Last Updated : 23 Apr, 2017 10:27 AM

 

Published : 23 Apr 2017 10:27 AM
Last Updated : 23 Apr 2017 10:27 AM

மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியும் தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ அமைப்பதில் இழுபறி: பிரதமரிடம் வலியுறுத்துவாரா முதல்வர் பழனிசாமி?

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைவதில் ஆண்டுக்கணக் கில் இழுபறி நீடித்து வருகிறது. டெல்லி சென்றுள்ள தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி, இது குறித்து பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந் துள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை (அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) அமைப்பதற் கான இடங்களை தேர்வு செய்து தருமாறு கடந்த 2014-ம் ஆண்டு மாநில அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்தது. இதையடுத்து, அப் போதைய முதல்வர் ஜெயலலிதா, 5 இடங்களை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தார். இந்நிலையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப்பதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு 2015-16 நிதியாண் டில்தான் மத்திய அரசால் வெளி யிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து 2015 ஏப்ரல் 22 முதல் 25-ம் தேதி வரை மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா ளர் தலைமையிலான குழுவினர் தமிழகம் வந்து, அரசு பரிந்துரை செய்திருந்த 5 இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு பல மாதங்களாகியும் எய்ம்ஸ் மருத் துவமனைக்கான பணிகள் தொடங் கப்படவில்லை.

இதையடுத்து, 2016-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி பிரதமர் மோடிக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியும், புதிய முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்.27-ம் தேதி டெல்லியில் பிரதமரைச் சந்தித்தபோது, தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்க வில்லை.

இவ்வாறு பல ஆண்டுகளாக தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையுமா என்ற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது. எனவே, நிதி ஆயோக் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தாமதத்துக்கு யார் காரணம்?

தமிழக அரசின் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “நாடு முழுவதும் அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள பெருந்திட்டங்களை, சவால் முறை (challenge method) என்ற பிரிவின்கீழ் கொண்டுவந்து, அதுகுறித்து மத்திய அரசு மறு ஆய்வு செய்து வருகிறது. அதில் எய்ம்ஸ் மருத்துவமனையும் அடங்கும். எனவே, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய பரிந்துரைத்துள்ள இடங்கள், அங்கு உள்ள வசதிகள் குறித்து விரிவான தகவல்களை அளிக்குமாறு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்தது. அவர்கள் கேட்ட விவரங்கள் அனைத்தும் ஒரு வாரத்துக்குள் மீண்டும் அனுப்பி வைக்கப்படும். இதன் அடிப்படையில், மிக விரைவில் மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x