Published : 15 May 2017 09:02 PM
Last Updated : 15 May 2017 09:02 PM

அதிமுக அரசு ஊழல் குற்றச்சாட்டுகளால் மத்திய அரசிடம் ஒடுங்கி இருக்கிறது: ஸ்டாலின்

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கோட்டைக்கு வந்து கோப்புகளை ஆய்வு செய்து இருப்பது, அதிமுக அரசு ஊழல் குற்றச்சாட்டுகளால் மத்திய அரசிடம் அஞ்சி நடுங்கி ஒடுங்கிய நிலையில் இருப்பதை வெளிப்படுத்துகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட அகரம் பகுதியில் அமைந்துள்ள தாந்தோணியம்மன் கோயில் குளத்தை தூர்வாரி, சீரமைக்கும் பணிகளை ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:

''தமிழகம் தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், மழை பொய்த்து போன நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பிற தொகுதிகளில் உள்ள மாவட்ட திமுக நிர்வாகிகள், திமுக தோழர்கள் ஆகியோரிடம், குறிப்பாக, கோயில்களுக்கு சொந்தமாகவும், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அரசு துறைகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய குளங்கள் மற்றும் குட்டைகளை உடனடியாக தூர் வாரும் பணியில் ஈடுபட்டு, மழை வரும்போது அதனை சேகரிக்கக்கூடிய வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே நான் தெளிவாக தெரிவித்து இருக்கிறேன்.

அந்தப் பணியை சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் நான் முதலில் தொடங்கி, அதேபோல என்னுடைய கொளத்தூர் தொகுதியில் மேற்கொண்டு, இப்போது தமிழகத்தின் பல பகுதிகளில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் எங்கெங்கு நடக்கிறதோ, அங்கெல்லாம் நானே நேரடியாக வந்து பார்வையிடப் போகிறேன் என்று திமுக் தோழர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தெரிவித்து இருக்கிறேன். விரைவில் அதனை மேற்கொள்ளவிருக்கிறேன்.

பல இடங்களில் நீர் நிலைகளில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. எனவே, இதில் அரசு தனி கவனம் செலுத்தி, ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த வேண்டும். அதேபோல, திமுக சார்பில் இப்படிப்பட்ட பணிகள் மேற்கொள்ளும்போது, அரசின் ஒத்துழைப்பும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை. எனவே, குளம், குட்டைகள் தூர்வார அவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பின்னணியில் திமுக இருந்து, போராட்டத்தை தூண்டி விடுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருக்கிறார். போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்க்காத நிலையில் இந்த ஆட்சி இருக்கின்ற காரணத்தால், அமைச்சர் இப்படி சொல்லியிருப்பார் என்று நான் கருதுகிறேன்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். அரசியலுக்கு வருவதும், வராததும் அவருடைய விருப்பம். எனவே, இதுகுறித்து தனிப்பட்ட முறையில் நான் கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை.

நடிகர் ரஜினிகாந்தை பாஜக பயன்படுத்த முயற்சிப்பதாக ஒரு கருத்து பரவியுள்ள நிலையில் இன்று தமிழிசை ரஜினியின் கருத்தை வரவேற்று இருக்கிறார். அவர் மட்டுமல்ல, நானும் அதை வரவேற்கிறேன்.

மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மெட்ரோ ரயில் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு வந்தபோது தமிழக அரசின் கோப்புகளை ஆய்வு செய்ததாக செய்திகள் வந்திருக்கிறது. ஏற்கெனவே நான் தெரிவித்திருந்தபடி, இந்த ஆட்சி ஸ்திரமற்ற ஆட்சியாக, பலவீனமான ஆட்சியாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்றைக்கு மத்திய அமைச்சரே கோட்டைக்குச் சென்று, கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தியிருப்பதாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. இந்த ஆட்சி எந்தளவுக்கு பலவீனமாகவும், மத்திய அரசுக்கு அஞ்சி, நடுங்கி, ஒடுங்கி இருக்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

வருமான வரித்துறையிடம் கிடைத்த ஆவணங்களின் படி 89 கோடி ரூபாய் வழங்கிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் நாங்கள் மனு அளித்தோம். அந்த மனு மீது ஆளுநர் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம், மத்திய அரசு அச்சுறுத்தி இரு அணியாக உடைக்கவும், பிறகு இரு அணிகளை சேர்க்கவும் எந்தளவுக்கு முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது'' என்று ஸ்டாலின் கூறினார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x