Published : 03 Dec 2013 09:19 AM
Last Updated : 03 Dec 2013 09:19 AM

சென்னையில் பலத்த மழை: ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை கனமழை பெய்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலை பலத்த மழை பெய்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குண்டும், குழியுமாக இருக்கும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

சிறிய தெருக்கள், சந்துகளில் சற்று உயர்த்தி சாலை போடப்பட்டுள்ளதால் வீடுகளின் முன் பகுதியில் மழைநீர் பெருமளவு தேங்கியுள்ளது.

ஏற்கெனவே தேங்கியிருந்த இடங்களில் மழைநீர் கழிவுநீராகிவிட்டது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பல தெருக்களில் பிற்பகலில்தான் மழைநீர் வடிந்தது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால், ஏரிகளுக்கு நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 6.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த ஏரிக்கு விநாடிக்கு 234 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியின் தற்போதைய நீர் இருப்பு 737 மில்லியன் கன அடி.

சோழவரம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 18.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. இந்த ஏரிக்கு விநாடிக்கு 35 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் தற்போதைய நீர் இருப்பு 173 மில்லியன் கன அடி.

புழல் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 18 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த ஏரிக்கு விநாடிக்கு 414 கன அடி தண்ணீர் வருகிறது. ஏரியின் இப்போதைய நீர் இருப்பு 1,878 மில்லியன் கன அடி.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த ஏரியின் தற்போதைய நீர் இருப்பு 951 மில்லியன் கன அடி.

இந்த 4 ஏரிகளின் மொத்தகொள்ளளவு 11,057 மில்லியன் கன அடி. தற்போதைய நீர் இருப்பு 3,739 மில்லியன் கன அடி. கடந்த ஆண்டு இதேநாளில் 4210 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x