Published : 18 Apr 2017 08:21 AM
Last Updated : 18 Apr 2017 08:21 AM

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பாடத்தில் பெண்கள் உடல் அமைப்பு குறித்த கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பாடத்தில் பெண்களின் அழகு மற்றும் உடல் அமைப்பு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பில் உடல்நலம் மற்றும் உடற்கல்வி என்ற பாடம் சேர்க்கப் பட்டுள்ளது. இதில் ‘உடற்கூறும், விளையாட்டும்’ என்ற பகுதியில் பெண்களின் உடல் வடிவமைப்பு விவரிக்கப்பட்டுள்ளது. அதில், ‘36-24-36’ அளவு கொண்டவர்கள்தான் அழகிய உடல் வடிவம் கொண்ட வர்கள் என்றும், ‘V’ வடிவம் கொண்டவர்கள் அழகான ஆண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர்கள் கூறியுள்ளதாவது:

* தொடக்கக் கல்வி முன்னாள் துணை இயக்குநர் சிவா.தமிழ்மணி: உடல் அமைப்புக்கும் அழகுக்கும் சம்பந்தம் இல்லை. அழகு என்பது அவரவர் பார்வையைப் பொருத்தது. நபருக்கு நபர் பார்வை மாறுபடும். குறிப்பிட்ட உடல் அமைப்பு கொண்ட பெண்கள்தான் அழகானவர்கள், வெற்றியாளர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், படிக்கும் மாணவர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் தேவையற்றவை. உடற்கல்வி, உடல் ஆரோக்கியம் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள எத்தனையோ நல்ல விஷயங்கள் உள்ளன.

* பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு: ஆண் - பெண் சமத்துவம் பற்றி பேசி வரும் இன்றைய காலகட்டத்தில் பெண்களின் உடல் அமைப்பு, அழகு குறித்து கூறுவது சரியல்ல. குறிப்பிட்ட உடல் அமைப்பு மட்டும்தான் அழகு என்று எப்படிச் சொல்லமுடியும்? இது பெண்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பிட்ட உடல் அமைப்பை அழகுக்கு எவ்வாறு அளவுகோலாக வைக்க முடியும்? உடற்கல்வி, உடல் ஆரோக்கியம் பேணுவது குறித்து பொதுவான, அவசியமான கருத்துகளை சொல்வதை விட்டுவிட்டு பெண்களின் அழகு குறித்து பாடப்புத்தகத்தில் விவரிப்பது மாணவர்களுக்கு தேவையில்லாத விஷயம்.

* கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜ கோபாலன்: தமிழகத்தில் பாடநூல் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களைத்தான் பயன்படுத்த முடியும். இதுபோன்ற நடைமுறை சிபிஎஸ்இ-யில் இல்லை. அதுவே குளறுபடிக்கு காரணம். தனியார் பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தால்தான் பிரச்சினை உருவாகியுள்ளது. பாடநூல் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நடைமுறையை சிபிஎஸ்இ கொண்டுவந்தால் இதுபோன்ற சர்ச்சைகள் உருவாகாது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x