Published : 21 Feb 2017 09:39 AM
Last Updated : 21 Feb 2017 09:39 AM

தாய்மொழி - மனித இனத்தின் ஆதி அடையாளம்!

1998 ஜூன் 9. கனடா நாட்டில் வசித்து வந்த வங்காளி ரஃபிகுல் இஸ்லாம், ஐநா மன்றத்தின் அப்போதைய பொதுச் செயலாளராக இருந்த கோஃபி அன்னானுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதன் விளைவாக வந்ததுதான், ‘பிப்.21-ம் தேதி-சர்வதேச தாய்மொழி தினம்’ என்ற அறிவிப்பு.

ரஃபிகுல் எழுதிய கடிதத்துக்கும் ஒரு பின்னணி உண்டு. 1952 பிப்.21-ல்தான் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்) மாணவர் போராட்டம் வெடித்தது. பாகிஸ்தானின் தேசிய மொழியாக ‘வங்காளி' இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்த மாணவர்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. பல இளைஞர்கள் அங்கேயே கொல்லப்பட்டனர். பாகிஸ்தான்-வங்கதேசம் என இரு நாடுகள் சண்டையிட்டுப் பிரிய மொழியே முக்கிய காரணமாக அமைந்தது.

உலகில் தற்போது, குறைந்தது 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பேசுவதாக, சுமார் 140 மொழிகள் புழக்கத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், உலகின் பல பாகங்களிலும் வலுவான ஆதிக்க மொழிகளால், பல சிறு மொழிகள் வழக்கொழிந்து வருகின்றன.

பண்பாட்டின் மையப்புள்ளி

மனித இனத்தின் அறிவுப் பரிணாம வளர்ச்சி, மொழியை அடிப்படையாகக் கொண்டே ஏற்பட்டது. ஓர் இனத்தின் பண் பாட்டுக் கூறுகளில் மொழியே மையப் புள்ளியாக விளங்குகிறது. அதனைச் சுற்றித்தான், இனத் துக்கே உரித்தான பண்டைத் தொழில்களும் பாரம்பரியக் கலைகளும் வளர்ந்தன. ஆதலால், எந்த ஒரு மொழியின் வீழ்ச்சியும் மனித குலத்துக்கு நல்லதல்ல. முதன்முதலில் 2008-ம் ஆண்டு, ‘சர்வதேச தாய்மொழி தினம்', யுனெஸ் கோவால் கொண்டாடப்பட்டது.

“நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்க, மேம்படுத்த, மொழிகளே மிக வலிமை வாய்ந்த சாதனங்கள். தாய்மொழி கற்பித்தலை மேம்படுத்தும் எல்லா முயற்சிகளும், உலகம் முழுவதும் மொழி சார்ந்த கலாச்சார விழிப்புணர்வை மேம்படுத்தும்; புரிதல், சகிப்புத்தன்மை மற்றும் ஒற்றுமையை ஈர்க்கச் செய்யும்” என்கிறது இதற்கான ஐ.நா. மன்ற இணையத்தின் முகப்பு. ‘எல்லா மொழிகளுக்கும் சம அளவு முக்கியத்துவம்; எல்லா மொழிகளுக்கும் சமமான பணிச் சூழல்' என்பதையும் இந்த தினம் வலியுறுத்துகிறது.

வேறு எப்போதையும் விட இப்போது இந்த ‘தினம்' மிக அதிகம் தேவைப்படுவதாக உலக மக்கள் கருதுகிறார்கள். காரணம்...? ஆங்கிலம். இன்று 150 கோடி பேருக்கு மேல் ஆங்கிலம் பேசுவதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் இத்தொகை, 200 கோடியை விஞ்சும் என்றும் சொல்லப்படுகிறது. கணினி மற்றும் இணையங்களின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, ஆங்கிலத்தின் ஆதிக்கமும் அதிகரிக்கும். கல்வி, வணிகம், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பிற மொழிகள், தத்தமது இடத்தை முற்றிலுமாக இழக்க நேரிடலாம்.

இந்நிலையில்தான் ‘பியூ ஆராய்ச்சி மையம்', அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 14 நாடுகளில் ஒரு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. எல்லா நாடுகளிலுமே, 70%-க்கு மேல், தங்களின் மொழியைத்தான் தங்களின் தேசிய அடையாளமாக வும் சொல்லி இருக்கிறார்கள். சமயம், சமூகப் பழக்க வழக்கங்கள் ஆகியன பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

வாழ்வின் அங்கம்

இந்த ஆய்வு நமக்கு சொல்லும் செய்திதான் மிக முக்கியமானது. ‘ஏன் எப்போதும் தமிழ், தமிழ்.. என்று கூவுகிறீர்கள்..? அது ஒரு மொழி அவ்வளவுதான். பிற நாடுகளில், குறிப்பாக மேலை நாடுகளில் எல்லாம் இந்த பேதைமை இல்லை..' என்று சொல்பவர்களின் கூற்று பொய்யாகி இருக்கிறது. எல்லா நாடுகளிலும் எல்லா மக்களும் மொழியை வாழ்வின் முக்கிய அங்கமாகவே கருதுகின்றனர்.

நன்கு வளர்ந்த நாடுகளிலும் கூட, மொழி ஒரு முக்கிய அடையாளமாகப் பார்க்கப்படுகி றது. பதற்றம் நிறைந்ததாக உலகம் மாறி வருகிறபோது, மொழி, இசை, விளையாட்டுதான் அதனைத் தணிக்கிற மாமருந்தாக இருக்க முடியும்.

வழக்கொழிந்து வரும் சிறு மொழிகளைப் பாதுகாப்பதில், கணினிகள், இணையங்கள் மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. இலக்கியப் படைப்புகள், எழுத்து கள், சொற்கள், உச்சரிப்பு... எல்லாம் தாண்டி, ஒவ்வொரு மொழிக் குமே ஆன உடல் அசைவு, முக உணர்ச்சிகள் ஆகியன கூட இணை யங்களில் பாதுகாக்கப்படுகின்றன.

பொதுமை பெறும் மொழிகள்

ஆங்கிலம் உள்ளிட்ட எல்லா மொழிகளுமே, தங்களது தனித்தன் மையை இழந்து வருகின்றன; ஒரு ‘பொதுமை' வெளிப்பட்டுக் கொண்டு வருகிறது. ‘இணைய மொழி', ‘கைப்பேசி மொழி' என்று வெவ்வேறு பெயர்களில், முற்றிலும் புதிய, ‘கலப்பு மொழி' வெகு வேகமாகப் பரவி வருகிறது.

இதன்மூலம், ஆங்கிலத்துக்கும் மிகப் பெரிய ஆபத்து ஏற்படலாம். வட்டார உள்ளூர் மொழிகளும் பேச்சு வழக்கு சொற்களும்தான் உடனடி ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன. அதிலும் ஆங்கிலக் கலப்பு, பல சொற்களைக் ‘காவு' கொண்டு வருவது மிகவும் கவலை தரக் கூடியது.

என்னதான் ஆங்கிலத்தில் படித்து எழுதிப் பேசினாலும், ‘சலசல'க்கும் ஊற்று; ‘சடசட'க்கும் காற்று; ‘பட..பட' என்று பொழியும் மழை; ‘தட..தட' என்று ஓடும் நதி என இயற்கை, தாய்மொழியில்தான் நம்மை வருடுகிறது. ஆத்திர அவசரத்துக்கு பிற மொழி, கை கொடுக்கலாம். மற்றபடி, உயிரோடு உணர்வோடு ஒன்றி வராது. அதற்கு வேண்டியது..? தாய்மொழிதான்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x