Published : 05 Apr 2017 08:18 AM
Last Updated : 05 Apr 2017 08:18 AM

பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்: வாக்காளர் பதிவு அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முறையீடு

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்கா ளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள், தண்டையார் பேட்டையில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலகத்துக்கு சென்று முறையிட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரியில் வெளி யிடப்பட்ட வாக்காளர் பட்டியல் விவரங்களின்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 721 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதும் அந்தந்த வாக்குச்சாவடியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. அதை சரிபார்த்துக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான தா.கார்த்திகேயன் அறிவுறுத்தி இருந்தார்.

தற்போது இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், 100-க் கும் மேற்பட்டோர் தங்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக கூறி, தண்டையார் பேட்டை மாநகராட்சி மண்டல அலு வலகத்தில் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் முறையிட்டு வருகின்றனர். ஆனால், சரியான பதில் கிடைக் காததால் அவர்கள் விரக்தியுடன் திரும்பிச் செல்கின்றனர்.

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறும்போது, ‘‘எனது மருமகன் ராணுவத்தில் இருக்கிறார். அதனால் எனது மகளும் உடன் தங்கியிருக்கிறார். அவள் கர்ப்பமாக இருந்ததால் நானும் என் கணவரும் உதவிக்கு சென்றிருந்தோம். இதனால், ஓராண்டாக வீடு பூட்டிக் கிடந்தது. கடந்த 2 மாதங்களாக இங்குதான் வசிக்கிறோம். கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிக்க வரும்போதுதான் எனது பெயர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் கேட்ட போது யாரும் முறையான பதில் அளிக்கவில்லை’’ என்றார்.

இது தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கடந்த ஆண்டு அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடை பெற்றபோது, வீடு வீடாக சென்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வீட்டில் பல மாதங்களாக இல்லாத வர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. அவர்களின் பெயர்களை, வாக்குப் பதிவு நடைபெறும் நாள் வரை பட்டியலில் சேர்க்க முடியாது. தேர்தல் முடிந்த பிறகே பட்டியலில் சேர்க்க முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x