Published : 11 Aug 2016 08:10 AM
Last Updated : 11 Aug 2016 08:10 AM

வங்கிப் பணம் கொள்ளை வழக்கு: ‘சிசிடிவி’ இல்லாததால் விசாரணையில் சிக்கல் - ரயில்வே எஸ்பி ஆனி விஜயா தகவல்

ஈரோடு மற்றும் சேலம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) இல்லாததால் கடந்த 8-ம் தேதி சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் வங்கிப் பணம் கொள்ளை போன சம்பவத்தில் உடனடியாக துப்பு கிடைக்கவில்லை என திருச்சி மண்டல ரயில்வே போலீஸ் எஸ்பி ஆனி விஜயா தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார், திருச்சி மண்டல ரயில்வே போலீஸ் எஸ்பி ஆனி விஜயா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் பணப்பெட்டிகள் ஏற்றப்பட்ட இடம், ரயில் நின்றிருந்த யார்டு மற்றும் ரயில்வே நடைமேடை ஆகியவற்றை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து நேற்று எஸ்பி ஆனி விஜயா, நிருபர்களிடம் கூறியதாவது:

ஓடும் ரயிலில் மேற்கூரையை வெட்டி எடுத்து, பெட்டியில் உள்ள பணத்தை எடுக்க வாய்ப்பு இல்லை. ரயில் நிற்கும்போது, முன்கூட்டியே மேற்கூரை தகட்டை கட்டிங் செய்து, வெறுமனே ஒட்டவைத்து, பின்னர் ரயில் ஓடும்போது பணத்தை எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது.

ரயிலின் மேற்கூரை தகரம் 3 மி.மீ. தடிமன் கொண்டது. இது கச்சிதமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே இன்ஜினீயரிங் தொழில்நுட்பம் அறிந்த ஒருவரின் உதவியுடன்தான் மேற்கூரை வெட்டி எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

பணத்தை எடுத்துச் செல்வதற்காக ரயில் பெட்டி ஈரோட்டில் இருந்து சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு 8-ம் தேதி காலை 6.30 மணிக்கு வந்தது. காலை 10 மணி முதல் மதியம் 3.30 மணி வரை பணப்பெட்டிகள் ரயிலில் ஏற்றப்பட்டன. பின்னர் இந்த பெட்டி எழும்பூர் ரயிலில் இணைக்கப்பட்டது.

ஈரோட்டில் ரயில் பெட்டி நின்றிருந்தபோது, அங்கு மேற்கூரை வெட்டி எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. சேலத்திலும் பணம் நிரப்பப்பட்ட ரயில் பெட்டி சிறிது நேரம் நின்றுள்ளது. எனினும், சேலத்தில் ரயில்வே நடைமேடை இருப்பதால் இங்கு ரயிலின் மேற்கூரை மீது ஏறி, தகரத்தை வெட்டி எடுத்திருக்க வாய்ப்பு குறைவு.

சேலம், ஈரோடு ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா இருந்திருந்தால், இந்த கொள்ளையில் துப்பு கிடைக்க வாய்ப்பு இருந்திருக்கும். சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை மின்சார ரயில்பாதை கிடையாது. மேலும், ஆத்தூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் வழியில் முகாசாபாரூர் என்ற இடம் அருகே 10 கிமீ தூரத்துக்கு ரயில் மெதுவாக செல்லும். அந்த இடத்தில் கொள்ளையர்கள் பணத்துடன் தப்பிச் சென்றிருக்க வாய்ப்பு உள்ளது.

இந்த அடிப்படையில் ஆத்தூர்- விருத்தாசலம் இடையே கொள்ளை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தமிழகத்தில் இது போன்ற கொள்ளை நடந்திருப்பது இதுவே முதல்முறை. ரயிலின் மேற்கூரை மீது அமர்ந்து பயணம் செய்வது வட மாநிலங்களில் வழக்கத்தில் உள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு உதவியாக ரயில்வே போலீஸார், சேலம் மாநகர போலீஸாரும் இணைந்து கொள்ளையர்களை தேடி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x