Published : 26 May 2017 08:46 AM
Last Updated : 26 May 2017 08:46 AM

82 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணையில் முதல்முறையாக தூர்வாரும் பணி

28-ம் தேதி தொடங்குகிறது; ஒரு லட்சம் கனமீட்டர் வண்டல் மண் எடுக்க திட்டம்

மேட்டூர் அணை கட்டப்பட்டு 82 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக தூர்வாரும் பணியாக அணையில் படிந்துள்ள வண்டல் மண் எடுக்கும் பணி 28-ம் தேதி தொடங்கப்படுகிறது. இதில், 1 லட்சம் கனமீட்டர் (5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில்) வண்டல் மண்ணை விவசாயிகள் இலவச மாக எடுக்க அனுமதியளிக்கப்பட் டுள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரும் நீர்த்தேக்கமான மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் நாள் கட்டிமுடிக்கப்பட்டது. 120 அடி உயரத்துடன் காவிரியின் குறுக்கே 59.25 சதுர மைல் பரப் பில் நீர் தேங்கும் வகையில் கட்டப் பட்டுள்ளது. அணையில் 93.47 டிஎம்சி நீரை தேக்கி வைக்க முடி யும்.

சேலம், நாமக்கல் காவிரி படுகை மாவட்டங்கள் என 11 மாவட்டங் களில் 16 லட்சம் ஏக்கருக்கும் அதிக மான விளைநிலங்களில் பாசனம் செய்ய மேட்டூர் அணை நீர் பயன்படுத்தப்படுகிறது. நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகா தர மறுப்பதாலும், கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததாலும் மேட்டூர் அணை வறண்டு தற்போது 20 அடி மட்டுமே நீர் தேங்கியுள்ளது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, மேட்டூர் அணை நிரம்பினால் அதில் இருந்து வெளியேற்றப்படும் நீரை சேமித்து வைக்க முடியாத நிலையுள்ளது. எனவே, 82 ஆண்டுகளாக மேட்டூர் அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றினால், அணையில் கூடுதலாக நீரை சேமிக்க முடியும் என்று விவசாயிகள், ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் என பல தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

மேலும், அணையில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணைக் கொண்டு விவசாய நிலங்களின் தரத்தை மேம்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேட்டூர் அணையில் எந்த அளவுக்கு வண்டல் படிந்துள்ளது என்பதை ஆய்வு செய்யும் பணியை மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகத்தின் ‘வேப்காஸ்’ என்ற நிறுவனத்திடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது.

‘வேப்காஸ்’ நிறுவனம் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அணை வறண்டு கிடப்பதைப் பயன்படுத்தி மழைக்காலத்துக்கு முன்பாக அதை ஓரளவு தூர்வாரி அதில் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கும் திட்டத்தை தமிழக அரசு 28-ம் தேதி தொடங்குகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கும் இத்திட்டத்துக்காக மேட்டூர் அணை யில் மூலக்காடு நீர்பரப்பு பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அணைப் பரப்பில் இருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணை லாரிகளில் எடுத்துச் செல்ல வசதியாக அணை பரப்பில் இருந்து மூலக்காடு கிராமம் வரை 1.5 கிமீ., நீளத்துக்கு மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில், “மூலக்காடு நீர்பரப்பு பகுதியில் 1 லட்சம் கனமீட்டர் (5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில்) வண்டல் மண் எடுக்கப்பட உள்ளது. இந்த அளவுக்கு வண்டல் மண் எடுக்கும்போது, அந்த இடத்தில் 10 லட்சம் கோடி லிட்டர் நீர் கூடுதலாக தேங்க வாய்ப்பு ஏற்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x