Published : 08 Feb 2017 08:11 AM
Last Updated : 08 Feb 2017 08:11 AM

முதல்வர் அலுவலக சிறப்பு பணி அதிகாரியும் பதவி விலகல்

அரசு ஆலோசகர், முதல்வர் செயலரை தொடர்ந்து முதல்வர் அலுவலக சிறப்பு பணி அதிகாரியான சாந்தா ஷீலா நாயரும் பதவி விலகியுள்ளார்.

தமிழக அரசின் ஆலோசகராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப் பட்டவர் ஷீலா பாலகிருஷ்ணன். முதல்வரின் செயலர் நிலை-1 ஆக இருந்தவர் வெங்கட ரமணன். இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் பதவி விலகினர். இதையடுத்து, முதல்வரின் செயலர் நிலை -3 ஆக இருந்த ராமலிங்கமும் செயலர் பதவியில் இருந்து விலகியதுடன், விடுப்பில் சென்றுவிட்டார்.

இந்நிலையில், அரசு திட்டங்களை செயல்படுத் துவதற்காக ஜெயலலிதாவால், முதல்வர் அலுவலக தனி அதிகாரியாக நியமிக்கப்பட்ட சாந்தா ஷீலா நாயரும் தற்போது பதவி விலகியுள்ளார். இதற்கான கடிதத்தை அரசிடம் நேற்று முன்தினம் சமர்ப்பித்துள்ளார்.

கடந்த 1973-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான சாந்தா ஷீலா நாயர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவர், கடந்த 2010-ம் ஆண்டு, கனிமவளத்துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து, 2011-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும், மாநில திட்டக்குழு துணைத் தலைவராக நியமிக்கப் பட்டார். அவரது பதவிக்காலம் கடந்தாண்டு மே மாதத்துடன் நிறைவு பெற்ற நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போது, முதல்வர் அலுவலக தனிப்பிரிவு அதிகாரியாக கடந்த ஜூன் 8-ம் தேதி சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தற்போது தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தை மாற்றிவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராகவும் சாந்தா ஷீலா நாயர் செயல்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x