Published : 25 Jun 2016 08:27 AM
Last Updated : 25 Jun 2016 08:27 AM

பணத்துக்காக தனது குழந்தைகளை நண்பர்கள் மூலம் கடத்திய தந்தை உட்பட 3 பேர் கைது

பணத்துக்காக தனது குழந்தை களை நண்பர்கள் மூலம் கடத் திய தந்தை உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூர், கள்ளிக் குப்பம் பகுதியில் வசிப்பவர் கிரண்குமார் (39). சேத்துப்பட்டில் உள்ள தனியார் மெடிக்கல் சர்வீஸ் கால் சென்டரில் வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி ஜான்சிராணி (31). விகாஷ்(11), ஜெய்தீப் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். புழல் சூரப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் இருவரும் படித்து வருகின்றனர். குழந்தைகள் பள்ளி வாகனம் மூலம் பள்ளிக்கு சென்று வரு கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு கிரண்குமார் தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக வீட்டின் அருகே பள்ளி வாகனத்துக்காக காத்திருந்தார்.

அப்போது, ஒரு கார் அருகில் வந்து நின்றது. காரில் இருந்த 2 பேர், பள்ளி வேன் இன்று பழுதாகிவிட்டது. அதனால் இன்று மட்டும் இவ்வாகனத்தில் அழைத்து செல்ல வந்துள்ளோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து விகாஷ் மற்றும் ஜெய்தீப் ஆகியோரை காரில் அழைத்துச் சென்றனர். கார் சென்ற சிறிது நேரத்தில் கிரண்குமாரின் செல்போனுக்கு ஓர் அழைப்பு வந்தது. “உங்கள் மகன்களை கடத்திச் சென்றுள்ளோம். ரூ.30 லட்சம் பணம் கொடுத்தால்தான் குழந்தைகளை விடுவோம். இல்லையென்றால் அவர்களை உயிருடன் பார்க்கமுடியாது” என்று மிரட்டிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டனர்.

உடனே கிரண்குமார் தனது சகலை ரவி என்பவரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். ரவியின் ஆலோசனையின்பேரில் இருவரும் சென்று அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில், குழந்தை கள் கடத்தப்பட்டதாக கூறியது நாடகம் என்று தெரியவந்தது. கடத்தல்காரர் பேசியதாக கூறப் பட்ட செல்போன் எண்ணை வைத்து புழலைச் சேர்ந்த ரபி என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் தெரியவந்ததாவது:

கிரண்குமார் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கஷ்டப் பட்டு வந்துள்ளார். பெங்களூ ருவில் வசித்துவரும் தனது தந்தையிடமிருந்து பணம் பறிப் பதற்காக தனது குழந்தைகளையே கடத்தியதாக நாடகமாட கிரண்குமார் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக தன்னுடன் பணிபுரியும் ஆசிப் அன்சாரி, அவருக்கு தெரிந்த நபரான புழல் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரிக்சன், கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த ரபி மற்றும் புழலைச் சேர்ந்த இளங்கோ ஆகியோருடன் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார்.

அதன்படி நேற்று முன்தினம் காலையில் தன் குழந்தைகள் இருவரையும் தன்னுடன் வேலை செய்து வரும் ஆசிப் அன்சாரி என்பவரின் காரில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளார். காரை ரபி என்பவர் ஓட்டிச்செல்ல ஆசிப் அன்சாரி, ரிக்சன் மற்றும் இளங்கோ ஆகியோர் காரில் இருந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ரபி கொடுத்த தகவலின்பேரில், ஆசிப் அன்சாரி (29) என்பவரை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் செங்குன்றம் வடகரை பகுதிக்கு விரைந்து சென்று குழந்தைகள் விகாஷ் மற்றும் ஜெய்தீப் ஆகியோரை பத்திரமாக மீட்டனர். கடத்தல் நாடகமாடிய கிரண்குமாரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள ரிக்சன் மற்றும் இளங்கோ ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x