Published : 25 Nov 2014 09:10 am

Updated : 25 Nov 2014 10:03 am

 

Published : 25 Nov 2014 09:10 AM
Last Updated : 25 Nov 2014 10:03 AM

மெல்லத் தமிழன் இனி...! 32 - காதல் தோல்விக்கு மது மாற்று அல்ல!

32

சேலத்தில் பார்த்த அந்த இளைஞர் எலும்பும் தோலுமாக இருந்தார். கண்ணில் கருவளையங்கள். தாடி அடர்ந்திருந்தது. கடுமையான மது நெடி. அவருக்குக் கை, கால்களில் ஏராளமான கீறல்கள் மற்றும் சூடு வைத்த தழும்புகள். நெஞ்சில் தீயினால் சுட்ட காதல் சின்னம். “என் காதல், யாருக்குமே புரியாது. எல்லாம் போச்சு. இன்னைக்கு எனக்கு சிகிச்சை கொடுக்கலாம். ஆனா, நான் சாகப்போறதை யாரும் தடுக்க முடியாது” என்று ஆவேசமாக கத்தினார். டாக்டர் மோகன வெங்கடாசலபதி தனது உதவியாளரை அழைத்து இளைஞரை அவருடன் அனுப்பி வைத்தார். தொடர்ந்து என்னிடம் பேசினார் டாக்டர்:

“மது அடிமையாவதற்கான காரணங் களில் முக்கியப் பங்கு வகிக்கிறது காதல் தோல்வி. காதல் தோல்வி என்றாலே மது குடிக்க வேண்டும் என்பது தப்பிதமாகக் கற்பிக்கப்பட்ட ஒன்று. உண்மையில், காதல் தோல்வி என்ற ஒன்று இங்கு இல்லவே இல்லை. அது மாய நம்பிக்கை. அதற்கு முதலில் காதலை அறிவியல்பூர்வமாக புரிந்துகொள்வது அவசியம். இந்த இடத்தில் பலரும் சிரிப்பது புரிகிறது நண்பர்களே.

காதலிலே இரண்டு வகை!

ஆம், காதலை புரிந்துகொள்வது அறிவியலுக்கு அப்பாற்பட்டதுதான். ஆனாலும், அதற்கும் சில அறிவியல் கோட்பாடுகள் உள்ளன. துல்லியமாக இல்லாவிட்டாலும் பொதுவாக. காதலை இரு வகையாக வரையறுக்கிறது உளவியல். ஒன்று, ‘கம்பாஷனேட்’ காதல் (Compassionate love). இது பரஸ்பரம் புரிந்துகொள்வது, நம்பிக்கையால் வருவது. நீண்ட காலம் நிலைக்கக்கூடும். மற்றொன்று, ‘பேஷனேட்’ காதல் (Passionate love). அதீத உணர்ச்சிவசப்பட்டு, அதீதமான பாலியல் ஈர்ப்பினால், ‘என் அன்பு அப்படியே திரும்பக் கிடைக்க வேண்டும்’ என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில் வருவது. இது பதற்றம் கலந்த பரவசம். இது நீடிக்கும் என்று சொல்ல இயலாது.

காதலின் மூன்று கட்டங்கள்

அடுத்து, காதலில் மூன்று கட்டங்கள் உண்டு. காமம் (Lust), ஈர்ப்பு (Attraction), இணைவது (Attachment). காமம், காதலின் முதல் கட்டம். எதிர்பாலின உடல் கவர்ச்சி ஈர்ப்பில் ஏற்படுவது. ஆணுக்குக் காரணம், Testostrone ஹார்மோன். பெண்ணுக்கு Estrogen ஹார்மோன். இதில் ஆண் விரும்புவது காமம் அல்லது சந்ததி விருத்தி. பெண் விரும்புவது பாதுகாப்பு. அதே சமயம் ஓர் ஆண் பெரும்பாலும் தோற்றம் கண்டே தூண்டப்படுகிறான். இதனை தோற்றத் தூண்டல் (Visual stimulation) என்போம். தோற்றத்தூண்டல் பெண்ணுக்கும் உண்டு என்றாலும் அது ஆணைவிடக் குறைவே.

அடுத்து, ஈர்ப்பு. தகவல் தொடர்புக்காக மூளையில் சுரக்கும் மூன்று விதமான ரசாயனங்கள் இதற்கு அடிப்படை. அவை ‘நோரெபிநெஃப்ரின்’ (Norepinephrine), ‘டோப்ப மின்’ (Dopamine), ‘சிரோடோனின்’ (Serotonin). காதலின்போது ‘நோரெபிநெஃப்ரின்’ சற்றே அதிகபடியாகச் சுரக்கும். அப்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். ஜிவ் வென்று வானில் பறப்பீர்கள். கவிஞர்கள் சொல்லும் அத்தனையும் ஏற்படுவதற்கான ரசாயனம் இது. அடுத்து, டோப்பமின். மகிழ்ச்சிக்கான ரசாயனம் இது. அதீத சந்தோஷம், அதீத உத்வேகம், துணைமீது அதீத அக் கறை, உறக்கம், உணவு தேவைப்படாத தன்மையை ஏற்படுத்துகிறது. அடுத்து, சிரோடோனின். காதலில் பசி குறைவது, தூக்கம் தேவையில்லை என்ற நிலைக்குத் தள்ளுவது இது.

