Published : 03 Jul 2016 05:38 PM
Last Updated : 03 Jul 2016 05:38 PM

விஷ்ணுபிரியா வழக்கில் நியாயம் வெளிச்சத்துக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது: கருணாநிதி

விஷ்ணுபிரியா வழக்கில் தாமதமானாலும் நியாயம் வெளிச்சத்திற்கு வருவதை யாராலும் தடுத்திட இயலாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவ அறிக்கையில், ''கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி, தூக்குப் போட்டுக் கொண்டு, மாண்ட திருச்செங்கோடு டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா தொடர்பான வழக்கினை முதலில் திருச்செங்கோடு போலீஸார் பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்து தமிழக அரசின் ஏற்பாட்டிலான விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், அவருடைய தந்தை ரவி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

திருச்செங்கோட்டில் பணியாற்றி வந்த 27 வயதான விஷ்ணுபிரியா என்ற பெண் டி.எஸ்.பி., பணியில் சேர்ந்த ஏழு மாதக் காலத்திலேயே, குரூப் 1 தேர்வில், காவல்துறையைத் தவறாகத் தேர்ந்தெடுக்க நேரிட்டது என்றும், பணியில் பயங்கரமான நெருக்கடிகளால் ஏற்படும் மன உளைச்சல்களைத் தாங்க முடியவில்லை என்றும், அதனால் தற்கொலை முடிவை நாடுவ தாகவும் எழுதி வைத்துவிட்டு, அதிமுக ஆட்சியில் வேறு சில அதிகாரிகள் செய்ததைப் போல 18-9-2015 அன்று தூக்குப் போட்டுக் கொண்டு தன்னைத்தானே பரிதாபமாக மாய்த்துக் கொண்டார்.

தி இந்து ஆங்கில நாளிதழில், 19-9-2015 முதல் பக்கத்தில் வந்துள்ள செய்தியிலேயே, ''No Confidence in State Police, observes C.J.'' என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மாநிலக் காவல்துறை மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவித்தார் என்று அதிர்ச்சியூட்டும் செய்தி வந்தது.

தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், நீதிமன்றங்களில் மத்திய போலீஸ் பாதுகாப்பு தேவையற்றது, தமிழகப் போலீஸ் பாதுகாப்பு போதுமானது என்றெல்லாம் வாதாடிய போது, தலைமை நீதிபதி குறுக்கிட்டு ''விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றில் உள்ளது போல மத்தியப் பாதுகாப்பு வழங்கினால் என்ன தவறு உள்ளது? பலமுறை உத்தரவிட்டும் கோர்ட் வளாகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் என நடத்துகிறார்கள்.

எனவே, தமிழகப் போலீஸார் மீது நம்பிக்கை இல்லை. இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 12ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம். அன்றைக்கு தமிழக அரசும், மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும்'' என்று கருத்து வெளியிட்டிருக்கிறார் என்றால், இதற்கு காவல்துறை பொறுப்பேற்றுள்ள முதல் அமைச்சர் மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டுமா? வேண்டாமா? மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே இவ்வாறு கருத்துக் கூறியிருக்கிறார் என்றால், எதிர்க்கட்சிகள் காவல்துறை மீது கொண்டுள்ள கருத்துகள் முற்றிலும் உண்மை என்று தானே ஆகிறது?

இதையெல்லாம் எண்ணித்தான் நான் 20-9-2015 அன்று விடுத்த அறிக்கையில், விஷ்ணுபிரியாவின் தற்கொலையில் நியாயம் கிடைத்து, சம்பவம் தொடர்பான உண்மை விவரங்கள் நாட்டுக்குத் தெரிய, பல்வேறு தரப்பிலும் கேட்டுக் கொண்டுள்ளபடி இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றமும் மாண்டவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரி என்ற வகையிலும்; செயின் பறிப்பு மற்றும் தாலிப் பறிப்பு போன்றவற்றிலிருந்தும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், தொழிற் கூடங்கள் மற்றும் அலுவலகங்களிலும் பணியாற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை போன்ற கொடுமைகளிலிருந்தும் பெண்களைப் பாதுகாத் திடத் தவறிய தமிழ்நாடு காவல்துறை, தற்போது அத்துறையிலுள்ள பெண் அதிகாரிகளைக் கூடப் பாதுகாத்திட முடியவில்லை.

