Last Updated : 17 Nov, 2014 10:44 AM

 

Published : 17 Nov 2014 10:44 AM
Last Updated : 17 Nov 2014 10:44 AM

அதிகரிக்கும் கான்கிரீட் சாலைகளால் சென்னையில் குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டம்

சென்னையின் நிலத்தடி நீர் மட்டம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்து கொண்டே வருகிறது. அதிகரிக்கும் கான்கிரீட் சாலைகள் இதற்கு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

2011-ம் ஆண்டு வரை சென்னையின் சராசரி நிலத்தடி நீர் மட்டம் 4 மீட்டர் முதல் 4.9 மீட்டர் கீழே இருந்தது. ஆனால், 2014-ம் ஆண்டில் அது கிட்டத்தட்ட 6 மீட்டர் கீழே உள்ளது.

சென்னையில் தென்மேற்கு பருவ மழை பெய்யும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரையும், வட கிழக்கு பருவ மழை தொடங்கும் அக்டோபர் மாதத்திலும் கூட நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

5 மீட்டருக்கும் கீழே நிலத்தடி நீர் மட்டம்

2011-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையின் சராசரி நிலத்தடி நீர் மட்டம் 4.94 மீட்டர் கீழே இருந்தது, 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 5.06 மீட்டர் கீழே குறைந்துள்ளது. அதே போன்று 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 4.94 மீட்டர் கீழே இருந்தது, 2014-ம் ஆண்டில் 5.58 மீட்டர் கீழே இறங்கி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 2011-ம் ஆண்டில் 4.69 மீட்டர் கீழே இருந்தது 2014-ம் ஆண்டில் 5.62 மீட்டர் கீழே உள்ளது. செப்டம்பர் மாதங்களில் 2011-ம் ஆண்டில் 4.26 மீட்டர் கீழேயும், 2014-ம் ஆண்டில் 5.95 மீட்டர் கீழேயும் உள்ளது. அக்டோபர் மாதங்களில் 2011-ம் ஆண்டில் 4 மீட்டர் கீழே இருந்த சராசரி நிலத்தடி நீர் மட்டம் 2014-ம் ஆண்டு 5.75 மீட்டர் கீழே இறங்கி உள்ளது.

கான்கிரீட் சாலைகள்

இது குறித்து சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மண்ட் ஸ்டடீஸ்)நீர் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வாளர் ஜனகராஜ் கூறியதாவது:

நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கு கான்கிரீட் சாலைகள் அமைப்பது முக்கிய காரணமாகும். சிமென்ட் கான்கிரீட் சாலைகள் அமைப்பதால், தெருக்களில் நீர் தேங்காமல் தடுக்கலாம். ஆனால், மழை நீர் கசிந்து பூமிக்குள் இறங்க வாய்ப்பில்லை. சென்னைக்கு ஒரு நாளைக்கு சுமார் 900 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. மெட்ரோ வாட்டர் ஒரு நாளுக்கு 600 மில்லியன் லிட்டர் நீரை வழங்குகிறது. மீதமுள்ள நீரை நாம் பூமிக்கடியிலிருந்துதான் எடுத்துக் கொள்கிறோம்.

நிலத்தடி நீரில் கடல் நீர் கலப்பு

ஆனால், எவ்வளவு நீர் எடுக்கிறோமோ அவ்வளவு நீரை பூமிக்கு திருப்பி தருவதில்லை. நாம் பயன்படுத்துவதற்கும், நாம் திருப்பி தருவதற்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது சென்னைக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெரிய பிரச்சினையாகும். வில்லிவாக்கம், மீஞ்சூர் போன்ற பகுதிகளில் 150 அடிக்கும் கீழேதான் நீர் கிடைக்கிறது.

நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வருவதால், கடல் நீர் நிலத்தடி நீரில் கலக்கிறது. சென்னையில் இந்திரா நகர், திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீரில் உப்பு நீர் கலப்பு அதிகரித்து வருகிறது.

இதனை சீர்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த கோயில் குளங்களை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும். குளங்களுக்கு நீர் வரும் பாதைகளை சுத்தம் செய்ய வேண்டும். மழை நீர் சேமிப்பு வசதிகள் நகரத்தின் ஒவ்வொரு பகுதியிலும், வீடுகளிலும் இருக்க வேண்டும். ஆனால், அதை விட முக்கியமாக அதை முறையாக பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x