அடுத்து, இணைவது. உடல், மனரீதியாக உறுதியாக இணையும் கட்டம். இந்தக் கட்டத்தில் இருவகை ஹார்மோன்கள் சுரக்கின்றன. ஒன்று, ‘ஆக்ஸிடோசின்’ (Oxytocin). தொடுதல், தழுவுதல், முத்தமிடுதலில் தொடங்கி உடலுறவின் உச்சகட்டத்தை அடைய இது உதவுகிறது. இன்னொன்று ‘வாசோப்பிரஸ்ஸின்’ (Vasopressin). உடலுறவின் உச்ச நிலைக்குப் பின்பு சுரப்பது. துணையைப் பாதுகாப்பதற்கான ஹார்மோன். சொல்லப்போனால் குடும்பக் கட்டமைப்பு, தனது துணை தனக்குத்தான் என்கிற சமூகக் கட்டமைப்பு ஏற் பட்டதற்கான ஹார்மோன்.

இவை தவிர காதலின்போது மூளையின் ரிவார்டு சென்டருக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதேசமயம் சித்தாந்தம், நேர்மை, சமூகப் பொறுப்பு இவற்றை எல்லாம் நிர்ணயிக்கும் மூளையின் இன்னொரு பகுதிக்கு ரத்த ஓட்டம் குறைவாகச் செல்லும். ஆக, காதல் என்பது அறிவியல் அடிப்படையிலானதே. அறிவியலின் கூற்றுப் படி அதுவும் ஒரு போதையே. அது ஆக்கம்/அழிவு எதையும் நிகழ்த்தும். காதலுக்குக் கண்ணில்லை என்பது அறிவியல்பூர்வமாகவும் உண்மையே. தோல்வியிலிருந்து மீள்வதும் அறிவியல் அடிப்படையிலானதே!

அறிவியல் அடிப்படையிலானது!

காதல் என்பதே அறிவியல் அடிப்படையி லானது எனப்படும்போது காதல் தோல்வியில் மீள்வதற்கும் அறிவியல் அடிப்படை உண்டு. காதல் தோல்வியின் பாதிப்பு பெரும் துன்பம்தான். இல்லை என்று சொல்லவில்லை. இதில் ஏற்படும் மனச்சோர்வு எளிதில் விளக்க முடியாதது. எந்தப் பொருளை/இடத்தைப் பார்த்தாலும் எந்தச் சூழலுக்கு ஆளானாலும் அதனைத் தனது துணையுடன் இருந்த பொழுதை ஒப்பிட்டு, புண்ணைக் கீறிக் கீறி, துன்பவியல் சம்பவங்களில் சுகம் காண்பார்கள். இந்த நினைவலைகளின் பேரிரைச்சலிலிருந்து தப்பிக்க, தன்னை மறக்க மதுவைக் கையில் எடுக்கிறார்கள். அப்போது சிறு மூளைக்கும் பெரு மூளைக்குமான தொடர்பு துண்டிக்கப்படுவதால் லேசான ஓர் அமைதி கிடைக்கும். ஆனால், அதுவும் அமைதி அல்ல. அந்த போதை இறங்கியவுடன் ஏற்கெனவே இருந்த கவலை மேலும் அதிகரிக்குமே ஒழிய குறையாது.

ஆனால், காலம்தான் சிறந்த மருத்துவர். அந்த இளைஞர் சொன்னதுபோல ஒருவர் காதல் தோல்வியில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கும்போது அங்கு ஒரு முன்னாள் காதலன்/காதலியாக மட்டுமே இருக்கிறார். அங்கே அவர் ஒரு மகள்/ மகன்/ சகோதரி/ சகோதரன் என்கிற பாத்திரத்தைப் போட்டு உடைத்துவிடுகிறார். மிக, மிக முக்கியமாக சமூகக் கடமையை, பொறுப்புணர்ச்சியை நசுக்குகிறார்கள். இன்று உங்களுக்கு அதிசயமாகத் தெரியும் அந்த இழந்த காதல், ஓரிரு ஆண்டுகளில் அற்பமாகத் தெரியும். இது உளவியல் உண்மை. காதலின் தோல்வியை மதுவிடம் திருப்பாமல், வெற்றி, புகழ், பணம் உள்ளிட்டவற்றில் திருப்புங்கள். இதனை உளவியலில் ‘Sex transmutation of energy’ என்போம். சக்தியின் பண்டமாற்று. எனவே, காதல் தோல்வி உட்பட எந்தத் தோல்விகளுக்குமே மது ஒரு மாற்று அல்ல!” என்றார்.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

மெல்லத் தமிழன் இனிகுடிநோய்காதல் தோல்விகுடி நோயாளிதோற்றத் தூண்டல்

You May Like

More From This Category

More From this Author