எனவே, இந்தப் பிரச்சினையைத் தானாகவே முன்வந்து கையிலே எடுத்துக்கொண்டு, இது கொலையா அல்லது தற்கொலையா; இதன் பின்னணியிலே உயர் போலீஸ் அதிகாரிகளும், அமைச்சர்களும் இருக்கிறார்களா எனப் பரவலாக எழுப்பப்பட்டுள்ள வினாக்கள் பற்றி குறிப்பிட்ட ஒரு காலவரையறைக்குள் விரிவாக விசாரணை செய்து உண்மையை நாட்டிற்குத் தெரிவித்திடத் தொடர்ந்து கண்காணித்திட வேண்டுமென்றும் நான் வெளியிட்ட அறிக்கையிலே கேட்டுக் கொண்டேன்.

ஜெயலலிதா ஆட்சியில் காவல்துறையைச் சேர்ந்த ஒரு இளம் பெண் டி.எஸ்.பி., அதுவும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர், குறிப்பாக அருந்ததியினருக்கான உள் இட ஒதுக்கீட்டில் பணி வாய்ப்பு பெற்ற முதல் காவல்துறை அதிகாரி, தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார்.

அவர் எழுதி வைத்த கடிதத்தில் பாதிப் பக்கங்களைக் காணவில்லை. பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினை குறித்துப் பேரவையில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஜனநாயக ரீதியாக விவாதிக்கக் கோரியும் அதற்கு அனுமதி வழங்கப் படவில்லை.

மறைந்த காவல்துறை நண்பர்களுக்கு அரசின் சார்பில் வழக்கமாகத் தரப்படும் உதவி நிதியை அவர்கள் குடும்பத்திற்கு வழங்கி, விளம்பரம் செய்து கொள்ளும் முதல்வர் ஜெயலலிதா, டி.எஸ்.பி. தகுதியில் தற்கொலை செய்து கொண்டு மாண்ட விஷ்ணுபிரியாவுக்கு ஒரு இரங்கல் கூட தெரிவித்த தாகத் தெரியவில்லை. அவருடைய தற்கொலை பற்றிய விசாரணையில் அவருடைய மேல் அதிகாரிகள் கொடுத்த டார்ச்சர் தான் காரணம் என்று பேசப்படுவதால், தமிழகத்தைச் சேர்ந்த சிபிசிஐடி சார்பில் விசாரித்தால் உண்மை வெளிவராது என்பதற்காகத்தான், சிபிஐ விசாரணை வேண்டு மென்று அனைத்துக் கட்சியினரும் கோரிக்கை வைத்தார்கள்.

21-9-2015 அன்று திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கழகத்தின் சார்பில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோரிடம், விஷ்ணுப்பிரியா காவல் துறை உயர் அதிகாரிகளின் கடும் நெருக்குதல் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளார்; சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் முறையாகச் செயல்பட எவ்விதமான வாய்ப்பும் இல்லை; நியாயமான, பாரபட்சமற்ற, தன்னிச்சையான விசாரணை வேண்டும் என்பதால் இந்த வழக்கினை உடனடியாக சிபிஐக்கு மாற்றி நீதியை நிலைநாட்ட வேண்டுமென்று மனு கொடுத்தார்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் விஷ்ணுபிரியாவின் இல்லத்திற்கே சென்று, அவருடைய பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு விட வேண்டுமென்று கனிமொழி செய்தியாளர்களிடம் கூறினார்.

