Published : 23 Feb 2017 10:47 AM
Last Updated : 23 Feb 2017 10:47 AM

சென்னையில் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து 3 பேர் பலி

படிக்கட்டில் தொங்கியவரின் பேக், சிக்னல் கம்பத்தில் மாட்டியது; காப்பாற்ற முயன்றவர்களும் கீழே விழுந்து படுகாயம்;

4 பேருக்கு தீவிர சிகிச்சை

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு சென்றுகொண்டிருந்த புறநகர் மின்சார விரைவு ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த இளைஞரின் பேக், சிக்னல் கம்பத்தில் மாட்டி இழுத்ததில் அவர் உட்பட 3 பேர் வெளியே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். அவரைக் காப்பாற்ற முயன்ற சக பயணிகள் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை கடற்கரை தாம்பரம் இடையே தினமும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரை செங்கல்பட்டு இடையிலான ரயில் களும் இதே மார்க்கத்தில் குறிப் பிட்ட இடைவெளியில் இயக்கப்படு கின்றன. பரபரப்பான காலை, மாலை நேரங்களில் புறநகர் மின்சார விரைவு ரயில்கள் இயக்கப்படும். விரைவு ரயில்கள் என்பதால், குறிப்பிட்ட நிலையங்களில் மட் டுமே இவை நின்று செல்லும். விரைவாக செல்லலாம் என்பதால், இந்த ரயில்களில் கூட்டமும் அதிகம் காணப்படும்.

படியில் நின்று பயணம்

இந்நிலையில், செங்கல்பட்டில் இருந்து வியாழக்கிழமை காலையில் புறப் பட்ட புறநகர் மின்சார விரைவு ரயில், கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்தது. காலையில் வேலைக்கு செல்லும் ஏராள மானோர் இதில் பயணம் செய் தனர். கூட்ட நெரிசல் அதிகம் இருந்ததால், இளைஞர்கள் பலரும் ரயில் படியில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

பழவந்தாங்கலை அடுத்து பரங்கிமலை அருகே காலை 9.15 மணி அளவில் ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது, படியில் தொங்கும் இளைஞர் ஒருவர் முதுகில் மாட்டியிருந்த பேக், எதிர்பாராதவிதமாக அருகே இருந்த சிக்னல் கம்பத்தில் திடீரென சிக்கியது. இதனால், கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் வெளியே விழுந்தார்.

படிக்கட்டில் அவருக்கு அருகே நின்றிருந்த பயணிகளும், அவரது நண்பர்களும் உடனே சுதாரித்து அவரைப் பிடித்து காப்பாற்ற முயன் றனர். நிலைதடுமாறியதில் அவர் களும் ரயிலுக்கு வெளியே விழுந் தனர். இதில் அந்த இளைஞர் உட்பட 7 பேர் வெளியே சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர்.

இதில், பீர்க்கன்காரணையை சேர்ந்த வெல்டர் பிரவீன் ராஜ் (18), பெருங்களத்தூர் பாரதி நகரை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் மணிகண்டன் (20) ஆகியோர் ரயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந் தனர். பெருங்களத்தூர் பார்வதி நகரை சேர்ந்த கோபிநாத் (29), மணிகண்டன் (20), மதுசூதனன் (27), தேவராஜ் (26), ஊரப்பாக்கத்தை சேர்ந்த சாமுவேல் (21) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உறவினர்கள் கதறல்

விபத்து குறித்து தகவல் தெரிந் ததும், ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து ஆய்வு நடத் தினர். பின்னர், இறந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுக் கப்பட்டது. இறந்த 2 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட் டன. அங்கு உடல்களைப் பார்த்து உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர்.

