Published : 11 Mar 2017 08:12 AM
Last Updated : 11 Mar 2017 08:12 AM

திருநெல்வேலி, கன்னியாகுமரியைச் சேர்ந்த 2 தொழில்நுட்ப பணியாளர்கள் தெற்கு சூடானில் கடத்தல்

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 2 தொழில்நுட்ப பணியாளர்கள் தெற்கு சூடானில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் மனு அனுப்பியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த பி.மிதுன் கணேஷ்(25), கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையைச் சேர்ந்த எட்வர்ட் அம்புரோஸ்(40) ஆகியோர், தெற்கு சூடானில் பலூச் என்ற இடத்தில் உள்ள ஆயில் நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். ஆயில் டேங்கர்கள், குழாய்களில் ஏற்படும் கசிவுகள் மற்றும் கோளாறுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

கடந்த 8-ம் தேதி காலை ஆயில் நிறுவனத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள ஆயில் கிணற்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மிதுன் கணேஷ், எட்வர்ட் அம்புரோஸை நிறுவனத்தில் இருந்த அதிகாரிகள் காரில் அந்த இடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வழக்கமாக இத்தகைய பணிகளுக்கு செல்வோருக்கு ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அன்று இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. காரை அவர்களே ஓட்டிச் சென்றுள்ளனர்.

தொழில்நுட்ப கோளாறை 3 மணி நேரத்தில் சரிசெய்துவிட்டு இருவரும் திரும்பியிருக்க வேண்டும். ஆனால் பல மணி நேரத்துக்குப் பின்னரும் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆயில் நிறுவன கண்காணிப்பாளர்கள், மாயமான இருவரையும் தேடி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். செல்பேசிகள் மற்றும் அவர்கள் வைத்திருந்த வயர்லெஸ் கருவிகள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இருவரையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சிலர் கடத்திச் சென்றுவிட்டதாக, சூடானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு ஆயில் நிறுவனத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உறவினர்களுக்கும் தொலை பேசி மூலம் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதற்கிடையே, மிதுன் கணேஷ், எட்வர்ட் அம்புரோஸை கடத்தி வைத்திருப்பது போன்ற படத்தை கடத்தல்காரர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த படம் செல்பேசியில் இருவரின் உறவினர்களுக்கும் கிடைத்துள்ளது. இதனால் அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இருவரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கு, இருவரின் குடும்பத்தாரும் மனு அனுப்பியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x