22-9-2015 அன்று காவல்துறை மானியத்தின் மீது பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு, ''கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி தற்கொலை செய்து கொண்டபோது, அந்தக் குடும்பத்திலே இருப்பவர்கள் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்டவுடன் அந்த அரசு பெருந் தன்மையாக பரிந்துரை செய்திருக்கிறது. அதைப் போல, விஷ்ணுபிரியா தற்கொலை குறித்தும் சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் உத்தர விடலாம்'' என்று கேட்டுக் கொண்டார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, சிபிஐ விசாரித்து வரும் சில வழக்குகளையும் குறிப்பிட்டு, ''சி.பி.ஐ. ஒரு வருடத்திற்குப் பின்னரும் விசாரணையை முடிக்கவில்லை, எனவே சிபிஐ விசாரணையே சரியானதாக இருக்கும் என்று சொல்லப்படுவது ஒருவருடைய தனிப்பட்ட கருத்து தானே தவிர, உண்மை நிலையின் அடிப்படையில் சொல்லப்படுவதல்ல. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கானது சிபிஐ விசாரிக்கும் அளவுக்கு மிகச் சிக்கலான வழக்கு அல்ல. சிபிசிஐடியே இந்த வழக்கில் நடுநிலையுடன் விரைவாக புலன் விசாரணை மேற் கொள்ளும்'' என்றார்.

அதற்குப் பிறகுதான் கடந்த 18-3-2016 அன்று விஷ்ணுபிரியாவின் தந்தை உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அழைத்து வந்து, என்னைச் சந்தித்தபோது, வழக்கு பற்றிய விவரங்களை அவருடைய குடும்பத்தினர் என்னிடம் எடுத்துக் கூறினர். அதன் பிறகு நான் விடுத்த அறிக்கையிலும் இந்த வழக்கினை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில் விஷ்ணுபிரியாவின் தந்தை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைகோரி வழக்குத் தொடர்ந்து, அதனை விசாரித்த தனி நீதிபதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று கூறியதால், அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் விஷ்ணுபிரியாவின் தந்தை மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில்தான் எனது அறிவுரையின் பேரில் திமுக வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று தகுந்த அடிப்படைகளுடன் வலியுறுத்தி மிகச் சிறப்பாக வாதிட்டார்.

அந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், எம்.பி. முரளிதரன் ஆகியோர் 1-7-2016 அன்று வழங்கிய தீர்ப்பில், ''வாதங்களின் அடிப்படையில் பார்க்கும்போது இறந்துபோன விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி தொடர்ந் திருக்கும் மேல் முறையீட்டு மனுவை ஏற்கிறோம். மாநிலப் போலீஸாரின் விசாரணையில் எங்களுக்குத் திருப்தி இல்லை. எனவே, விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடுகிறோம். சிபிஐ மூன்று மாதங் களுக்குள் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று அனைவரும் வரவேற்கத்தக்க முடிவைக் கூறியிருக்கிறார்கள்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப் பகலில் சுவாதி என்ற இளம் பெண்ணைக் கொலை செய்த சம்பவத்திற்காக காவல்துறைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்த நான், தற்போது அந்தக் கொலை செய்த குற்றவாளியைக் கண்டுபிடித்த செயலுக்காக காவல்துறை அதிகாரிகளைப் பாராட்டுகிறேன்.

அதே நேரத்தில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று தமிழகச் சட்டப்பேரவையில் முதல்வர் கூறியதற்குப் பிறகு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாநிலப் போலீஸாரின் விசாரணையில் தங்களுக்குத் திருப்தி இல்லை எனக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, அதிமுக அரசின் மீது தெரிவித்த கடுமையான கண்டனம் என்பதையும்; இந்த ஆட்சியின் மீது தொடர்ந்து விழுந்து வரும் கறுப்புப் புள்ளிகளில் இதுவும் ஒன்று என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை சம்பவத்தில் சிபிஐ விசாரணை மூன்று மாதங்களில் முற்றுப் பெற்று, புதைந்திருக்கும் உண்மைகள் வெளிக் கொணரப்படுமானால்; தாமதமானாலும் நியாயம் வெளிச்சத்திற்கு வருவதை யாராலும் தடுத்திட இயலாது என்பது புலப்படும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x