Published : 17 Feb 2017 10:25 AM
Last Updated : 17 Feb 2017 10:25 AM

புதுக்கோட்டை, காரைக்காலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுக: அன்புமணி ராமதாஸ்

மீத்தேன், பாறை எரிவாயுஆபத்துக்களைத் தொடர்ந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வடிவத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மீத்தேன், பாறை எரிவாயுஆபத்துக்களைத் தொடர்ந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு வடிவத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்திலும், புதுவை காரைக்காலிலும் எண்ணெய் ம்ற்றும் எரிவளி எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், உள்நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவளி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 69 இடங்களில் சிறிய அளவிலான எண்ணெய் மற்றும் எரிவளிக் கிணறுகளை அமைத்து எரிபொருட்களை எடுக்க பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இத்திட்டங்களில் இருந்து கிடைக்கும் எரிபொருட்களின் அளவு, அதற்காக ஆகும் செலவு, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், உள்ளூர் மக்கள் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டங்களை செயல்படுத்தும் முயற்சிகள் தாமதமாயின.

ஆனால், மத்தியில் நரேந்திரமோடி அரசு பதவியேற்ற பின்னர் இத்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மொத்தமுள்ள 69 திட்டங்களில் 67 திட்டங்களை ஒருங்கிணைத்து 44 ஒப்பந்தங்களாக வழங்க தீர்மானிக்கப்பட்டு அதற்கு உலகளாவிய அளவில் மின்னணு முறையில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. அவற்றில் 34 ஒப்பந்தப் பகுதிகளுக்கு மட்டும் 47 நிறுவனங்களிடம் இருந்து 134 ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 31 பகுதிகளுக்கு மட்டும் ஒப்பந்தங்களை வழங்குவதென பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் என்ற இடத்தில் சிறிய அளவிலான எண்ணெய் மற்றும் எரிவளிக் கிணறு அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பெங்களூரைச் சேர்ந்த ஜெம் லேபரட்டரீஸ் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், புதுவை மாநிலம் காரைக்காலிலும் இதேபோன்ற எண்ணெய் கிணறு அமைக்கப்படவுள்ளது. அதற்கான ஒப்பந்தத்தை பாரத் பெட்ரோரிசோர்சஸ் நிறுவனம் நிறுவனம் பெற்றுள்ளது. இத்திட்டங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கி அடுத்த 3 ஆண்டுகளில் எண்ணெய் மற்றும் எரிவளி எடுக்கும் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நோக்குடன் உள்நாட்டில் உள்ள எரிபொருள் வளத்தை பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை; இன்னும் கேட்டால் இது பாராட்டத்தக்க நடவடிக்கையாகும். ஆனால், இதுபோன்ற திட்டங்களால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை உணர்ந்து திட்டத்தை செயல்படுத்துவது தான் புத்திசாலித்தனமானதாக அமையும். தமிழ்நாட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலும், புதுவை மாநிலம் காரைக்காலும் விவசாயப் பகுதிகளாகும். அப்பகுதிகளில் எண்ணெய்க் கிணறுகளை அமைத்தால் விவசாயம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும். இத்தகைய மோசமான திட்டம் குறித்து உள்ளூர் மக்களின் கருத்தைக் கேட்காமல் இத்திட்டத்தை செயல்படுத்த துணிந்திருப்பதன் மூலம் மக்கள் உணர்வுகளுக்கு அரசுகள் மதிப்பளிக்கவில்லை என்பது உறுதியாகிறது.

-காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு முந்தைய திமுக ஆட்சியில் மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தன. அதன்பின்னர் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி தான் அத்திட்டத்தை முறியடிக்க முடிந்தது. அதைத் தொடர்ந்து பாறை எரிவளித் திட்டத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சியும், பொதுமக்களும் போராடி வரும் நிலையில் இன்னும் இறுதி வெற்றி கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் இன்னொரு திட்டத்தையும் கொண்டு வந்து காவிரி பாசன பகுதிகளை சீரழிக்க வேண்டுமென மத்திய அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி விட்டால், பாறை எரிவளி திட்டத்தையும் எளிதாக செயல்படுத்தி விடலாம் என மத்திய அரசு நினைப்பது தான் அனைத்திற்கும் காரணமாகும். இதை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

காவிரி பாசன மாவட்டங்களை தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்ற நிலையிலிருந்து எண்ணெய்க் கிணறாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசு துடிக்கிறது. இதைக் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில்,‘‘சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கவும், மீத்தேன், பாறை எரிவளி ஆகியவற்றுக்கான ஆய்வுகளைத் தடுக்கும் வகையிலும், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். ராமநாதபுரம் தொடங்கிக் கடலூர் மாவட்டம் வரை பூமிக்கு அடியில் உள்ள மீத்தேன், பாறை எரிவளி உள்ளிட்ட கனிம வளங்களைக் கைப்பற்றப் பன்னாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் முறியடிக்கப்படும்’’ என்று பாட்டாளி மக்கள் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இதன் முக்கியதுவத்தை உணர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்த பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. ஆனால், ஊழலில் காட்டும் ஆர்வத்தை மக்கள் பிரச்சினைகளில் தமிழக அரசு காட்டாததன் விளைவு தான் தமிழகத்திலும், புதுவையிலும் எண்ணெய்க் கிணறுகளை அமைக்க மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது.

தமிழகம் மற்றும் புதுவைக்கு ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயம் தவிர வேறு ஆபத்தான திட்டங்களை செயல்படுத்தக்கூடாது. அதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x