Published : 12 Jun 2017 08:28 AM
Last Updated : 12 Jun 2017 08:28 AM

சசிகலா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் போயஸ் தோட்ட வீடு: நினைவு இல்லமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப்படாத நிலையில், அந்த வீடு சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தீபாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டம் பகுதியில் உள்ள ‘வேதா இல்லம்’ தற்போது தீபா வருகையால் சர்ச்சையில் சிக்கியுள் ளது. கடந்தாண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்தார். அதன்பின்னரும், அவரது தோழி சசிகலா அந்த வீட்டில்தான் இருந் தார். தொடர்ந்து, அவரை கட்சியி னரும் போயஸ் தோட்ட வீட்டில் சந்தித்தனர். அவரை பொதுச் செயலா ளராக்கும் முயற்சியில், தினசரி கட்சியினர் நேரில் சந்தித்து வலியுறுத்தியதும் அங்குதான். அப்போது அவருடன் சசிகலாவின் உறவினர் இளவரசி, அவரது மகன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உள்ளிட்டோர் இருந்தனர். அவ்வப்போது டிடிவி. தினகரன் மட்டும் வந்து செல்வார்.

இந்நிலையில்தான், பிப்ரவரி 14-ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோர் மீதான சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, மறுநாள் 15-ம் தேதி பெங்களூருவுக்கு சசிகலா புறப் பட்டுச் சென்றார். அன்றுவரை சசிகலா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலர் போயஸ் தோட்ட இல்லத்தில்தான் இருந்தனர். சிறைக்குச் செல்லும் முன் டிடிவி.தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப் பட்டதால், அவர் சில தினங்கள் வந்து சென்றுள்ளார். தினகரனுக்கும் தீபக்குக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தீபக் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன்பின் இருவருமே ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வரவில்லை என அங்கு பணியில் உள்ள போலீஸார் தெரிவிக்கின்றனர்.

ஜெயலலிதா இருந்தவரை அவருக்கு சமையல் செய்து கொடுத்த ராஜம் அம்மாள், சில பெண்கள், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றிய சிலர் மட்டும் வந்து செல்கின்றனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பாதுகாவலர்கள் தொடர்ந்து ‘ஷிப்ட்’ அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

வீட்டின் பராமரிப்பை ஏற்கெனவே வேதா இல்லத்தில் பணியாற்றியவர்களே கவனித்துக் கொள்கின்றனர். வீட்டின் நிர்வாகம், கட்டுப்பாடு முழுவதும் தற்போது வரை சசிகலா குடும்பத்தினரிடமே உள்ளது. வேதா இல்லத்தின் அருகில் ஜெயா டிவி அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் இளவரசியின் மகன் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் சசிகலா தலைமையை எதிர்த்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்படத் தொடங்கியதும், ‘ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும்’ என்றார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் வாரிசுகள் இருப்பதால் அதில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது.

இதற்கிடையில், சமீபத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் பட்டியலிடப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய, உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, பறிமுதல் செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட் டுள்ளது. இதில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லம் இணைக்கப்படவில்லை. எனவே அரசும் கையகப்படுத்தவில்லை.

ஆனால், சட்டப்படியான ரத்த தொடர்புள்ள வாரிசோ, வாரிசாக நியமிக்கப்பட்டவரோ இருக்கும் பட்சத்தில், போயஸ் தோட்ட இல்லத்தை உரிய தொகை கொடுத்து அவர்களிடம் பெற்று அதன்பின் அரசு நினைவு இல்லமாக மாற்ற வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிக பாதுகாப்பு ஏன்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்தபோது, அந்த வீட்டுக்கு 200-க்கும் மேற்பட்ட போலீஸார், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், உளவுத்துறையினர் பாதுகாப்புக்கு இருந்தனர். ஜெயலலிதா மறைவுக்குப்பின், சசிகலா இருந்தவரை அதே அளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. சசிகலாவும் சிறைக்குச் சென்றபின், எதற்காக இவ்வளவு பாதுகாப்பு என்ற கேள்விகள் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்ட நிலையில், பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸார் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதற்கு பதில் போயஸ் தோட்ட இல்ல பாதுகாப்பு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வேதா இல்லத்துக்கு வெளியில் ‘ஷிப்ட்’ அடிப்படையில் 25 போலீஸார் மட்டும் பணியாற்றி வருகின்றனர். தற்போது எதற்காக இந்த பாதுகாப்பு? பத்திரிகையாளர்களை தடுக்க இவ்வளவு போலீசார் குவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி அப்பகுதி பொதுமக்களால் எழுப்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x