Published : 24 May 2017 12:59 PM
Last Updated : 24 May 2017 12:59 PM

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தினம் ஒரு அறிவிப்பு என்பது விளம்பர நடவடிக்கையே: மு.க.ஸ்டாலின்

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் தினம் ஒரு அறிவிப்பு என்று வெளியிடாமல் சிறந்த கல்வியாளர்களை கொண்டு குழு அமைத்து விவேகமான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு பொதுத் தேர்வு’, என திடீரென்று ஒரு அரசாணையை பள்ளிக் கல்வித் துறை 22.5.2017 அன்று வெளியிட்டு இருக்கின்றது. 2012 ல் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், அரசு பொதுத் தேர்வு இயக்குனர் 17.5.2017 அன்று ஒரு கடிதம் எழுதியதாகவும், அந்தக் கடிதத்தின் அடிப்படையில் 22.5.2017 அன்று சுமார் 8 லட்சத்துக்கும் மேலாக உள்ள மாணவர் சமுதாயத்தின் எதிர்காலம் பற்றிய கல்வி விஷயத்தில், மிகவும் அவசர கோலத்தில் இந்த அரசாணையை அதிமுக அரசு வெளியிட்டிருப்பதன் நோக்கம் ’கல்வித்தரத்தை உயர்த்துவதா அல்லது நாங்களும் செயல்படுகிறோம்” என்று வெளி உலகிற்கு காட்டிக் கொள்ளவா என்ற சந்தேகம் எழுகிறது.

மாணவர்களின் கல்வித்தரம் குறைவதற்கும், அகில இந்திய அளவிலான முக்கிய நுழைவுத் தேர்வுகளை எழுத அவர்கள் தயங்குவதற்கும், “மேல்நிலை முதலாம் ஆண்டு பாடத் திட்டங்களை” கல்வி நிறுவனங்கள் உரியமுறையில் கற்றுக் கொடுப்பதில்லை என்பது மட்டுமே காரணம் என்று சித்தரிப்பது,

கல்வித்தரத்தை உயர்த்தும் ஒரு அரசின் நேர்மையான முயற்சியல்ல என்றே கருதுகிறேன். அதிமுக அரசு தற்போது வெளியிட்டுள்ள ஆணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கோத்தாரி கல்விக்குழுவின் அறிக்கையிலையே, “முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள கல்வியின் தரம் மேல்நிலைக் கல்விக்கு முக்கியம். மேல்நிலைக் கல்வியின் தரம் பல்கலைக்கழக கல்விக்கு முக்கியம்”, என்று கூறியிருப்பதை வசதியாக மறந்துவிட்டு, “ஏதோ பதினோறாவது வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்படாதது மட்டுமே மாணவர்களை பாதிக்கிறது” என்று பிரச்சாரம் செய்வது தவறானது.

கோத்தாரி கல்விக்குழு அறிக்கை தயாரிக்கும் முன்பு 12 செயல்குழுக்கள் (Task Force) அமைக்கப்பட்டன. 7 பணிக்குழுக்கள் (Working group) உருவாக்கப்பட்டன. புகழ்பெற்ற கல்வியாளர்களுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. 2400 க்கும் மேற்பட்ட கருத்துரைகள் பெறப்பட்டன. மேலும், மாண்புமிகு பிரதமர் அவர்களையும், மேதகு குடியரசுத் தலைவர் அவர்களையும் சந்தித்துப் பேசியபிறகே, அப்படியொரு சிறந்த கல்வி சீர்திருத்தம் தொடர்பான அறிக்கையை ’கோத்தாரி கல்விக்குழு’ அளித்தது.

ஆனால் அதிமுக அரசு 2012-ல் அமைத்ததாகக் கூறும் வல்லுநர் குழுவில் யார் யார் இடம் பெற்றார்கள்? அவர்கள் யார் யாரிடம் கருத்துக் கேட்டார்கள்? அந்த அறிக்கையில் கூறப்பட்ட ஒட்டுமொத்த பரிந்துரைகள் என்ன? அந்த பரிந்துரைகள் முதலமைச்சர் அவர்களால் பரிசீலிக்கப்பட்டதா? குறைந்தபட்சம் அமைச்சரவைக் கூட்டத்தில் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான இந்த மிக முக்கிய முடிவுபற்றி ஆலோசனை செய்யப்பட்டதா? ஆகிய விவரங்கள் எல்லாம் அதிமுக அரசின் அரசாணையில் தெளிவாக இல்லை.

