Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 12:00 AM

சாதி, மத அமைப்புகளிடம் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: நல்லகண்ணு

சாதி, மத அமைப்புகளிடம் இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ரா. நல்லகண்ணு கூறினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர் ஒன்றிப்பு சார்பில், மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியனின் பணி நிறைவு பாராட்டு விழா மதுரை மடீட்சியா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ரா. நல்லகண்ணு பேசியது: 5 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 58 வயது வரை பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமோ, பணிக்கொடையோ வழங்கப்படுவதில்லை.

இதனால் ஓய்வுபெற்ற அனைவரும் வயதான காலத்தில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. இதை எதிர்த்து போராட யாரும் முன்வரவில்லை.

இதேநிலை தொடர்ந்து நீடித்தால் எதிர்கால சந்ததியினர் அனைவரும் ஒப்பந்தக் கூலிகளாக மட்டுமே வேலையில் இருப்பார்கள். இதனால் எதிர்காலத்தில் மிகப்பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அறிவியல் தொழில்நுட்பம் மிகப்பெரும் வளர்ச்சியை அடைந்துள்ள அதேவேளையில், தற்காலத்தில் இளைஞர்களிடம் அறநெறி மற்றும் ஒழுக்கம் குறைந்துவிட்டது.

சாதி, மத அமைப்புகளின் பிடியில் சிக்காமல் இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் கு. பாலசுப்ரமணியன், தேசியக் குழு உறுப்பினர் ஆ.இ.பாலுச்சாமி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க முன்னாள் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கணபதி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x