்கறி சூப்பை ஸ்பூனில் ஊட்டியபடி எப்போதுமே வினோதினியிடன் சத்தமாகப் பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருப்பார் சரஸ்வதி. ஒருமுறை இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது, ‘‘நாம அவகிட்ட பேசாம கொஞ்ச நேரம் இருந்தாலும்கூட அவ யோசனை எங்கையோ போயிடுது. ‘அம்மா நான் செத்திடுவேனா? அம்மா நான் உயிர் பிழைச்சாலும் என் பழைய முகம் கிடைக்காதா? அந்த பாவிக்கு நான் என்ன பண்ணேன்? ஏன் இப்படி செஞ்சான்?’னு எதிர்மறையாவே புலம்புவா. அதனாலதான், அவ நல்லபடியா சிந்திக்கணும்னு நான் பேச்சு கொடுத்துக்கிட்டே இருக்கேன்.” என்று அப்போது சொன்னார். பெரும்பாலும் வினோதினி உடனான சரஸ்வதியின் உரையாடல், வினோதினி உடல் நலம் தேறியப் பிறகு வினோதினி, பெண்கள் நல அறக்கட்டளை தொடங்குவது பற்றிதான் இருந்தது. அதற்காகவே வினோதியின் நலவிரும்பிகள் சிலர் உதவியுடன் லண்டனில் செயல்படும் Acid survivors international trust அமைப்பையும், கொல்கொத்தாவில் இருக்கும் Acid survivors trust of india-வின் தலைமை மருத்துவர் எம்.ஹெச்.கோனேரியாவையும், துபாயில் இருக்கும் இஸ்லாமிக் ஃபவுண்டேஷனின் பாகிஸ்தானிய மருத்துவர் கானையும் தொடர்பு கொண்டனர். அதன்மூலம், ஆசிட் வீச்சால் பாதிக்கப்படுவர்களுக்கு முழுமையான இலவச சிகிச்சை அளிப்பதற்கான அறக்கட்டளை ஒன்றைத் தொடங்க ஆரம்பக் கட்டப் பணிகளை மேற்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வினோதினியின் மருத்துவ செலவுகளுக்காகவும் அவரது எதிர்காலத்துக்காகவும் உலகம் முழுவதும் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வந்திருந்தது. மருத்துவச் செலவுகள் மற்றும் வினோதியின் எதிர்காலப் பாதுகாப்புக்கான தொகை போக மீதம் இருக்கும் சுமார் 60 லட்சம் ரூபாயை அந்த அறக்கட்டளைக்கு அளிக்க சரஸ்வதியும் வினோதினியும் வெகு ஆர்வமாக இருந்தனர்.

எல்லாம் சரியாக போய்கொண்டிருந்த நிலையில்தான் 89 நாட்கள் ரண வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த வினோதினிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, கூடவே 6 சதவீதமாக இருக்க வேண்டிய புரோட்டின், ஒரு சதவீதத்துக்கும் கீழே சென்றதால் வினோதினி மரணம் அடைந்தார்.

அதன்பின்பு வினோதியின் தந்தை ஜெயபாலன், பலமுறை வாழ்க்கையின் விரக்திக்கு தள்ளப்பட்ட நிலையில் மகளை நினைத்து புலம்பிக் கொண்டே இருந்தார். அவள் சென்ற இடத்துக்கே நானும் செல்கிறேன் என வேதனையுடன் பேசி வந்தார். ஆனாலும், அவரையும் தாங்கிப் பிடித்து துணிச்சலுடன் வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரச் செய்தவர் சரஸ்வதி. வினோதினி இறந்தால் என்ன? வினோதினியைப் போன்று பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவலாமே என்று வினோதினி நினைவு அறக்கட்டளை தொடங்க அவர் முடிவு செய்தார். அது வெறும் முடிவாக மட்டும் அவர் எடுக்கவில்லை; அந்த சமயத்தில் சென்னையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த வித்யா என்ற பெண்ணுக்கு நேரில் சென்று முதல்கட்ட உதவியாக 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். சிலர் பணத்துக்காக ஆசைப்பட்டு அறக்கட்டளையை தொடங்க முட்டுக்கட்டை போட்ட போதிலும் அவர்களையும் எதிர்த்து அறக்கட்டளையைத் தொடங்க உறுதியுடன் இருந்தார் சரஸ்வதி.

கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி காரைக்கால் நீதிமன்றம், குற்றவாளி சுரேஷுக்கு ஆயுள் தண்டனையும் கூடுதலாக நான்கரை ஆண்டு சிறை தண்டனையும் வழங்கியபோது வினோதியின் தந்தையும் உறவினர் சிலரும்தான் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். அப்போது சரஸ்வதியிடம் போனில் பேசியபோதும், ‘எதுக்குப்பா ஒருத்தருக்கு தண்டனை கொடுக்கும்போது அந்த இடத்துல நாம இருக்கணும்? அந்த பையனைப் பெத்தவங்களுக்கும் சங்கடம்தானே!’ என்று வினோதினி கொலையுண்டப் பிறகும் பக்குவப்பட்டவராகவேப் பேசினார்.

இதைத் தொடர்ந்து திருக்கடையூரில் அவரது வீட்டின் முன்பாக இருக்கும் தனது கணவரின் தம்பி நிலத்தில் ஓலைக்கூரையை வேய்ந்து அங்கு வினோதினி நினைவு அறக்கட்டளை போர்டு அமைத்து, அறக்கட்டளையை சட்டப்பூர்வமாக பதிவும் செய்தார்.

இந்த நிலையில்தான் கடந்த 5-ம் தேதி மாலை 4 மணிக்கு சரஸ்வதி, விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சரஸ்வதியின் சகோதரர் ரமேஷிடம் பேசியபோது, ‘‘எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்தது. ஆனா, கொஞ்ச நாளாத்தான் ரெண்டு பேருமே நாங்க உயிரோட இருந்து என்ன சாதிக்கப்போறோம்? அவ இல்லாத வாழ்க்கை வெறுமையா இருக்கு’னு புலம்பிட்டு இருந்தாங்க. அதனால, சொந்தக்காரங்க எல்லாம் எங்கயும் போகாம அவங்க கூடவேதான் இருந்தோம். நேத்து (5-ம் தேதி) சாயங்காலம் 4 மணிக்கு எல்லோரும் வீட்டுக்கு முன்னாடி உட்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தோம். திடீர்னு உள்ளே போனவங்க விஷம் குடிச்சிட்டு வந்து மயங்கி விழுந்துட்டாங்க. தனியார் மருத்துவமனைக்கு தூக்கிட்டுப்போய் சிகிச்சை கொடுத்து நார்மலான பின்னாடி, நைட்டு 10 மணிக்கு வீட்டுக்கு கூட்டி வந்துட்டோம். டாக்டர் ஒருத்தரும் வீட்டுக்கு வந்துட்டாரு. 10.30 மேல அக்காவுக்கு திடீர்ன்னு வலிப்பு வந்துடுச்சு. உடனே, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோனோம். அங்க அவங்க உயிர் பிரிஞ்சிடுச்சு.” என்றார்.

குடும்பத்தில் இருவரை பறிகொடுத்துவிட்டு ஆதரவு இல்லாமல் தவிக்கும் நிலையில் அவர்கள் தொடங்கிய அறக்கட்டளையை அரசு எடுத்து நடத்துவதுதான் வினோதினி மற்றும் அவரது தாய் சரஸ்வதி ஆகியோருக்கு நாம் செய்யும் மரியாதையாகக் இருக்கும்!


வினோதினிசரஸ்வதிஆசிட் வீச்சு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x