Published : 16 Jul 2016 06:17 PM
Last Updated : 16 Jul 2016 06:17 PM

மக்கள் நலன் காப்பதில் இந்தியாவுக்கு வழிகாட்டும் தெலங்கானா: ராமதாஸ்

தமிழக ஆட்சியாளர்கள் ஊழலை ஒதுக்கி வைத்து விட்டு, தெலங்கானா மாநிலத்தைப் போன்று மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்தியாவில் மக்கள்நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள் எவை? என்பதை அறிவதற்காக மத்திய உளவுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு நடத்தியதாகவும், அதில் தெலங்கானா முதலிடம் பிடித்திருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இந்தியாவின் சிறந்த முதல்வர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் இரண்டாவது இடத்தையும், சத்தீஸ்கர் முதல்வர் ரமன்சிங் மூன்றாவது இடத்தையும், குஜராத் முதல்வர் ஆனந்திபென் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 13 ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற நேரத்தில் நடந்த இந்தக் கணக்கெடுப்பில் தமிழகம் சேர்த்துக் கொள்ளப்பட்டதா? அவ்வாறு சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனையாவது இடம்? என்பன போன்ற வினாக்களுக்கு எல்லாம் இந்த ஆய்வின் முடிவுகளை பிரதமர் நரேந்திரமோடி அல்லது அவரது அலுவலகம் அதிகாரபூர்வமாக வெளியிட்ட பிறகு தான் சரியான விடை கிடைக்கும்.

அதேநேரத்தில், ஒரு மாநில முதல்வரின் செயல்பாடுகளை மத்திய அரசின் உளவுத்துறையும், தனியார் நிறுவனங்களும் தன்னிச்சையாக ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியல் தயாரிப்பது முறையா? என்ற வினாவும் எழுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசங்கள் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை. மத்திய அரசும், மாநில அரசுகளும் தண்டவாளம் போல இணைந்து செல்ல வேண்டும் என்பது தான் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தவர்களின் நோக்கமாக இருந்திருக்கிறது.

அவ்வாறு இருக்கும் போது, மாநில அரசுகளை மாணவர்களாக நினைத்து, அவற்றின் செயல்பாடுகளை தனியார் நிறுவனங்கள் மற்றும் உளவுத்துறை மூலம் மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்குவதும், தரவரிசை தயாரிப்பதும் ஆரோக்கியமானது அல்ல. இது மத்திய, மாநில அரசுகளிடையே ஆண்டான் - அடிமை மனநிலை ஏற்படுவதற்கே வழி வகுக்கும்.

இந்த ஒரு விஷயத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால், இதிலிருந்து மாநில அரசுகள் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன. இந்தியாவின் சிறந்த முதல்வராக அடையாளம் காட்டப்பட்டுள்ள தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் செயல்படுத்தி வரும் திட்டங்கள் அற்புதமானவை.

தெலங்கானாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுக்காக்கப்பட்ட குடிநீரை குழாய்கள் மூலம் வழங்க வேண்டும் என்ற நோக்குடன் பகீரதன் இயக்கம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத வகையில் மொத்தம் ரூ.40,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும் இத்திட்டத்தின் மூலம் 1.25 லட்சம் கி.மீ. நீளத்திற்கு குழாய் பாதைகள் அமைக்கப்பட்டு, 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படவுள்ளது.

அதுமட்டுமின்றி, காகத்தியா இயக்கம் என்ற திட்டத்தின்படி தெலங்கானா மாநிலத்தில் உள்ள 45 ஆயிரம் ஏரிகளும் தூர்வாரப்பட்டு, மேம்படுத்தப்படவுள்ளன. ரூ.25,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் 2019 ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும். அத்துடன் சுற்றுச்சூழலை காக்கும் நோக்குடன் தெலங்கானாவின் பசுமைப்பரப்பை 27 விழுக்காட்டிலிருந்து 33 விழுக்காடாக அதிகரிக்கும் நோக்குடன் 230 கோடி மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், விவசாயத்திற்கான நீர் ஆதாரங்களை பாதுகாக்க ஏரிகளைத் தூர்வாறுதல், மழையை உறுதி செய்ய மரம் வளர்ப்பு என இவற்றை விட சிறந்த மக்கள் நலத் திட்டங்களை எவரும் செயல்படுத்த முடியாது.

இந்த 3 திட்டங்களுக்காக ரூ.80,000 கோடி செலவிடப்படுகிறது. அந்த வகையில், சிறந்த முதல்வராக சந்திரசேகர ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பொருத்தமானது தான். அதேநேரத்தில் தமிழகத்தில் மக்கள் நலப் பணிகள் எவ்வாறு செயல்படுத்தப் படுகின்றன என்பதைப் பார்க்கும்போது வேதனையே விஞ்சுகிறது.

தெலங்கானாவில் 2018-ஆம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவது உறுதியாகி விட்ட நிலையில், தமிழகத்தில் அறிவிக்கப்பட்டகுடிநீர் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தி முடிக்கப்பட்ட பிறகும் கூட, கிராமப்பகுதிகளில் 35% அளவுக்கும், சென்னையில் 48% அளவுக்கும் மட்டுமே குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். அதன்பிறகும் தமிழகத்தில் மூன்றில் இரு பங்குக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்பது வெறும் கனவாகவே இருக்கும்.

ஆந்திரத்தில் 45,000 ஏரிகள் தூர்வாரப்படும் நிலையில், தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஏரிகள் தூர்வாரப்படவில்லை. அதுமட்டுமின்றி, 50 ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஆயிரக்கணக்கான ஏரிகள் அக்கட்சிகளைச் சேர்ந்தவர்களால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. அதனால் தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையால் சென்னை மற்றும் புறநகர மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடப்படுவதாகக் கணக்குக்காட்டப்படும் போதிலும், தமிழகத்தில் பசுமைப் பரப்பு ஒரு விழுக்காடு கூட அதிகரிக்கவில்லை.

தெலங்கானா உருவாக்கப்பட்டு 2 ஆண்டுகள் மட்டுமே ஆகும் போதிலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது உட்பட எல்லா விஷயங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இலக்குகளை அறிவிப்பதுடன் மட்டும் நின்று விடாமல் அவற்றை செயல்படுத்துவதிலும் தீவிரம் காட்டுகிறது; அங்கு ஊழல் இல்லை. ஆனால், தமிழகத்தில் ஊழல் மட்டுமே உள்ளது; திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற துடிப்பு இல்லை. அதனால் தான் தொலைநோக்குத் திட்டம்- 2023 அறிவிக்கப்பட்டு நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பிறகும் அதன் இலக்குகளை எட்டுவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அதன்விளைவு தான் அனைத்து நிலைகளிலும் தமிழகம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தமிழக ஆட்சியாளர்கள் இனியாவது ஊழலை ஒதுக்கி வைத்து விட்டு, தெலங்கானா மாநிலத்தைப் போன்று மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மாறாக, இதே அணுகுமுறையை ஆட்சியாளர்கள் தொடர்ந்தால் அதன்பின் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x