Published : 09 Jun 2017 07:32 AM
Last Updated : 09 Jun 2017 07:32 AM

பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்வு: நில வழிகாட்டி மதிப்பு 33% குறைப்பு - இன்று முதல் அமல்படுத்த தமிழக அமைச்சரவை ஒப்புதல்

தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு இன்று முதல் 33 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதே நேரத்தில் நில விற்பனை, தானம், செட்டில்மென்ட் உள்ளிட்டவற்றுக்கான பதிவுக் கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை தமிழக அமைச்சரவை வழங்கியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் பங்கேற்றனர். விமானம் தாமத மானதால் கருப்பணன் மட்டும் பங்கேற்கவில்லை. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய கூட்டம் 3.35 மணி வரை நடந்தது.

தமிழகத்தில் பத்திரப்பதிவு வருவாயை அதிகரிக்கவும், மக்களுக்கு பயன்படும் வகையில் வழிகாட்டி மதிப்பீட்டை குறைக் கவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுத்து ஒப்புதல் பெறப் பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் பத்திரப்பதிவுக்கான வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயிக்கும் முறை சீரமைக்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இதைக் கருத்தில்கொண்டு, பதிவுத்துறை தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சந்தை மதிப்பு வழிகாட்டியை ஜூன் 9-ம் தேதி (இன்று) முதல் 33 சதவீதம் குறைத்து உத்தரவிட்டுள்ளது.

சந்தை மதிப்பு வழிகாட்டியை குறைப்பதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட, விற்பனை (conveyance), பரிமாற்றம் (exchange), தானம் (gift), குடும்ப உறுப்பினர்கள் அல்லாதோருக்கு எழுதிக் கொடுக்கப்படும் ஏற்பாடு (settlement) போன்ற ஆவணங் களுக்கான பதிவுக் கட்டணம் 4 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. இக்கட்டண உயர்வை ஜூன் 9-ம் தேதி (இன்று) முதல் அமல்படுத்தவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குறைப்பு ஏன்?

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2007-08 காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்தது. இதனால் பத்திரப்பதிவும் அதிகரித்ததால் அரசுக்கு வருவாயும் உயர்ந்தது. 2008-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நிலங்களின் சந்தை வழிகாட்டி மதிப்பு உயர்ந்துகொண்டே போனது. சில பகுதிகளில் ஒரு இடத்தை உரிமையாளர் தன் சொந்த காரணங்களுக்காக மதிப்பு உயர்த்தி பதிவு செய்தால், அதே தொகை அருகில் உள்ள மற்ற நிலங்களுக்கும் வழிகாட்டி மதிப்பாக நிர்ணயிக்கப்பட்டது. இது ஒரு காலகட்டம் வரை பத்திரப்பதிவு வருவாயை வெகுவாக உயர்த்தியது.

தேர்தல் அறிக்கை

அதன்பின் நிலம், வீடு வாங்குவோர் பத்திரப்பதிவுக்காக அதிக தொகை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட தால், பொது அதிகாரம் பெறுதல் உள்ளிட்ட மாற்று வழிகளை கையாண்டனர். ரியல் எஸ்டேட் துறையும் பல்வேறு பிரச்சினை களை சந்தித்ததால் பத்திரப்பதிவு குறையத் தொடங்கியது. இதன் தாக்கத்தை 2013-14ம் ஆண்டுகளில் தமிழக அரசு உணரத் தொடங்கியது.

இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சந்தை வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கும் முறை சீரமைக்கப்படும் என அறிவிக்கப் பட்டது.

மிகப் பெரும் சவால்

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைந் ததும், கடுமையாக உயர்ந்த வழிகாட்டி மதிப்பை குறைப்பதற் கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், தமிழக பத்திரப்பதிவுத் துறை மிகப்பெரும் சவாலை சந்தித்தது. இதைத் தொடர்ந்து வருவாயை பெருக்குவதற்கான பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தற்போது வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பதிவுக் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தற்போது நிலம் விற்பனை, பரிமாற்றம், தானம், செட்டில்மென்ட் ஆகியவற்றுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் பெறப்பட்டு வந்தது. இது தற்போது 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவு வருவாய் உயரும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தற்போதுள்ள சூழலில் மத்திய அரசின் கட்டுப்பாடுகள், ரியல் எஸ்டேட் துறையின் மந்த போக்கு, சந்தை வழிகாட்டி மதிப்பு உள்ளிட்டவற்றால் பத்திரப்பதிவு 35 முதல் 40 சதவீதம் வரை பாதிக் கப்பட்டது. அரசு தற்போது அறிவித் துள்ள வழிகாட்டி மதிப்பு குறைப் பால் நிலம், வீடு வாங்குவோர் பத்திரப்பதிவு கட்டணம் குறைவாக செலுத்தும் நிலை ஏற்படும். இது தொடர்பாக அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

11 சதவீதம் செலுத்த வேண்டி வரும்

நிலத்துக்கான வழிகாட்டி மதிப்பை குறைத்துள்ள போதிலும், பதிவுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால் பெரிய அளவுக்கு பலன் இல்லை என்கின்றனர் பொதுமக்கள். இதுவரை நிலம், வீடு வாங்குபவர்கள் அதன் மதிப்பில் முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதம், பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் என மொத்தம் 8 சதவீத தொகையை அரசுக்கு செலுத்த வேண்டியிருந்தது.

ஆனால், தற்போது வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டபோதிலும் பதிவுக் கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சொத்து வாங்குபவர்கள் முத்திரைத்தாள் கட்டணம் 7 சதவீதம், பதிவுக் கட்டணம் 4 சதவீதம் என மொத்தம் 11 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டி வரும். எனவே, வழிகாட்டி மதிப்பு குறைந்தாலும் பதிவுக் கட்டணம் அதிகரித்துள்ளதால் மிகப்பெரிய அளவில் பலன் இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x