Published : 28 Sep 2016 08:07 AM
Last Updated : 28 Sep 2016 08:07 AM

பிஎஸ்என்எல் இளநிலை பொறியாளர் தேர்வு: தி.நகர் ரேஸ் இன்ஸ்டிடியூட்டில் ஏராளமானோர் ஆன்லைனில் தேர்வு எழுதினர்

இந்தியாவில் பெரும்பாலான வேலைவாய்ப்பு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் நிலையில் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் நிறுவனமும் (பிஎஸ்என்எல்) தற்பொழுது இளநிலை பொறியாளர் பணியிடத்துக்கான தேர்வை முதன்முறையாக ஆன்லைனில் நடத்தி வருகிறது.

செப்டம்பர் 25 முதல் 29 வரை நடைபெறும் இத்தேர்வில் 45 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 20 மையங்களில் நடைபெறும் இத்தேர்வு காலை மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் நடைபெறுகிறது.

சென்னை தி.நகரில் இயங்கிவரும் ரேஸ் இன்ஸ்டிடியூட் ஒரு தேர்வு மையமாக உள்ளது. இங்கு ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் கலந்துகொண்ட மாணவர்கள் இதுகுறித்து கூறும்போது, “முதன்முதலாக ஆன்லைனில் தேர்வு எழுதுவது வித்தியாசமாக இருந்தது. தேர்வு எழுதுவதற்கு முன், மாணவர்களின் கைவிரல் ரேகை மற்றும் அவர்களின் புகைப்படம் கணினி வாயிலாக பரிசோதிக்கப்பட்டது. தேர்வு முழுவதும் ஆன்லைனில் விடையளிக்க வேண்டியிருப்பதால், இதற்கு முன் ஆன்லைனில் பயிற்சி பெறாத மாணவர்களுக்கு சற்று சிரமமாகவே இருந்தது” என்று கூறினர்.

மேலும், “இது போன்ற தேர்வு முறையால் ஆள்மாறாட்டம் போன்ற மிகப்பெரிய முறைகேடுகளை தவிர்க்க முடியும். மேலும் திறன் வாய்ந்த மாணவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது” என்று தெரிவித்தனர்.

ரேஸ் இன்ஸ்டிடியூட்டில் பணியாற்றும் வீரராகவன் கூறும்போது, “ஆன்லைன் தேர்வு முறையால் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாவது போன்ற குற்றச் செயல்களை தவிர்க்க முடியும். மேலும் வினாத்தாள் அச்சிடுதல், போக்குவரத்து செலவுகள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி தேர்வு முடிவுகள் மிக விரைவாக வெளியிட முடியும்” என்றார்.

வங்கி, மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், பிஎஸ்என்எல் ஆகிய தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறுவதுபோல டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x