Published : 25 Mar 2014 02:49 PM
Last Updated : 25 Mar 2014 02:49 PM

பிரான்ஸ் சுற்றுலா பயணிகளை ஊட்டியில் தவிக்கவிட்ட சென்னை சுற்றுலா நிறுவனம்: தலைமறைவானவர்களைப் பிடிக்க போலீஸ் நடவடிக்கை

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஊட்டியில் தனியாக விட்டுவிட்டு வந்த சுற்றுலா நிறுவனத்தினர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ரோகர் (75), இவரது மகன் ஸ்பார்கல் (57) உள்ளிட்ட 6 பேர் தமிழகத்தை சுற்றிப் பார்க்க முடிவு செய்தனர்.

இதற்காக ஆன்லைனில் தேடிய போது ‘‘சவுத் இந்தியன் டூரிஸ்டர் - அர்ஜுனா வாயேஜ்’’ என்ற சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் இவர்களை தொடர்பு கொண்டு, தென் தமிழகத்தில் உள்ள 10 சுற்றுலா தளங்களை சுற்றிக் காட்டுவதாகவும், இதற்கு ரூ.4.50 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அவர்களும் இந்த தொகைக்கு ஒப்புக் கொண்டு மார்ச் 3-ம் தேதி சென்னை வந்தனர். வந்தவுடன் முன் பணமாக சுற்றுலா நிறுவனத்தை சேர்ந்த 2 பேரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், மதுரை மற்றும் சில இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டு கடந்த 18ம் தேதி ஊட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நேரத்தில் பல தவணைகளாக ரூ.4.50 லட்சம் பணத்தையும் சுற்றுலா நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் கொடுத்ததாக தெரிகிறது.

பின்னர் சுற்றுலா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பிரான்ஸ் சுற்றுலா பயணிகளிடம் கூடுதலாக ரூ.1 லட்சம் கேட்க, அவர்கள் அதை கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சுற்றுலா நிறுவனத்தினர் ஊட்டியிலேயே அவர்களை விட்டுவிட்டு எந்த தகவலும் கூறாமல் திரும்பி வந்துவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரான்ஸ் நாட்டினர் ஊட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் காவல் துறையினரின் உதவியுடன் சென்னை வந்து மயிலாப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

ஊட்டி காவல் துறையினர் பதிவு செய்த புகாரை சென்னை காவல் துறைக்கு மாற்ற, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சுற்றுலா நிறுவனம் பிரான்ஸ் சுற்றுலா பயணிகளிடம் கொடுத்த அரும்பாக்கம் முகவரிக்கு சென்று விசாரணை நடத்தியபோது ‘சவுத் இந்தியன் டூரிஸ்டர் - அர்ஜுனா வாயேஜ்' என்ற சுற்றுலா நிறுவனமே அங்கு இல்லை என்பது தெரிந்தது. ஆன்லைனில் அவர்கள் கொடுத்திருந்த முகவரியும் போலியானது என்பது தெரிந்தது.

அதைத் தொடர்ந்து ஆன்லைனில் அவர்கள் தொடர்பு கொண்ட முகவரியை வைத்தும், பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் அவர்களை பிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x