Published : 17 Aug 2016 12:21 PM
Last Updated : 17 Aug 2016 12:21 PM

திரும்பிய பக்கமெல்லாம் சுகாதார சீர்கேடு; அடிப்படை வசதிகள் இல்லை: விருதுபெற தகுதியானதா திண்டுக்கல் மாநகராட்சி?

அடிப்படை வசதிகளை முழுமையாக நிறை வேற்றாத திண்டுக்கல் மாநகராட்சிக்கு, தமிழக அரசின் விருதுபெறத் தகுதி உள்ளதா என்பதே நகர் மக்களின் கேள்வியாக உள்ளது.

தமிழக அரசின் சிறந்த உள்ளாட்சி அமைப்புக் களுக்கான தேர்வில், சிறந்த மாநகராட்சிக்கான விருது திண்டுக்கல்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. எந்த அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டது என நகர மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன், விருதுக்குத் தேர்வுசெய்ய வந்த உயர் நிலைக் குழு ஒன்று, மாநகராட்சியிலேயே அதிகாரிகளைக் கொண்டு கூட்டம் நடத்திவிட்டுச் சென்றது. இவர்கள் திண்டுக்கல் நகர் பகுதிகளில், நேரில் சென்று ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை. நடைமுறையில் மக்கள் அடிப்படை வசதிகளின்றி எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்பதை பார்த்திருந்தால், விருதுக்கு பரிந்துரைக்க சற்றே தயங்கி இருப்பர் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

சுகாதாரம்...

திண்டுக்கல் மாநகராட்சியில் வீடுகளுக்குச் சென்று துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இவர் கள் தினமும் குப்பைகளை சேகரிப்பது இல்லை. இதனால் வீடுகளில் இரண்டு, மூன்று நாட்கள் குப்பைகளை சேகரித்து வைக்க முடியாதநிலையில், காலியாக உள்ள இடங்கள் அல்லது சாலையோரங்களில் குப்பை களை வீசிவிட்டுச் செல்வதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. தினமும் குப்பை சேகரிப்பை மாநகராட்சி சுகாதாரப்பிரிவு முறைப் படுத்துவதில்லை.

சேகரிக்கப்படும் குப்பைகள் குடியிருப்பு பகுதிக ளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்திரா நகரில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. திடக் கழிவு மேலாண்மைத் திட்டம் சிறிய பேரூராட்சிகளில் கூட செயல்படுத்தும்நிலையில், மாநகராட்சி என்று அழைக்கப்படும் திண்டுக்கல்லில் அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என பிரித்தல், மறுசுழற்சியின் மூலம் உரமாக்கல் ஆகிய திட்டங்கள் இங்கு செயல்படுத்தாததால் குப்பைகள் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. திறந்தவெளிக் கழிப்பிடம் இன்னும் நகரின் பின்தங்கிய குடியிருப்பு பகுதிகளில் காணப் படுகிறது.

வீட்டுக்கு ஒரு கழிப்பறை திட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது தான் இதற்கு காரணம்.

சாலை வசதி

நகரில் பஸ் போக்குவரத்து உள்ள பிரதான சாலைகள் மட்டுமே ஓரளவு சீராக உள்ளது. மக்கள் இருசக்கர வாகனங்களில் அதிகம் சென்றுவரும் கடைவீதி சாலை, ஆர்.எம்.காலனி சாலை, பள்ளிகள் அதிகம் உள்ள ஜி.டி.என். சாலை ரயில்வே லைன் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்கள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளன.

நகரமைப்பு...

நகரில் ஆக்கிரமிப்புக்கு பஞ்சமில்லை. எளிய வர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அக்கறை காட்டும் மாநகராட்சி வலியவர்களின் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்வதில்லை.ஆக்கிரமிப்புகளால் நெரிசலும் ஏற்படுகிறது. பல சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் நெரிசலுக்கு தீர்வு காணலாம். வாரத்துக்கு ஒருமுறை, சில வார்டுகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது. எந்தவித அடிப்படை வசதிகளையும் முழுமையாக நிறைவேற்றாத நிலையில், மாநகராட்சி எல்லை விரிவாக்கமும் இல்லாத நிலையில், அமைப்பில் நகராட்சியாகவே செயல்பட்டு வரும் திண்டுக்கல் (மா)நகராட்சிக்கு எப்படி விருது கிடைத்தது என்பதுதான் மக்களின் பேச்சாக உள்ளது.

