Published : 10 Apr 2014 00:00 am

Updated : 10 Apr 2014 08:21 am

 

Published : 10 Apr 2014 12:00 AM
Last Updated : 10 Apr 2014 08:21 AM

அதிமுக கூட்டணியிலிருந்து இடதுசாரிகளை கழற்றிவிட்டது நியாயமில்லை: மூமுக தலைவர் டாக்டர் சேதுராமன் பேட்டி

அதிமுக கூட்டணி வெற்றிக்காக தமிழகம் முழுவதும் 25 தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய தீர்மானித்து, பிரச்சார வேனில் ஏறி இருக்கிறார் மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன். அவர் ‘தி இந்து’-வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

ஜெயலலிதா பிரதமரானால் தமிழகத்துக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவார் என்று பிரச்சாரம் செய்கிறீர் கள். இதெல்லாம் சாத்தியம்தானா?


கருணாநிதி தனது குடும்பத்துக்கு பவர் வேண்டுமென்பதற்காக மத்தியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய பவரை எல்லாம் குறைத்துவிட்டார். மின்சாரம், நதிநீர் இணைப்பு, ஈழப் பிரச்சினை இதிலெல்லாம் தமிழர் நலனைப் புறந்தள்ளி வைத்துவிட்டு, தனது குடும்பம் ஊழல் செய்வதற்கு வழிவகுத்ததுதான் கடந்த 10 ஆண்டுகளில் கருணாநிதி செய்த சாதனை. கருணாநிதியைவிட ஜெயலலிதா மேலானவர் என் பதால்தான், அவர் பிரதமரானால் தமிழகத்தின் உரிமைகள் மீட்கப்படும் என்கிறோம்.

பாமக, கொமதேக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட சாதிய கட்சிகளுக்கும் முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளுக்கும் கூட்ட ணிக் கட்சிகள் தொகுதிகளை ஒதுக்கியுள்ளன. ஆனால், 2 கோடிக்கும் அதிகமான வாக்குகளைக் கொண்டதாகச் சொல்லப்படும் தேவரினம் சார்ந்த கட்சிகளை இந்தத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் புறந்தள்ளி விட்டனவே?

இரண்டு திராவிடக் கட்சிகளுமே தேவரினத்தை ஒன்றுசேர விடாமல் பிரித்து வைத்திருக்கின்றன. தேவரினத்தில் மாவட்டத்துக்கு ஒரு சாதித் தலைவருக்கு நிதியுதவி செய்து உசுப்பேற்றி வளர்க்கிறார்கள். ஆனால் ஊழல் செய்யாத, லட்சத்தியத்துடன் வாழும் எங்களைப் போன்றவர்களை வளர விட மாட்டார்கள். எங்களால் பணம் காசு செலவழிக்க முடியாது என்பதால் நாங்கள் இந்தத் தேர்தலில் சீட் கேட்கவில்லை. வாண்டையார் கேட்டாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. தேவரின அமைப்புகள் புறக்கணிக்கப்பட்டதால் எங்கள் சமுதாய மக்கள் புழுக்கமான சூழலில் உள்ளது உண்மைதான்.

தேவரை தலைவராகக் கொண்டு செயல்பட்ட ஃபார்வர்டு பிளாக் இயக்கம் ஒரு இடதுசாரி இயக்கம். ’தேவர் வழியில் காங்கிர ஸுக்கு பாடம் புகட்டுவேன்’ என்று சூளுரைத்த ஜெயலலிதா, இடது சாரிகளை கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

அதிமுக கூட்டணியிலிருந்து இடதுசாரிகளைக் கழற்றிவிட்டது நியாயமில்லை என்பதே எங்களது கருத்து. எங்களைவிட அதிகமாக தா.பாண்டியன் ஜெயலலிதாவை புகழ்ந்துதள்ளியவர். ஆனால், ஜெயலலிதா 40 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும் என்று முடி வெடுத்துவிட்டார். அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதான்.

தேவர் ஜெயந்திக்குக் கட்டுப்பாடுகளை விதித்ததால் ஜெயலலிதா மீது தேவரினத்து மக்கள் கோப மாக இருக்கிறார்கள். அதை சமன் செய்யத்தான் தேவருக்கு தங்க கவசம் சாத்தியுள்ளார் ஜெய லலிதா. ஆனாலும் அந்த மக்கள் மௌனப் புரட்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இது தென் மாவட்டங்களில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் என் கிறார்களே?

நிச்சயம் இது எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. தேவருக்கு ஏற்கெனவே தயாரான தங்கக் கவசத்தைத்தான் ஜெயலலிதா அணிவித்தார். தேவர் ஜெயந்தியின்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை நான் ஆதரிக்கிறேன். அப்படிச் செய்யாமல் விட்டிருந்தால் கலவரம் வெடித்திருக்கும்.

கம்யூனிஸ்ட்களுக்கு ஒதுக்கிய தொகுதிகளையாவது தேவர் கட்சிகளுக்கு ஒதுக்கி இருக்கலாமே என்று உங்கள் சமுதாய தலைவர்களே ஆதங்கப்படுகிறார்களே?

நியாயம்தான். ஆனால், கோடிகளை செலவழித்து போட்டியிட எங்களிடம் ஆள் இல்லை. அதே சமயம், கடைசிவரை நம்பவைத்து கழுத்தறுப்பதை முக்கியக் கட்சிகள் உத்தியாகவே வைத்திருக்கின்றன. இதற்கு முந்தைய தேர்தலில் ஜெயலலிதா எங்களை அப்படித் தானே நடுத்தெருவில் நிறுத்தினார்.

இந்தத் தேர்தலில் தேவர் கட்சிகளை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்திருப்பது வாண்டையார் போன்ற தலைவர்களுடன் மீண்டும் நாங்கள் கைகுலுக் கும் சூழலை உருவாக்கியுள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள மனவருத்தத்தை அடுத்து வரும் தேர்தல் களம் நிச்சயம் போக்கும்.


அதிமுகஇடதுசாரிகள்சேதுராமன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x