Published : 27 May 2015 08:01 AM
Last Updated : 27 May 2015 08:01 AM

தமிழக பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றமில்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்புக்கு பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களும் ஜூன் 1-ம் தேதி திறக்கப் படும் என ஏற்கெனவே அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்படி, மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகளை அரசுப் பள்ளிகள் தொடங்கிவிட்டன.

தற்போது பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தற் காலிக மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தும் பணிகளும் அரசுப் பள்ளிகளில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் மட்டு மின்றி நாட்டின் பல பகுதிகளிலும் வெயில் கடுமையாக உயர்ந்து வரு கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் ஆந்திரம், தெலங்கானா மற்றும் வட மாநிலங்கள் சிலவற்றில் 500-க்கும் மேற்பட்டோர் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடும் வெயில் காரணமாக பள்ளி கள் திறப்பை ஜூன் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்து புதுச்சேரி அரசு உத்தர விட்டுள்ளது. அண்டை மாநிலமான தமிழகத்தில் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகளின் திறப்பு தேதியை ஒத்திவைக்க வேண்டும் என பெற்றோரும், ஆசிரி யர்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதாவிடம் கேட்டபோது, ‘‘ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் மாற்றம் இல்லை” என தெரிவித்தார்.

தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் தரப்பிலும், ‘‘பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பது தொடர்பாக எந்த கோரிக் கையும் வரவில்லை. ஜூன் 1-ம் தேதி அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப் படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து கூறும்போது, ‘‘வெயிலின் தாக்கம் வரும் நாட்களில் குறைந்து விடும். பள்ளி திறப்பை தள்ளிவைத் தால் மாணவர்கள் வெயிலில் சென்று விளையாடத்தான் செய்வார்கள். அதற்கு அவர்கள் வகுப்பறையில் இருப்பதே நல்லது. மேலும் மாணவர் களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் ஏற்கெனவே பள்ளிகளில் செய்யப்பட்டுள்ளன’’ என்றனர்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார், ‘‘தமிழகத்தில் வேலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரிக்கை விடுத்துள்ளோம்’’ என்றார்.

பள்ளிகளில் போதுமான வசதி இல்லை!

சென்னை

தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதில் மாற்ற மில்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில், பள்ளிகளில் போதுமான வசதிகள் இல்லை என பல் வேறு ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் கூறும்போது, ‘‘சிறு குழந்தைகளின் நலன் கருதி பள்ளி திறப்பை அரசு ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும். இன்றளவும் பல கி.மீ. தூரம் நடந்து பள்ளிகளுக்கு போகும் மாணவர்கள் உள்ளனர். அரசுப் பள்ளிகளில் மின்விசிறி மற்றும் காற்றோட்ட வசதி கிடையாது. வகுப்பறைகளும் போதுமான அளவு இருப்பதில்லை. கழிப்பறை, குடிநீர் போன்ற கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. இவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு உயர் நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலர் சத்தியமூர்த்தி, “கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இருந்தாலும், அவற்றை சுத்தப் படுத்தும் துப்புரவாளர்கள் கிடைப் பதில்லை. மாணவர்களைக் கொண்டு அவற்றை சுத்தப்படுத்த முடியாது என்பதால் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாமல் உள்ளன. பள்ளிகளில் காவலர்கள் இல்லாத தால் வெளியாட்கள் பள்ளிக்குள் நுழைந்து கழிப்பறையை பயன் படுத்துகின்றனர். இதை தடுக்கவும் முடியவில்லை” என்றார்.

தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுரேஷ் கூறும்போது, “அரசு பள்ளிகள் பலவற்றில் கழிப்பறை, குடிநீர், பரிசோதனைக் கூடம் போன்ற வசதிகள் மிகவும் குறைவு. பெண்கள் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாததால் அவர்கள் அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் மன உளைச்சலுடன் வந்து செல்கின்றனர். வகுப்பறைகளில் மின்விசிறி இல்லை; இருக்கை வசதி இல்லை; காற்றோட்டம் இல்லை; மின் விளக்கும் இல்லை” என்று கூறினார்.

முதல்வருடன் இன்று சந்திப்பு

அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டா) ஒருங்கிணைப்பாளர் இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் நிலவுகிறது. ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. மாணவர்களால் வெயிலின் தாக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாது. இதுபோன்ற நிலை 2013-ல் ஏற்பட்டபோது பள்ளிகளின் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கத்தை புரிந்துகொண்டு புதுச்சேரியைப் போல் தமிழக பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும். இதுகுறித்து நாளை (இன்று) தலைமைச் செயலகத்தில் முதல்வர் மற்றும் அரசுச் செயலரிடம் மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x