Published : 10 Mar 2017 02:44 PM
Last Updated : 10 Mar 2017 02:44 PM

திருவண்ணாமலை வனப்பகுதியில் பயணியர் விடுதி கட்டுவதை ரத்து செய்க: முத்தரசன்

திருவண்ணாமலை வனப்பகுதியில் பயணியர் விடுதி கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

திருவண்ணாமலை சுற்றுப் பாதையில் மாதம் ஒருமுறை கிரிவலம் செல்லும் பக்தர்களுக்காக பயணியர் விடுதி (யாத்ரி நிவாஸ்) கட்டுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை கோனாநதிப் பகுதியில் நிலம் தேர்வு செய்து ஒப்புதல் வழங்கியுள்ளது.

அறநிலையத்துறை தேர்வு செய்துள்ள இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதுடன் அரியவகை மூலிகைகளும், அரிதினும் அரிதான வன உயிரினங்களும் உள்ள பகுதி என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். சூழல் பாதுகாப்பு அமைப்பினரும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அமைப்புகளும் சோனாநதி வனப்பகுதியில் கட்டுமானப் பணி எதுவும் நடைபெறக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

மேலும் இது தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு முடிவுபெறும் நிலையில் உள்ளது. வரும் மார்ச் 28 இதன் மீது தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில் சோனாநதி வனப்பகுதியில் 545 மரங்களை வெட்டி அப்புறப்படுத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதித்திருப்பது அப்பட்டமான சட்டமீறலாகும்.

இது ஆளும் கட்சி ஆதரவுடன் சுயநலம் தேடும் கும்பலின் அழுத்தத்திற்கு அதிகார வர்க்கம் துணை போயுள்ளதை வெளிப்படுத்துகிறது. அத்துடன் கிரிவலப்பாதையில் பயணியர் விடுதி கட்டுவதற்கு வசதியான பல இடங்கள் உள்ளதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சோனாநதி வனப்பகுதியில் பயணியர் விடுதி கட்டும் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பொதுமக்கள், சூழல் பாதுகாப்பு அமைப்புகளுடன் கலந்து பேசி பொருத்தமான இடத்தை தேர்வு செய்து, அவ்விடத்தில் பயணியர் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x