Published : 06 Apr 2017 05:54 PM
Last Updated : 06 Apr 2017 05:54 PM

நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் சதியை முறியடிக்க வேண்டும்: அனைத்து கட்சித் தலைவர்களுக்கு ராமதாஸ் கடிதம்

நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் அரசின் சதியை முறியடிக்க வேண்டும் என்று அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

பாமகவின் சட்டப் போராட்டம் காரணமாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள், நட்சத்திர விடுதிகளில் உள்ள பார்கள், கிளப்கள் ஆகியவை உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி 31.03.2017 அன்றுடன் மூடப்பட்டு விட்டன. அதனால் தமிழகத்தில் 3321 மதுக்கடைகளும், நட்சத்திர விடுதிகள் மற்றும் கிளப்புகளில் உள்ள பார்களும் மூடப்பட்டு விட்டன.

ஆனால், மாநில நெடுஞ்சாலைகளை மாநகர, நகர, மாவட்ட சாலைகளாக மாற்றுவதன் மூலம் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் அதே இடத்தில் திறக்க தமிழக அரசு சதி செய்கிறது. இதற்கு எதிராக அரசியல் கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு ராமதாஸ் கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக இன்று ராமதாஸ் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எழுதிய கடிதத்தில், ''பாமக மேற்கொண்ட நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தின் பயனாக தேசிய/ மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றையொட்டி 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வந்த மதுக்கடைகளை அகற்றவும், நட்சத்திர விடுதிகள், பார்கள் ஆகியவற்றில் மது விற்பனையை தடை செய்யவும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கும் செய்தியை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

நெடுஞ்சாலையோரங்களில் இருந்து மதுவை அகற்றியதில் பெற்ற வெற்றியை பேணிக்காக்க வேண்டும் என்பதற்காக உங்கள் ஒத்துழைப்பை வேண்டி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 35 ஆண்டுகளாக நான் போராடி வருவதையும் அதற்காக எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். மது ஒழிப்பை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மாநாடுகளை நடத்தியது, 8 முறை மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டங்களை நடத்தியது, மது ஒழிப்புப் பரப்புரைகளில் ஈடுபட்டது என வாழக்கையின் பெரும்பகுதியை இதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டேன்.

2006-ம் ஆண்டு மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என்று அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் வலியுறுத்தி, காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை என்றிருந்த மது விற்பனை நேரத்தை காலை 10.00 முதல் இரவு 11.00 வரை என்று குறைக்க வைத்தது பாமகதான். அதன்பின்னர், 22.12.2008 அன்று பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுடன் கருணாநிதியை சந்தித்து, முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்.

அதையேற்றுக்கொண்ட கருணாநிதி, படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும்; இனி புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது; மது விற்பனை நேரம் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை என்றிருப்பதை மாற்றி காலை 10 முதல் இரவு 10 மணி வரை என ஒரு மணி நேரம் குறைக்கப்படும் என அறிவித்தார்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளில் தமிழகம் முதலிடம் வகிப்பதால் அதற்கு முடிவு கட்டும் நோக்குடன் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள மதுக்கடைகளை அகற்ற ஆணையிடக் கோரி வழக்கறிஞர் க.பாலு மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வைத்தேன். 2012-ஆம் ஆண்டில் தொடரப்பட்ட இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட ஆணையிட்டது.

ஆனால், அதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை 14.08.2013ஆம் தேதிக்கு முன்பாக மூட வேண்டும் என்று ஆணையிட்டது. மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 604 மதுக்கடைகள் மூடப்பட்டன.

தொடர்ந்து மதுவிலக்குக்காக பரப்புரை மேற்கொண்டதன் பயனாக 2016-சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்கை தங்களின் தேர்தல் அறிக்கையில் சேர்த்தன. அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் தலா 500 கடைகள் வீதம் மொத்தம் 1000 மதுக்கடைகள் மூடப்பட்டன. இவற்றின் பயனாக தமிழகத்தில் ஒரு கட்டத்தில் 7000க்கும் கூடுதலாக இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை 5672ஆக குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள மதுக்கடைகளையும் மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 3321 மதுக்கடைகளிலும், சுமார் 1000 தனியார் பார்கள், நட்சத்திர விடுதிகள், கிளப்புகள் ஆகியவற்றிலும் மது விற்பனை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாத மது வணிகர்கள் தங்களிடமுள்ள அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி மதுவணிகத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மதுவணிகர்களின் முயற்சிக்கு மத்திய அரசும் ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. மதுவணிகத்துக்கு ஏற்பட்டுள்ள தடையை போக்குவதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மாநகர சாலைகள், நகர சாலைகள், பெரிய மாவட்ட சாலைகள் என்று பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு எந்த நேரமும் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளை இதேபோன்று வகை மாற்றம் செய்வதற்காக தமிழக அரசும் திட்டம் வகுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மது வணிகத்தைக் காப்பாற்றுவதற்காக மத்திய, மாநில அரசுகள் இந்த அளவுக்கு சட்டத்தையும், விதிகளையும் வளைப்பது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் மதுவால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழகத்தில் தான் 3 வயது குழந்தைகளுக்குக் கூட மது புகட்டப்படும் அவலம் நிலவுகிறது. 12 வயதான மாணவர்கள் மது அருந்தி விட்டு, பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து கிடக்கும் காட்சிகளும், 11-ஆம் வகுப்பு மாணவி போதையில் தகராறு செய்யும் நிகழ்வுகளும் தமிழகத்தில் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அதுமட்டுமின்றி, பள்ளி மாணவிகள் பலரும் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக வகுப்பறையில் வைத்து மது அருந்தும் கலாச்சாரமும் நமது தமிழகத்தில் துளிர்விட்டு வளரத் தொடங்கியிருக்கிறது.

அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலம், அதிக உயிரிழப்பு ஏற்படும் மாநிலம், இந்தியாவிலேயே அதிக அளவில் மது வணிகம் நடைபெறும் மாநிலம், இளம் விதவைகள் அதிகமாக உள்ள மாநிலம் என அத்தனை அவப்பெயர்களையும் சுமந்து கொண்டிருக்கும் மாநிலம் தமிழகம் தான். அவ்வாறு இருக்கும் போது நெடுஞ்சாலை மதுவணிகத் தடைக்கு ஆதரவாகவும், முழு மதுவிலக்கை வலியுறுத்தியும் மிகத் தீவிரமாக போராட வேண்டியது நாம் தான் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தமிழகத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மாநகர, நகர, மாவட்ட சாலைகளாக மாற்றம் செய்வதன் மூலம் மதுக்கடைகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மதுவிற்பனையை தக்கவைக்க மது வணிகர்களும், அரசும் முயல்கின்றனர். நெடுஞ்சாலைகளில் மது வணிகத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்ததன் நோக்கம் சாலைவிபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க வேண்டும் என்பது தான்.

சாலைகளை வகைமாற்றம் செய்வதன் மூலம் மதுவணிகத்தை தொடரச் செய்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நோக்கமே சிதைக்கப்பட்டு விடும். மேலும், முன்னேற்றம் என்பது மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாகவும், தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு அல்லது ஆறுவழிச் சாலைகளாகவும் மாற்றுவதுதான்.

மாறாக மது விற்பனை செய்வதற்காக நெடுஞ்சாலைகளை தர இறக்கம் செய்வது பின்னோக்கிய செயலாகும். எனவே தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை வகைமாற்றம் செய்யும் முயற்சிக்கு எதிராக அனைத்துக் கட்சித் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x