Last Updated : 07 Sep, 2016 11:52 AM

 

Published : 07 Sep 2016 11:52 AM
Last Updated : 07 Sep 2016 11:52 AM

மோகனூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் தபால் நிலையம், வங்கி, ரேஷன் கடை நிர்வகிக்கும் மாணவ, மாணவிகள்

மோகனூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களின் செயல்பாட்டால் பள்ளி மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, மாணவர்களே நடத்தும் தபால் நிலையம், வங்கி, ரேஷன் கடை, கையெழுத்துப் பிரதி உள்ளிட்டவை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இரண்டு ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப் படும் பள்ளியில் மேலம்பட்டி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராமப் புற மாணவர்கள் பயின்று வருகின்ற னர். பள்ளி தலைமையாசிரிய ராக வே.அண்ணாதுரை, உதவி ஆசிரியராக கா.இளங்கோ ஆகி யோர் உள்ளனர். மற்ற பள்ளிகளைக் காட்டிலும், தங்களது பள்ளியை முன்மாதிரி பள்ளியாக மாற்ற இரு ஆசிரியர்களும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் முதல்படியாக பள்ளியில் மாணவர்களுக்கு பாடப் புத்தகப் படிப்பு மட்டுமின்றி நடைமுறை வாழ்க்கைக்கு உகந்த பல்வேறு விஷயங்களை கற்றுத் தந்து, அவற்றை பள்ளியில் செயல் படுத்தவும் ஊக்கப்படுத்துகின்றனர். ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். பள்ளியில் தபால் நிலையம், சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வங்கி, சுய தேவை ரேஷன்கடை போன்றவை தொடங்கப்பட்டு மாணவர்களே அதை நிர்வகிக்கின்றனர்.

தபால் நிலையம் மூலம் மாணவர்கள் தங்களது கருத்துக் களை ஆசிரியர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துகின்றனர். அதுபோல், மாணவர்கள் தங்களிடம் உள்ள சிறு தொகையை பள்ளி உண்டியலில் சேமிக்கின்றனர். அத்தொகையை பள்ளி ஆசிரியர் களிடம் வழங்கி, அதன்மூலம் மாணவர்கள் தங்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகம், பென்சில் போன்றவற்றை வாங்கி, ரேஷன்கடை மூலம் மாணவர்களுக்கிடையே விற்பனை செய்கின்றனர்.

அதேபோல் பள்ளியளவில் சட்டப் பேரவை ஒன்றை நடத்துகின்றனர். அதற்கு முதல்வர், கல்வி அமைச்சர், நிதியமைச்சர் என மாணவர்கள் தங்களுக்கு உள்ளாகவே பிரதிநிதிகளை தேர்வு செய்து கூட்டமும் நடத்துகின்றனர். கூட்டத்தில், பள்ளி யில் மாணவர்களுக்கு தேவைப் படும் விஷயங்களை தெரிவிக்கின் றனர். அவற்றை கவனிக்கும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நடத்தும் சட்டப்பேரவை கூட்டத்தில் எடுக்கும் முடிவை அறிந்து, அவற்றை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிறைவேற்றுகின்றனர்.

மாணவர் சேர்க்கை 3 மடங்கானது

இதுபோன்ற நடவடிக்கையால் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. கடந்த 2014-15-ம் ஆண்டு 30 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, 2015-16-ம் ஆண்டு 60 எனவும், 2016-17-ம் ஆண்டு 93 ஆக வும் உயர்ந்துள்ளது. 60 மாணவர்கள் வரை இரு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். அதற்கு மேல் 90 மாணவர் வரை இருந்தால், 3 ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். இந்நிலையில் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ள தால் இந்தாண்டு கூடுதலாக ஒரு ஆசிரியர் பள்ளியில் நியமிக்கப் பட்டுள்ளார்.

எனினும், மாணவர் எண்ணிக் கைக்கு தகுந்தாற் போல் பள்ளியில் வகுப்பறை வசதியில்லை. அதனால், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமரவைக்கப்பட்டு பாடம் நடத்தும் நிலை உள்ளது. புதிய வகுப்பறை கட்டும் வரை மாணவர் கள் அமர்ந்து படிக்க ஏதுவாக கூடாரம் அமைக்க பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

கூடாரம் அமைக்க நிதியுதவி

இதற்கு அரசிடம் இருந்து நிதியை எதிர்பாராமல் தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் தலா ரூ.5 ஆயிரம் நன்கொடையாக வழங்கி கூடாரம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆசிரியர்களின் நட வடிக்கையை அறிந்த கிராம மக்க ளும் தங்களால் ஆன உதவியை பள் ளிக்கு அளிக்க முன்வந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி தலைமை யாசிரியர் வே.அண்ணாதுரை ‘தி இந்து’-விடம் கூறியதாவது:

பள்ளியின் செயல்பாட்டை பாராட்டி தொடக்க பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவில் சிறந்த தொடக்கப் பள்ளி என்ற கேடயம் வழங்கப்பட்டது. அதுபோல், கடந்த 2015-16-ம் கல்வியாண்டில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்து கல்வி வளர்ச்சி நாள் விழாவில் தொடக்கப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் காமராஜர் விருது வழங்கி ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

கூடுதல் வகுப்பறை கட்ட ரூ.3 லட்சம் வரை செலவு பிடிக்கும். புதிய வகுப்பறை கட்டும் வரை மாணவர்கள் பாதுகாப்பாக அமர்ந்து படிக்க கூடாரம் அமைக்க நானும், உதவியாசிரியரும் முடிவு செய்தோம். அதற்காக பள்ளிக்கு நன்கொடையாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கினோம். இதையறிந்த கிராம மக்கள் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளனர்.கிராம மக்களின் ஒத்துழைப்பும் பள்ளியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இந்தாண்டு பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் மூலம் பால், பிஸ்கட் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக, மேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும் விளங்குவதாக கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

மாணவர்கள் நடத்தும் இதழ்

மேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் குதூகலம் என்ற கையெழுத்துப் பிரதி மாதஇதழை நடத்தி வருகின்றனர். அதில் பொது அறிவு சம்பந்தப்பட்ட செய்தி, துணுக்கு, கட்டுரைகளை மாணவர்களே எழுதுகின்றனர். அதற்கான அட்டைப்படமும் பள்ளி மாணவ, மாணவியரே தயார் செய்கின்றனர். கையெழுத்துப் பிரதிகளை பிற பள்ளியினரும் நகல் எடுத்துச் சென்று, அவர்களது பள்ளி மாணவ,மாணவியரை ஊக்கப்படுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x