Published : 23 Nov 2013 09:15 AM
Last Updated : 23 Nov 2013 09:15 AM

அமெரிக்க கப்பல் ஆயுதங்கள் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

தூத்துக்குடியில் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க கப்பலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் பரிசோதனைக்கு பிறகு, பலத்த பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த, அமெரிக்காவைச் சேர்ந்த, தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ என்ற கப்பலை, இந்தியக் கடலோர காவல் படை யினர் கடந்த அக்டோபர் 12-ம் தேதி சிறை பிடித்தனர். இது தொடர்பாக கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவுசெய்து கப்பலில் இருந்த 10 மாலுமிகள், 25 பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை கைது செய்தனர்.

கப்பலில் இருந்த 35 அதி நவீன துப்பாக்கிகளும் 5,680 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆயுதங்கள் அனைத்தும் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ஆயுத கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்த ஆயுதங்கள் குறித்து, கப்பலில் கைதானவர்கள் முறை யாக பதில் சொல்லவில்லை. முறையான ஆவணங்களையும் சமர்ப்பிக்கவில்லை. இதையடுத்து இந்த ஆயுதங்களின் தன்மை குறித்து, சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தின், ஆயுதங்கள் பிரிவு நிபுணர்களின் பரிசோதனைக்கு உட்படுத்த, தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டது.

ஆயுதங்கள் அனைத்தும், அக்டோபர் 31-ம் தேதி பலத்த பாதுகாப்புடன் சென்னை கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டன. பரிசோதனை முடிவடைந்து, பரிசோதனை அறிக்கையும் தயாரா னது. இதையடுத்து, ஆயுதங்களை மீண்டும் தூத்துக்குடிக்கு கொண்டு வர அனுமதி கோரி, கியூ பிரிவு போலீசார் தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர்மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அதற்கு அனுமதியளித்து, நீதித்துறை நடுவர் சி.கதிரவன் புதன்கிழமை உத்தரவிட்டார். கியூ பிரிவு உதவி ஆய்வாளர் ஜேசன் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் நம்பிராஜன் தலைமையில் போலீசார் சென்னை சென்று ஆயுதங்களையும், பரிசோதனை அறிக்கையையும் பெற்றுக்கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலை தூத்துக்குடி திரும்பினர்.

ஆயுதங்கள் அனைத்தும் நீதித்துறை நடுவர் சி.கதிரவன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன. ஆயுதங்களை ஆய்வு செய்த நீதிபதி, அவற்றை மீண்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆயுதக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டார். ஆயுதங்களின் பரிசோதனை அறிகையை, நீதித்துறை நடுவர் ஆய்வு செய்து வருகிறார். இந்த அறிக்கையின் நகல் கேட்டு, கியூ பிரிவு போலீசார் முதலாவது நீதித்துறை நடுவர்மன்றத்தில் தனியாக மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x