Published : 07 Jan 2015 09:58 AM
Last Updated : 07 Jan 2015 09:58 AM

தமிழர்களிடையே வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைவாக இருக்கிறது: புத்தக வெளியீட்டு விழாவில் சாரு நிவேதிதா வேதனை

தமிழர்களிடையே வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைவாக உள்ளது என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா வேதனை தெரிவித்தார்.

சாரு நிவேதிதா எழுதிய ‘புதிய எக்ஸைல்’ என்ற நூல் சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. விழாவில் சாரு நிவேதிதா பேசியதாவது:

தமிழ்நாட்டில் சினிமாவுக்குக் கொடுக்கப்படும் மரியாதை இலக் கியத்துக்குக் கொடுக்கப்படு வதில்லை. துருக்கியில் ஓரான் பாமுக்கின் புத்தகங்கள் லட்சக் கணக்கில் விற்பனையாகின்றன. இந்தியாவிலும் சேட்டன் பகத்தின் சமீபத்திய நாவல் வெளியாகி இரண்டே வாரத்தில் 20 லட்சம் பிரதிகள் விற்றன. ஆனால் 8 கோடி பேர் வசிக்கும் தமிழ்நாட்டில் ஒரு இலக்கியவாதியின் புத்தகம் அதிகபட்சம் 3000 பிரதிகளுக்கு மேல் விற்பதில்லை. தமிழர்களிடையே வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைவாக இருக்கிறது.

தமிழின் சமகால இலக்கியத்தை உலக அரங்கில் கொண்டு செல்வதற்கு நம்மிடையே ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை. ஓரான் பாமுக்கை நமக்குத் தெரிகிறது. ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளனையும் துருக்கியில் தெரியாது. தமிழ்நாட்டில் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குத் தமிழும் தமிழ் தெரிந்தவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாத நிலை உள்ளது.

இந்த நாவலை எழுதுவதற்காக 3 ஆண்டுகள் என்னுடைய உடலையே பரிசோதனைக் களமாக மாற்றிக்கொண்டேன். அகத்தியர், தொல்காப்பியர், போகர் என்ற சித்தர் மரபிலிருந்து இன்றைய தமிழனின் வீழ்ச்சி வரை ‘புதிய எக்ஸைல்’ புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறேன். இவ்வாறு சாரு நிவேதிதா குறிப்பிட்டார்.

விழாவில் தருண் தேஜ்பால், நெல்சன் சேவியர் மற்றும் பலர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x