Published : 21 Jan 2014 09:53 AM
Last Updated : 21 Jan 2014 09:53 AM

ஆத்தூர் அ.தி.மு.க. எம்எல்ஏவின் கட்சிப் பதவி பறிப்பு ஏன்?

ஆத்தூர் எம்.எல்.ஏ. மாதேஸ்வரன் அரசு விழாவில் பேசியதை அடுத்து, சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்த ஆத்தூர் எம்.எல்.ஏ. மாதேஸ்வரன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சிப் பதவி பறிப்புக்கு காரணம் என்ன என்பது குறித்த பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:

சேலம் மாநகர மாவட்ட செய லாளராகவும், சேலம் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்ப வர் செல்வராஜ். புறநகர் மாவட்ட செயலாளராக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி கே. பழனிசாமி இருந்து வருகிறார்.

புறநகர் பகுதியில் அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமியைக் காட்டிலும், அவரது ஆதரவாளர் களின் கை ஓங்கி உள்ளது.

இளங்கோவன் மீது அதிருப்தி

கிழக்கு மாவட்டத்தைப் பொருத்த வரை அமைச்சர் பழனி சாமியின் தீவிர ஆதரவாளராக இளங்கோவன் செயல்பட்டு வருகிறார். இவருடன் ஆத்தூர் எம்.எல்.ஏ. மாதேஸ்வரனுக்கு இணக்கமான சூழல் இல்லை. இதனால், அரசு ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் எதையும் சாதிக்க முடியாதவராக இருந்து வந்துள்ளார். ஆத்தூரில் இளங்கோவன் வைத்ததே எழுதப்படாத சட்டமாக உள்ளது.

இரண்டு முறைக்கு மேலாக அரசு விழாக்களில் எம்.எல்.ஏ. மாதேஸ்வரனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியிடம், எம்.எல்.ஏ. மாதேஸ்வரன் மனக்குறையை கூறியுள்ளார். ஆனால், அதனை அமைச்சர் கண்டுகொள்ளவில்லை.

எம்.எல்.ஏ. பகிரங்க புகார்

இதனால், விழாவில் மாதேஸ்வரன் பேசும்போது, “எனக்குத் தெரியாமல் அரசு விழா நடத்தியுள்ளனர். அழைப்பிதழில் முக்கியத்தும் அளிக்காமல் புறக்கணித்துள்ளனர். இதற்கு ஆட்சியர் தகுந்த பதில் அளிக்கவில்லை” என அடுக்கடுக்காக குற்றம்சாட்டி பேசினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், “தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் நாம் அனைவரும் அடையாளம் காட்டப்பட்டுள்ளோம். அவர் பிடித்தால் தான் நாம் பிள்ளையார். இல்லையெனில் அது என்னவென்று உங்களுக்கே தெரியும். முதல்வர் ஜெய லலிதாவை தவிர வேறு யாருக்கும் மரியாதை இல்லை. அதை எதிர்பார்க்கவும் கூடாது” என்றார்.

மாதேஸ்வரன் விவகாரத்தை தலைமைக்கு புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சரின் ஆதரவாளர்களின் கோஷத்தால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஷயம் சென்றுள்ளது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x