Published : 18 May 2017 09:53 AM
Last Updated : 18 May 2017 09:53 AM

நீதிமன்றங்களில் இன்னும் பதவியில் தொடரும் ஓபிஎஸ் ஆதரவு அரசு வழக்கறிஞர்களைகளையெடுக்க தமிழக அரசு பட்டியல் தயாரிப்பு: அரசு உதவி வழக்கறிஞர்களும் இடமாற்றம்?

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களாக பதவியில் இன்னும் தொடர்ந்து வரும் ஓபிஎஸ் ஆதரவு வழக்கறிஞர்களை களையெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் சிபாரிசு செய்யும் நபர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் எந்தக்கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அக்கட்சியின் வழக்கறிஞர் அணியினரே அரசு வழக்கறிஞர் பதவியில் சட்ட அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள அரசு தலைமை வழக்கறிஞர் பதவி முதல் மாவட்ட , சார்பு மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் உள்ள அரசு வழக்கறிஞர்கள் பதவி வரை அனைத்தும் ஆளுங்கட்சியினரால் அரசியல் ரீதியாக நியமிக்கப்படுபவை.

செல்வாக்கு மிக்க பதவியாகவும், பணம் காய்க்கும் மரங்களாகவும் விளங்கும் இப்பதவிகளைப் பெற ஆளுங்கட்சி வழக்கறிஞர்களுக்கிடையே பலத்த போட்டா போட்டி ஏற்படுவது வழக்கம். ஏனெனில், இந்த அரசு வழக்கறிஞர்களின் பணி நியமனம், சம்பளம் மற்றும் பதவிக்காலம் போன்றவை தமிழக அரசின் பொதுத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதனால், அரசு வழக்கறிஞர்களுக்கென ஒதுக்கப்படும் துறைகளிலும் அவர்கள் அதிக ஆதிக்கம் செலுத்த முடியும். ஆனால், அதிகார மட்டத்தில் யாருக்கு அதிக சிபாரிசு இருக்கிறதோ அவர்களே இப்பதவிக்கு வர முடியும்.

தற்போது சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளை மற்றும் 32 மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களில், முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது யாரெல்லாம் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டார்களோ அவர்களே அப்பதவிகளில் இன்னும் தொடர்ந்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இப்பதவியை தக்கவைத்து வருகின்றனர். தற்போது அதிமுக, முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் ஒரு கட்சியாகவும், ஓ.பன்னீ்ர்செல்வம் தலைமையில் மற்றொரு கட்சியாகவும் செயல்பட்டு வருகிறது.

ஆனால் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட மாவட்ட நீதிமன்றங்களில் ஓபிஎஸ் சிபாரிசு காரணமாக அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டவர்கள், இன்னும் தொடர்ந்து அப்பதவியில் நீடித்து வருகின்றனர். இதனால் அரசு வழக்குகளை ரகசியமாக எதிர்கொள்வதில் தமிழக அரசுக்கு நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழகம் முழுவதும் அரசு வழக்கறிஞர்களாக பதவி வகித்துவரும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை உடனடியாக அகற்றிவிட்டு, அப்பதவிகளில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் சிபாரிசு செய்யும் தங்களது ஆதரவாளர்களை நியமிக்க முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான களையெடுப்பு பட்டியல் தயாரிப்பு பணியை சட்டத்துறை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்றும் தற்போது பதவியில் உள்ள அரசு வழக்கறிஞர்கள் சிலர் தெரிவித்தனர்.

பாக்ஸ் மேட்டர்….

இதேபோல தமிழகம் முழுவதும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களி்ல் அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர்களாக (ஏபிபி) டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு செய்யப்படுபவர்கள், அரசு குற்ற வழக்கு தொடர்வுத்துறை மூலமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் நபர்களை அதிரடியாக இடமாற்றம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் 100-க்கும் மேற்பட்ட அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், உதவி இயக்குநர்கள் குறித்த பட்டியலையும் அரசு குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநரகம் தயாரித்துள்ளது. இதனால் அவர்களும் விரைவில் இடமாற்றம் செய்யப்படுவர் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x