Last Updated : 02 Nov, 2014 07:01 PM

 

Published : 02 Nov 2014 07:01 PM
Last Updated : 02 Nov 2014 07:01 PM

ஐவர் தூக்கு விவகாரம்: முதல்வரை சந்திக்க ராமேசுவரம் மீனவர்கள் முடிவு

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதற்காக, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திங்கள்கிழமை ராமேசுவரம் மீனவர்கள் சந்திக்கின்றனர்.

போதைப்பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ராமேசுவரத்தைச் சேர்ந்த எமர்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், வில்சன் ஆகியோருக்கு கடந்த வியாழக்கிழமை இலங்கை உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

இந்தத் தீர்ப்பை தொடர்ந்து ராமேசுவரத்தில் பேருந்துக்கு தீவைப்பு, ரயில் தண்டவாளங்கள் சேதம், சாலை மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

தமிழக அரசின் தரப்பில் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா ஆகியோர், மீனவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிமொழி கொடுத்தன் அடிப்படையில் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.

மேலும், வெள்ளிக்கிழமையிலிருந்து தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கினர். இப்பிரச்சினையில் பிரதமர் நரேந்திர மோடி மீனவர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் சனிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, மீனவர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யவும், மீனவர்களை மீட்டு தாயகம் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா தலைமையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் ராமேசுவரம் மீனவப் பிரநிதிகள் நாளை (திங்கட்கிழமை) சந்திக்கின்றனர்.

யாழ்பாணத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்

இதனிடையே, போதைப்பொருள் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர், யாழ்பாணம் மீனவர்கள் 3 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

நீதி முறையிலான கடைசி மரண தண்டனை இலங்கையில் 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டால் அதிகப்பட்சமாக 25 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வழங்குவது வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், போதைப் பொருட்கள் கடத்தியதற்காக தூக்குத் தண்டனை வழங்குவது இலங்கையில் இதுவே முதல்முறை.

முன்னதாக இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 424 சிறைக்கைதிகள் உள்ளனர். இலங்கை அரசியலமைப்பின் 34(1) பிரிவின்படி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கு இலஙகை அதிபருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாண மீனவர்கள் 3 பேர் மற்றும் தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் கருணை காட்டுமாறு இலங்கை அதிபர் ராஜபக்சவிற்கு வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் யாழ்பாண மீனவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x