அதேநேரத்தில் 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளிலும் தொடர்ந்து மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திக்க வேண்டிய கட்டாயம், 12 ஆம் வகுப்பு முடித்ததும் அகில இந்திய தேர்வுகளுக்கு போட்டியிட வேண்டிய சூழல் எல்லாம் மாணவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை உருவாக்கும். மிக முக்கியமான இந்தப் பிரச்சினை பற்றி உரிய கவனத்துடன் ஆலோசனை செய்யப்பட்டதாக தெரியவில்லை.

கோத்தாரி கல்விக் குழுவின் அறிக்கையிலேயே மாணவர்கள் சந்திக்கும் இந்த நெருக்கடி பற்றி விவாதிக்கப்பட்டு, “10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வுகளை மாணவர்கள் சந்திக்கும் நிலையை தவிர்ப்பதற்காகவே மேல்நிலைக் கல்வி இரு ஆண்டுகளாக பகுக்கப்பட்டு, 12 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு என்ற நிலை கொண்டு வரப்பட்டது” என்பதையும் அதிமுக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

“மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்” என்ற நோக்கத்தில் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தால், அதை வரவேற்க திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் தயங்காது. ஆனால் மாணவர்கள், பெற்றோர்களின் சிரமங்களை உணராமலும், கோத்தாரி கல்விக்குழுவே கவலைப்பட்ட “பொதுத்தேர்வு” பற்றியும் ஆலோசிக்காமல் ஒரு முடிவை எடுக்கும்போது, பிரதான எதிர்க்கட்சி என்றமுறையில் அதை சுட்டிக்காட்டுவது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பு என்றே கருதுகிறேன்.

குறிப்பாக “பட்டப் படிப்பில் அனுமதிக்கப்படுவதற்கு 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் கல்விதான் நாட்டின் இலட்சியமாக இருக்க வேண்டும்” என்று 1964ல் மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட விருப்பத்திற்கு மாறாக, அதிமுக அரசின் முடிவு அமைந்து விடுமோ என்ற அஞ்சும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதே கோத்தாரி கல்விக்குழுதான் “பள்ளியின் தரத்தால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது” என்று சுட்டிக்காட்டியதையும் நாம் இந்த நேரத்தில் மறந்து விடக்கூடாது.

அதையெல்லாம் எண்ணி தான் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, ஆசிரியர்கள் நியமனம், பள்ளிகளில் கணிணிப் பாடம், கணிணி ஆசிரியர்கள் நியமனம், ஆங்கிலப் பயிற்சி உள்ளிட்ட படிப்படியான ஆக்கபூர்வமான பல்வேறு நடவடிக்கைகளையும், சமச்சீர் கல்வி, சமச்சீர் கல்வியின் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளையும் திமுகழக அரசு அமைந்த போதெல்லாம் மேற்கொள்ளப்பட்டன.

ஆகவே திடீரென்று “கிரேட் முறை”, “சீருடை மாற்றம்” “மேல்நிலை முதலாண்டில் பொதுத் தேர்வு” என்ற “விளம்பர நடவடிக்கைகளை” எடுப்பதைக் காட்டிலும், முதலாம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வியின் தரத்தையும் உயர்த்த தேவையான பாடத்திட்டங்கள், கல்வி பயிற்றுவிக்கும் முறைகள், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமனம் போன்ற “விவேகமான திட்டங்களை” நிறைவேற்ற அதிமுக அரசு முன் வர வேண்டும் என்றும், “இந்தியாவின் தலைவிதி பள்ளிகளில் நிர்ணயிக்கப்படுகிறது” என்று சுட்டிக்காட்டிய “கோத்தாரி கல்விக்குழு”வின் எண்ணவோட்டத்தை அதிமுக அரசு மனதில் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

“தினமும் ஒரு அறிவிப்பு” என்பதுதான் கல்வியின் தரத்தை உயர்த்தும் என்ற அளவோடு இந்த முயற்சிகள் அமைந்துவிடாமல், தொடர்ந்து மூன்று வருடம் பொதுத் தேர்வுகளை சந்திக்க வேண்டிய மன அழுத்தத்தைப் போக்க என்ன வழி? மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க என்ன வழி? பள்ளிகளின் தரத்தை படிப்படியாக தேசிய அளவிலான கல்வித்தரத்திற்கு உயர்த்துவதற்கு என்ன வழி? போன்றவை குறித்து சிறந்த கல்வியாளர்கள் கொண்ட குழுவினை அமைத்து, பள்ளிக் கல்வியை, குறிப்பாக 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள பள்ளிக் கல்வியில் சீர்திருத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x