Published : 17 Feb 2014 07:06 PM
Last Updated : 17 Feb 2014 07:06 PM

தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட்: ராமதாஸ்

மத்திய இடைக்கால பட்ஜெட், மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "2014-15 ஆம் ஆண்டிற்கான இடைக்கால மத்திய பொது நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். இது இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பதால் புதிதாக வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் சலுகைகள் வாரி இறைக்கப்பட்டுள்ளன.

உயர்தர, உயர் மத்திய தர வகுப்பினர் பயன்படுத்தும் மகிழுந்துகளுக்கான உற்பத்தி வரி 3% முதல் 6% வரை குறைக்கப்பட்டுள்ளது. நடுத்தர வகுப்பினர் பயன்படுத்தும் இருசக்கர ஊர்திகளுக்கான ஊர்திகளுக்கான வரியும் 4% குறைக்கப்பட்டுள்ளது.

தொழில்துறைக்கு மட்டுமின்றி மக்களுக்கும் பயனளிக்கக் கூடிய இந்த வரிச் சலுகைகள் வரவேற்கப்பட வேண்டியவையாகும். அதேபோல் செல்பேசிகள், சோப்புகள் ஆகியவற்றின் மீதான வரி குறைக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலை குறையும் என்பதும் மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகும்.

அதேநேரத்தில், அரிசி மீதான சேவை வரி ரத்து செய்யப்பட்டிருக்கும் போதிலும், நிதியமைச்சரே ஒப்புக் கொண்டிருப்பதைப் போல விலைவாசியை, குறிப்பாக உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் அல்லது அடியோடு ரத்து செய்யப்படும் என ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடப் படாதது ஏமாற்றம் அளிக்கும் இன்னொரு விஷயமாகும்.

மாத ஊதியதாரர்களுக்கு பயனளிக்கும் வகையிலான நேரடி வரிகள் கொள்கை இன்னும் நடைமுறைப் படுத்தப்படாததும், பொருட்கள் மற்றும் சேவை வரி முறை அறிமுகம் செய்யப்படாததும் வருத்தமளிக்கக் கூடியவை ஆகும். முன்னாள் ராணுவத்தினருக்கான ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் திட்டம் வரவேற்கப்பட வேண்டியதாகும்.

வேளாண் பயிர்க்கடன் இலக்கு அதிகரிக்கப்பட்டிருப்பது, மாணவர்களின் கல்விக்கடன் மீதான வட்டி இரத்து செய்யப்பட்டிருப்பது, மத்திய அரசின் திட்டங்களுக்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பது, நிதிப் பற்றாக்குறை 4.6 விழுக்காடாக கட்டுப்படுத்தப்பட்டிருப்பது ஆகியவையும் வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்புகள்தான்.

ஆனால், தமிழகத்திற்காக புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும், விவசாய வளர்ச்சிக்கு அடிப்படையான உரத்தின் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் வருத்தம் அளிக்கக் கூடியவை ஆகும். மத்தியில் தேர்தல் முடிவடைந்து பதவியேற்கும் புதிய அரசு தாக்கல் செய்யவிருக்கும் முழுமையான நிதிநிலை அறிக்கையில் இந்த குறைகள் களையப்படும் என்று நம்பலாம்.

2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் வரவேற்கக் கூடிய பல அம்சங்கள் உள்ளன. எனினும் கடந்த காலங்களில் இது போன்ற சலுகைகளை அறிவிக்க மறுத்த மத்திய அரசு, இப்போது இவற்றை அறிவித்திருப்பதைப் பார்க்கும்போது தேர்தலை மனதில் கொண்டே செய்திருக்கிறது என்பது தெளிவாகிறது. மொத்தத்தில் இது மக்களவைத் தேர்தலில் வாக்குகளை வாங்க வேண்டும் என்ற ஒற்றை அம்சத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாகவே தோன்றுகிறது" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x