Published : 28 Nov 2013 03:50 PM
Last Updated : 28 Nov 2013 03:50 PM

ஏற்காடு தொகுதிக்கு தேவை சாலைகள்... வாக்குறுதிகள் அல்ல!

சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு தொகுதியில் மொத்தம் 67 மலை கிராமங்கள் இருக்கின்றன. இங்கு வசிக்கும் சுமார் 70 ஆயிரம் பேர், தோட்டத் தொழிலாளர்கள். இந்த கிராமங்களுக்கு சாலை வசதி கேட்டு கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகளின் பிரதான வாக்குறுதியாக இருப்பது சாலை வசதி செய்து தரப்படும் என்பதுதான். இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இப்போதும் ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் வாக்குறுதிகளில் இதுவே பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.

சாலை வசதி இல்லாததால் மலை கிராம மக்களின் கல்வி, மருத்துவம், அடிப்படை தேவைகள் எல்லாமே கேள்விக்குறியாக உள்ளது. ஏற்காடு - குண்டூர் - கன்னங்குறிச்சி சாலை, கூத்துமுத்தல் - கோவிலூர் சாலை, அரங்கம் - கொட்டச்சேடு சாலை ஆகியவை முக்கியமாக அமைக்கப்பட வேண்டிய சாலைகளாகும்.ஏற்காடு நகரில் இருந்து தெப்பக்காடு, குண்டூர், காசிக்கல், கீந்துக்காடு, சர்வந்தி ஆகிய கிராமங்கள் வழியாக சேலம் நகரின் ஏற்காடு மலை அடிவாரத்தில் இருக்கும் கன்னங்குறிச்சிக்கு சாலை அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கை. இது நிறைவேறினால் சேலம் - ஏற்காட்டுக்கு கூடுதலாக ஒரு சாலை கிடைக்கும்.

அதேபோல ஏற்காடு நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள கூத்துமுத்தல் கிராமம் தொடங்கி மேல் கோவிலூர், தாழ் கோவிலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சாலை வசதி கிடையாது. இந்தப் பகுதியிலும் ஒரு சாலை அமைக்க வேண்டும். ஏற்காடு நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருக்கும் அரங்கம் கிராமம் தொடங்கி செந்திட்டு, கே.நார்த்தன்சேடு, கொட்டச்சேடு வழியாக சாலை அமைத்தால் 14 கிராம மக்கள் பயன் பெறுவர். இதுமட்டுமின்றி வெள்ளக்கடை - கொலப்படிக்காடு சாலை, பட்டிபாடி வேலூர் - கொண்டையனூர் - சொனைப்பாடி சாலை, கீரைக்காடு புத்தூர் - புளியங்கடை சாலைகளும் அமைக்கப்பட வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

ஏற்காடு - பெங்களுர் சாலை

ஏற்காடு - கொலகூர் - சொரக்கா ப்படி வழியாக டேனிஷ்பேட்டைக்கு வழி இருக்கிறது. இந்தத் தடத்தில் சாலை அமைத்தால் பெங்களுர், ஒசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்கள், சேலம் வராமலே தீவட்டிப்பட்டி, டேனிஷ்பேட்டை வழியாக எளிதாக ஏற்காட்டை அடையலாம். இதனால் 60 கி.மீ. தூரம் மிச்சமாகும். சேலம் நகரிலும் போக்குவரத்து நெரிசல் குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x