Published : 11 Mar 2014 11:46 AM
Last Updated : 11 Mar 2014 11:46 AM

முன்னறிவிப்பின்றி குடிநீர் எந்திரங்கள் அகற்றம்: ராமதாஸ் கண்டனம்

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 10 குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் அகற்றியுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 10 குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் அகற்றியுள்ளனர். பல இடங்களில் எந்திரங்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவும் மாவட்டங்களில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். இந்த மாவட்டங்களில் வாழும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதை அறிந்த அப்பகுதி மக்களும், பா.ம.க. நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் கொண்டு வந்து, அனுமதி பெற்று 10 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்களை அமைத்தனர்.

இதன்மூலம் இந்த இரு மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், அவற்றை தமிழக அரசு அதிகாரிகள் கடந்த இரு நாட்களுக்கு முன் அவசர, அவசரமாக அப்புறப்படுத்தியுள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த குடிநீர் எந்திரங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அவற்றை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். 10 இடங்களிலுமே தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே குடிநீர் எந்திரங்கள் அமைக்கப்பட்டு விட்டன.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்வது தொடரும் நிலையில், அடிப்படைத் தேவையான குடிநீர் வழங்க அமைக்கப்பட்ட எந்திரங்களை ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் அகற்றியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டால், தேர்தல்கள் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லாமல் போய்விடும். எனவே, தேர்தல் விதிகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி, மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. அகற்றப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை மீண்டும் அதே இடங்களில் அமைக்க ஆணையிடுவதுடன், இதற்கு காரணமான அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x