4 பேருக்கு தீவிர சிகிச்சை

இதற்கிடையில், படுகாயம் அடைந்த 5 பேரும் ரத்தம் கொட்டிய நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், அவர்கள் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சாமுவேல் உயிரிழந்தார். மற்ற 4 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தெற்கு ரயில்வே சென்னை கோட்ட கூடுதல் மேலாளர் ஏ.எல்.பிரபாகர், ரயில்வே பாதுகாப்பு படை மூத்த ஆணையர் அஸ்ரப், ஆலந்தூர் தாசில்தார் ராணி, எழும்பூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அமோஷ், எழும்பூர் ரயில் நிலைய மேலாளர் பிரபாகர் உட்பட பலரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இறந்த பிரவீன்ராஜின் உறவினர் சவுந்தர் கண்ணீர் மல்க கூறிய தாவது:

நான், இறந்த பிரவீன்ராஜ் உட்பட மொத்தம் 16 பேர் துறைமுகத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வருகிறோம். தினமும் இந்த ரயிலில்தான் ஏறுவோம். அலுவல கத்துக்கு ஒரு மணிநேரம் தாமதமாகி விட்டால், அன்று வேலை வழங்கப் படாது. திருப்பி அனுப்பி விடுவார் கள். எங்களுக்கு ஊதியம் கிடைக் காது. இதனால், எவ்வளவு சிரமப் பட்டாவது இந்த ரயிலில் ஏறி விடுவோம்.

செங்கல்பட்டில் இருந்து வரும் இந்த புறநகர் மின்சார விரைவு ரயில் வழக்கமாக காலை 8.20 மணிக்கு பெருங்களத்தூருக்கு வரும். இன்று (23-ம் தேதி) 8.30 மணிக்குதான் வந்தது. செங்கல்பட்டு ரயிலில் ஏற் கெனவே கூட்டம் அதிகம் இருக்கும். 10 நிமிடம் தாமதமானதால், ரயில் நிலையத்திலும் கூட்டம் சேர்ந்து விட்டது. அதனால், எல்லோரும் முண்டியடித்து ஏறினோம்.

பழவந்தாங்கலைக் கடந்து ரயில் சென்றபோது, திடீரென பிரவீன்ராஜின் பேக், சிக்னல் கம்பத்தில் மாட்டிக்கொண்டது. நண்பர்கள் சுதாரித்து, அவரை உள்ளே இழுக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவர்கள் அனைவரும் வெளியே தூக்கி வீசப்பட்டனர்.

மாதந்தோறும் விபத்து

விபத்தின்போது அருகில் இருந்த என்.வினோத்குமார் என் பவர் கூறியதாவது:

இந்த விரைவு பாதைகளில் மாதந் தோறும் விபத்து நடக்கிறது. இத னால், காயமடைவதும் உயிரிழப்பும் தொடர்ந்து நடக்கின்றன. காலையில் தண்டவாளத்தில் இருக்கும் ஜல்லிக் கற்களின் சத்தம் வேகமாக கேட்டது. நானும் நண்பர்களும் ஓடி வந்தோம். ரயில் சக்கரத்தில் சிக்கி 2 பேர் இறந்துவிட்டனர். மற்றவர்கள் கை, கால், முகத்தில் பயங்கர காயத் துடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தோம். காலை, மாலை நேரங்களில் எல்லா ரயில்களிலும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இன்னும் அதிக எண்ணிக்கையில் புறநகர் ரயில் களை இயக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விசாரணை குழு அமைப்பு

தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

பரங்கிமலை ரயில் நிலையப் பகுதியில் மொத்தம் 5 ரயில் பாதைகள் உள்ளன. விபத்து நடந்த செங்கல்பட்டு கடற்கரை மின்சார விரைவு ரயில், 3-வது பாதையில் வந்தது. பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சுமார் 500 மீட்டர் முன்பாக உள்ள சிக்னல் கம்பத்தில்தான் அந்த இளைஞரின் பேக் மாட்டியுள்ளது.

ரயில் பாதையின் மையப் பகுதியில் இருந்து, 2.31 மீட்டர் தொலைவில் சிக்னல் கம்பம் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. சிக்னல் மற்றும் இயக்கப் பிரிவு அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தி, சிக்னல் கம்பம் சரியான இடத்தில்தான் இருக்கிறது என்பதை தற்போது உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து முழுமையாக ஆய்வு நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x