Last Updated : 09 Apr, 2017 10:16 AM

 

Published : 09 Apr 2017 10:16 AM
Last Updated : 09 Apr 2017 10:16 AM

பொதுவிநியோகத் திட்ட இணையதளத்தில் ‘ஸ்மார்ட் கார்டில்’ பிழை ஏற்பட வாய்ப்பு: பயனாளிகள் புகார்

பொதுவிநியோகத் திட்டத்தை எளிமைப்படுத்தி போலிகளை நீக்க தமிழகத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1.89 கோடி குடும்பஅட்டைகளுக்கு ஆதார் விவரங்களின் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைகளில் ஆதார் எண் இணைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 60 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 50,000 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

ஆதார் விவரங்களின் அடிப்படையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், தொடக்கம் முதலே ஏராளமான பிரச்சினைகள் இருப்பதாக புகார்கள் நிலவி வருகின்றன. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணையதளத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அனைத்துத் தரப்பு மக்களாலும் இணையதள சேவையை பயன்படுத்த முடியுமா என்பது கேள்வியாக உள்ளது.

மேலும் திருத்தங்களை எளிமையாக மேற்கொள்ள முடியும் எனக் கூறப்படும் இணையதளத்திலும் பிறந்த ஆண்டைப் பதிவிடுவது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

கோவையைச் சேர்ந்த பயனாளி ஒருவர் கூறும்போது, ‘பொதுவிநியோகத் திட்ட இணையதளத்தில் பயனாளிகள் தனிக் கணக்கு தொடங்கவும், அதில் ரேஷன் தகவல்களை கையாளவும் முடியும். ஆனால் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைத் திருத்தும் பகுதியில் 1967-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் மட்டுமே பிறந்த தேதியை பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் வயதில் மூத்தவர்கள் பிறந்த ஆண்டு பதிவு செய்ய முடிவதில்லை.

இதை புகார்களுக்கான தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்க முயன்றோம். ஆனால் புகார்கள் பதிவு செய்யப்படுவதில்லை. ஸ்மார்ட் கார்டுகளில் பல பிழைகள் உள்ள நிலையில், அதைத் திருத்துவதற்கான வாய்ப்பான இணையதள சேவையிலும் பிரச்சினைகள் இருப்பது சிரமத்தை ஏற்படுத்துகிறது. குடும்ப அட்டையைப் போல ஸ்மார்ட் கார்டும் முக்கிய ஆவணமாக பயன்படும். எனவே இணையதள பிரச்சினைகளை விரைந்து சரி செய்ய வேண்டும்’ என்றார்.

இது குறித்து கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தியிடம் கேட்டபோது, ‘இணையதள சேவையில் தவறுதலாக இந்த தவறு ஏற்பட்டிருக்கலம். புகார்களைத் தெரிவிப்பதற்கான இலவச எண்ணில் இந்த புகாரைப் பதிவு செய்தால் தீர்வு கிடைக்கும். அதேசமயம், வழங்கல் துறை மூலமாக இந்த புகார் கவனத்தில் எடுத்து தெரிவிக்கிறோம்’ என்றார்.

பொதுவிநியோகத் திட்ட இணையதளத்தில் பிறந்த தேதியை பதிவிடும் பகுதியில் 1967-க்குப் பிறகு உள்ள ஆண்டுகள் மட்டுமே பட்டியலில் வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x