Published : 20 Jun 2016 09:02 AM
Last Updated : 20 Jun 2016 09:02 AM

ஆளுநர் உரை மீது பேரவையில் இன்று விவாதம்

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு 15-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 16-ம் தேதி ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் தொடங்கியது. மறுநாள் மறைந்த எம்எல்ஏக்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவையின் அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு சட்டப் பேரவை மீண்டும் கூடுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப் பட்டு, அதன் மீதான விவாதம் தொடங்கும். பிரதான எதிர்க் கட்சியான திமுக உறுப்பினர், விவாதத்தை தொடங்கிவைத்து பேசுவார். தொடர்ந்து 2 நாட்கள் ஆளுநர் உரை மீது விவாதம் நடக்கும். 23-ம் தேதி விவாதத் துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசுகிறார்.

கருணாநிதி வருவாரா?

திமுக தலைவர் கருணாநிதி, சக்கர நாற்காலியில் வந்து செல்லும் வகையில் பேரவை யில் இருக்கை வசதி செய்து தரவேண்டும் என பேரவைத் தலைவர் பி.தனபாலிடம் திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இருக்கை வசதி செய்து தரப்பட்டால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கருணாநிதி பங்கேற்பார் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கருணா நிதிக்கு இருக்கை வசதி செய்து தருவது, ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேச தினமும் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு அளிப்பது, முதல்வர் பதிலளிக்கும் நாளில் எதிர்க் கட்சித் தலைவருக்கு பேச வாய்ப்பு, 89 எம்எல்ஏக்கள் இருப்பதால் திமுகவுக்கு விசாலமான அறை ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை பேரவைத் தலைவர் ஏற்காவிட் டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த பேரவை முன்னவரும், நிதி அமைச்சரு மான ஓ.பன்னீர்செல்வம், ‘தங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை மறைப்பதற் காக பேரவைத் தலைவர் மீது ஸ்டாலின் பழிபோடுகிறார்’ என குற்றம்சாட்டினார். அதற்கு பதிலாக அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், ‘திமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் அதிமுகவின் முயற்சி பலிக்காது’ என தெரிவித்திருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் - மு.க.ஸ்டாலின் இடையே யான இந்த மோதல் சட்டப் பேரவையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நடப்பு கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x