இந்திரா நகரில் உள்ள மாநகராட்சி கிடங்கில் மலைபோல குவிந்துள்ள குப்பைகளால் ஏற்பட்டுள்ள சுகாதாரக்கேடு.

இந்திரா நகரைச் சேர்ந்த என்.வசந்தா கூறியதாவது:

நகரை சுற்றிப் பார்க்காமலேயே விருது கொடுத்து விட்டனர். சுகாதாரமான குடிநீர் விநியோகம் இல்லை. 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. இதை பாதுகாத்து வைத்தாலும், சில நாட்களிலேயே துர்நாற்றம் வீசுகிறது. நகருக்குள் பன்றிகள் உலா வருகின்றன. சுகாதாரக் கேட்டில் சிக்கித் தவிக்கும் பஸ் நிலையத்தில், வெளியூர் பயணிகள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முழுமை அடையாததால் சுகாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது என்றார்.

எஸ். முருகேசன்:

குருசாமி பிள்ளை சந்து பகுதியில் தண்ணீர் தொட்டி அருகே குப்பையை கொட்டுகின்றனர். மூன்று நாட்களுக்கு ஒருமுறை தான் குப்பைகளை அகற்றுகின்றனர். துப்புரவு பணியாளர் பற்றாக்குறையால்தான் இந்த நிலை என்கின்றனர். திண்டுக்கல் மாநகராட்சியின் இந்த நிலைக்கே விருது என்றால், பிற மாநகராட்சிகளின் நிலை இதைவிட மோசமாக இருக்கும் போலிருக்கிறது என்றார்.

முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறியதாவது:

நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கோபால சமுத்திரகுளம், சிலுவத்தூர் ரோடு குளம் ஆகியவற்றை தூர்வாரி மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்றி உள்ளனர். இங்கு மக்கள் நடைபயிற்சி செல்ல பாதை அமைத்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. கூடுதல் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், மாநகரா ட்சிக்கான அந்தஸ்து உயரும் வகையில் மாநில அரசு நிதி ஒதுக்கவில்லை. துப்பரவு பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காததால், துப்பரவு பணி முழுமையாக நடைபெறவில்லை.

குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. மாநகராட்சிக்கு ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்கவேண்டும். பகுதி வாரியாக அலு வலர்களை நியமிக்க வேண்டும். எல்லை விரிவா க்கம் இல்லாமல் போனதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வழியில்லாமல் போனது. மாநகராட்சியை மேம்படுத்த அரசு அதிகாரிகளை நியமிப்பதுடன் கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும் என்றார்.

இதுகுறித்து ‘தி இந்து’ விடம் மாநகராட்சி நகர்நல அலுவலர் சி.அனிதா கூறியதாவது:

விருது வழங்கியதற்கு எதிர்ப்பு கிளம்பும் என்பது எதிர்பார்த்ததுதான். விருதுக்கு தேர்வு செய்ய 550 கேள்விகள் கொடுத்தனர். அதற்கு சரியாக பதில் அளித்துள்ளோம். அதை அவர்கள் ஆராய்ந்து திருப்தியான பிறகே, விருதுக்கான கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. ஆட்கள் பற்றாக்குறை இருந்தபோதும், இருக்கும் ஆட்களை வைத்துக்கொண்டு நிறைவாக பணிசெய்துள்ளோம் என்ற அடிப்படையில் விருது வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 40 நாட்களில் கூடுதல் பணியாளர்கள், கூடுதல் வாகனங்கள் மாநகராட்சிக்கு கிடைக்க உள்ளது. இதைக்கொண்டு மேலும் சிறப்பாக பணிகளை செய்வோம். இந்த விருது எங்களை ஊக்குவிப்பதாக உள்ளது என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x