Published : 22 Jun 2016 05:44 PM
Last Updated : 22 Jun 2016 05:44 PM

கல்விக் கடன்களை ரிலையன்ஸுக்கு வங்கிகள் விற்பதை தடுத்து நிறுத்துக: திருமாவளவன்

கல்விக் கடன்களை பொதுத்துறை வங்கிகள் ரிலையன்ஸ் கம்பெனிக்கு விற்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மாணவர்கள் தொழிற்கல்வி பயில்வதற்காக பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன்களை இப்போது அந்த வங்கிகள் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விற்றிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி அப்படி கல்விக் கடன்களை 45% விலையில் ரிலையன்ஸ் கம்பெனிக்கு விற்றுள்ளது. இப்போது இந்த நிறுவனம் கடனை வசூலிப்பதற்காக அடியாட்களை வைத்து மாணவர்களை மிரட்டி வருகிறது. இதில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இப்படி கல்விக் கடன்களை வங்கிகள் தனியார் நிறுவனங்களுக்கு விற்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த தமிழக முதல்வர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும்.

இதைப் போல கேரள மாநிலத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் இதே ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கல்விக் கடன்களை விற்பனை செய்தபோது கேரள அரசு தலையிட்டு தடுத்து நிறுத்தியதை தமிழக அரசின் கவனத்துக்குச் சுட்டிக்காட்டுகிறோம்.

தமிழ்நாட்டில் புற்றீசல்போல பெருகிவரும் பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலானவை எந்தத் தரமும் இல்லாதவையாக உள்ள காரணத்தால் அங்கிருந்து படித்து பட்டம் பெற்ற லட்சக் கணக்கான பொறியியல் பட்டதாரிகள் தமது படிப்புக்குரிய வேலையைப் பெற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பு உள்ளிட்ட தொழிற்கல்வியை முறைப்படுத்தி அதன் தரத்தை மேம்படுத்தினாலொழிய இந்தப் பிரச்சனையை தீர்க்க முடியாது. அது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கேற்ப புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு பின்தங்கிய காரணத்தினாலேதான் வேலையின்மை அதிகரித்து வருகிறது. சுமார் 89 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு தமிழக அரசு இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x