Published : 19 Jun 2017 05:45 PM
Last Updated : 19 Jun 2017 05:45 PM

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் சிறுவணிகக் கடன் உச்சவரம்பு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்: முதல்வர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் சிறுவணிகக் கடன் உச்சவரம்பு ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று எரி சக்தி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதற்குப் பிறகு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி சில அறிவிப்புகளை வாசித்தார்.

அதில் அவர் பேசியதாவது:

''தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு பாதுகாப்பு அளிப்பது நமது பொது விநியோகத் திட்டத்தின் முக்கியக் குறிக்கோளாகும். நாடு முழுவதும் செயல்படும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நாம் பின்பற்றினாலும் வருமான அடிப்படையினை கருத்தில் கொள்ளாமல், பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானதாக தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பொது விநியோகத் திட்டம் தனி சிறப்பாக கருதப்படுகின்றது. இப்படிப்பட்ட முன்னோடி திட்டங்களைத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் நலன் கருதி செயல்படுத்தினார்.

இச்சிறப்பு மிக்க நமது பொது விநியோகத் திட்டத்திற்கு நம் கூட்டுறவு சங்கங்களே பக்கபலமாக இருக்கின்றன. தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் இச்சங்கங்கள் வேளாண் உற்பத்தியை பெருக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் இந்த அரசு, அவரின் எண்ணப்படியே கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் சிறப்பான திட்டங்களைத் தீட்டி அதை மக்களின் நலனுக்காக செயல்படுத்துகிறது.

அதன் அடிப்படையில், கீழ்க்கண்ட அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தை முழு கணினிமயமாக்கலின் ஒரு பகுதியாக அனைத்து நியாய விலைக் கடைகளிலும் விற்பனை இயந்திரம் வழங்கப்பட்டு, அதன் மூலம் குடும்ப அட்டைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர் கோரும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விவரம் மேற்படி இயந்திரத்தில் பதிவு செய்தவுடன், குடும்ப அட்டைதாரரால் பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு அவர் பெற்ற பொருட்கள் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்களுக்கான பட்டியல் தற்போது வழங்கப்படுவதில்லை. இதை சரி செய்யும் விதமாகவும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்பட வேண்டுமென்பதாலும், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரல்ரேகை படிப்பி மற்றும் அச்சுப்பொறி வழங்கப்படும்.

2. நமது நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வணிக வங்கிகளுக்கு இணையாக, விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் வழங்கும் சேவையை மேம்படுத்தவும், கிராமப்புறங்களில் பொதுமக்களுக்கு நவீன வங்கி சேவையினையும் வழங்க நபார்டு வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு மைய வங்கியியல் கணினி சேவை முறை 134.67 கோடி ரூபாய் செலவில் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

3. கூட்டுறவு நிறுவனங்களில், சொந்த அடிமனை இருந்தும், வாடகைக் கட்டிடங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களுக்கும் சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படவேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையை செயல்படுத்திட, இந்த ஆண்டில் 114 கூட்டுறவு நிறுவனங்களுக்கு 23 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சொந்தக் கட்டிடங்கள் கட்டப்படும். மேலும், மதுரை மாவட்டம், விரகனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 70 லட்சம் ரூபாய் செலவில் வணிக வளாகம் கட்டப்படும். வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே சேவை அளிக்கும் பொருட்டு திருச்சி மற்றும் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் 15 புதிய கிளைகள் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்படும். கூட்டுறவு நிறுவனங்களின் தோற்றப் பொலிவினை அழகுபடுத்தும் பொருட்டு, வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறவும், வணிக வங்கிகளுக்கு ஈடாக கூட்டுறவு சங்கங்களின் சேவையை வழங்க 27 கூட்டுறவு நிறுவனங்கள் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் நவீன மயமாக்கப்படும்.

4. சிறு வணிகர்கள், தனியாரிடமிருந்து அதிக வட்டியில் கடன் பெறுவதை தவிர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு, மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் தற்போது வழங்கப்பட்டு வரும் சிறு வணிகக் கடன் உச்ச வரம்பினை 10,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

5. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சென்னையில் அண்ணாநகர், நந்தனம், திருவான்மியூர், தங்கசாலை மற்றும் கோபாலபுரம் ஆகிய 5 இடங்களில் கிடங்கு வளாகங்கள் உள்ளன. அவற்றில் 86,068 மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் இருப்பு வைத்து கையாளப்படுகிறது. இதிலிருந்து சென்னை மாநகரைச் சுற்றிலும் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் பொது விநியோக திட்டத்திற்கான பொருட்கள் நகர்வு செய்யப்படுகின்றன. உணவு தானிய சேமிப்பு கிடங்குகளின் கொள்ளளவினை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகரை ஒட்டியுள்ள மாதவரம் பகுதியில் 12,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட விஞ்ஞான முறையிலான, இயந்திர கையாளுமை திறனுடன் கூடிய நவீன சேமிப்புக் கிடங்கு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நிதியாண்டில் கட்டப்படும்.

6. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 9.82 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள சொந்தக் கிடங்குகளும், பிற நிறுவனங்கள் மற்றும் தனியாரிடமிருந்து வாடகை அடிப்படையில் 2.27 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள கிடங்குகளும் சேர்த்து 288 கிடங்குகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இக்கிடங்குகளின் சேமிப்பு கொள்ளளவு தற்போதைய தேவைக்கு போதுமானதாக இல்லை என்பதால், இவற்றின் கொள்ளளவினை அதிகப்படுத்திடும் வகையில், முதற்கட்டமாக 9 மாவட்டங்களில் 14 சொந்த இடங்களில், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சூரிய ஒளி கூரை கொண்ட சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும்.

7. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 25 கிடங்கு வளாகங்களுக்கு உட்புற சாலை வசதி, சுற்றுச் சுவர் கட்டுதல் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குடிநீர் வசதி, ஓய்வு அறை மற்றும் அடிப்படை வசதிகள் நபார்டு வங்கி நிதியுதவியுடன் 25 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

8. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 40 வருட தொடர் பயன்பாட்டில் இருந்து வரும் பழைய 15 சேமிப்பு கிடங்கு வளாகங்களில் அடிப்படை பராமரிப்பு பணிகளும், அங்கு பணிபுரியும் சுமை தூக்கும் பணியாளர்கள் மற்றும் வாகன ஒட்டுநர்களின் நலன் சார்ந்த பணிகளும் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்'' என்றார் முதல்வர் பழனிசாமி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x