Last Updated : 17 Oct, 2013 05:23 PM

 

Published : 17 Oct 2013 05:23 PM
Last Updated : 17 Oct 2013 05:23 PM

100 அடி ஆழத்தில் 2 அடுக்கு மெட்ரோ சுரங்க ரயில் நிலையம்

சென்னை சென்ட்ரல் முன்பு 100 அடி ஆழத்தில் இரண்டு அடுக்கு மெட்ரோ சுரங்க ரயில் நிலையம் அமைக்கும் சவாலான பணியை தொடங்க மெட்ரோ ரயில் நிறுவனம் தயாராகி வருகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக இரு வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் பாதையும், சுரங்க பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.

19 சுரங்க ரயில் நிலையங்கள்

சுரங்கப் பாதை மொத்தம் 24 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படுகிறது. இதில் 19 சுரங்க ரயில் நிலையங்கள் கட்டப்படுகின்றன. வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர், அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், ஷெனாய் நகர் உள்பட 11 இடங்களில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ராட்சத டனல் போரிங் மிஷின்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 8.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதை (24 சதவீதம்) அமைக்கப்பட்டுவிட்டது.

100 அடியில் சவாலான பணி

இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு 100 அடி ஆழத்தில் இரண்டு அடுக்கு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிதான் மிகுந்த சவாலான பணியாக இருக்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கூறினார்.

வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையேயான முதல் வழித்தடம் சென்ட்ரல் வழியாகச் செல்கிறது. இரண்டாவது வழித்தடம் சென்ட்ரல் - பரங்கிமலை இடையே அமைக்கப்படுகிறது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து வரும் ரயில் நின்று செல்வதற்காக முதல் அடுக்கும், சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயிலுக்காக 2-வது அடுக்கும் அமைக்கப்படுகிறது.

சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு உள்ள பார்க்கிங் பகுதியில் இருந்து ரிப்பன் மாளிகை தாண்டி ராஜா முத்தையா சாலை வரை சுமார் அரை கி.மீ. நீளத்துக்கு மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது.

இந்த ரயில் நிலையம்தான், மற்ற சுரங்க ரயில் நிலையங்களைவிட மிகவும் ஆழமானதும் அகலமானதும் ஆகும். மற்ற இடத்தில் நடப்பதைவிட இங்கு 4 மடங்கு வேலை அதிகம்.

சென்ட்ரல் முன்பு மெட்ரோ ரயில் நிலையத்துக்காக 100 அடி ஆழத்துக்கு மண் அள்ளப்படுகிறது. மண்சரிவு, நீர்க்கசிவு ஏற்படாமல் இருப்பதற்காக நாலாபுறமும் ஒரு மீட்டர் தடிமண் உள்ள சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது.

இந்தப் பணி முடிந்ததும் மேற்பகுதியை மூடிவிட்டு, ரயில் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.

கூவத்துக்கு அடியில்..

இதுபோல கூவம் ஆற்றுக்கு அடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியும் சவாலாகக் கருதப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக பரங்கிமலை வரை செல்லும் மெட்ரோ ரயிலும், வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயிலும் கூவம் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதற்காக எழும்பூர் மற்றும் பார்க் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கூவம் ஆற்றுக்கு

அடியில் சுரங்கப் பாதை அமைக்கப்பட உள்ளது. கூவம் ஆற்றுக்கு அடியில் உள்ள மண் பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது. கடலுக்கு அடியில் சுரங்க ரயில்பாதை அமைப்பது போன்றே கூவம் ஆற்றுக்கு அடியில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது.

கூவத்தில் 20 அடி வரை தண்ணீர் இருக்கிறது. நீண்டகாலமாக தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பதால் ஆற்றின் அடிப்பகுதியில் இளகிய மண் உள்ளது. இதை வலுப்படுத்தினால்தான் சுரங்கப் பாதை அமைக்கும் பணியை மேற்கொள்ள முடியும். அதனால், கூவம் ஆற்றில் சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ள 200 மீட்டர் நீளத்துக்கு வேதிப்பொருள் உள்செலுத்தப்பட்டு மண் வலுவேற்றப்படும். அதன்பிறகு கூவத்துக்கு அடியில் 30 அடி ஆழத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி தொடங்கும் என்று அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x